”ஆமா நான் தான் இப்ப என்ன அதுக்கு” – பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் அரசு ஊழியர் !
”நீ எந்த ரிப்போர்ட்டர்? எந்த ஊரு? உன் பெயர் என்ன?” என்று கேட்டு பதிலை வாங்கி கொண்டவர் ”சரி வை பார்த்துக் கொள்கிறேன்” என்று மிரட்டும் தொனியில் அழைப்பை துண்டித்தார்.
”ஆமா நான் தான் இப்ப என்ன அதுக்கு” – பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் அரசு ஊழியர் !
பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அரசு ஊழியர் தேர்தல் பரப்புரை !
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய திருவண்ணாமலை மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் வழக்கறிஞர் அசுவத்தாமன் போட்டியிடுகிறார் இவருக்கு ஆதரவாக புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருந்தாளுனர் தர்மன் அவர்கள் வேலையை விட்டுவிட்டு பிஜேபிக்கு ஆதரவாக தோளில் துண்டு போட்டுக்கொண்டு (படத்தில் கண்ணாடி அணிந்திருப்பவர்) ஓட்டு கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் திமுகவினர்.
அரசு ஊழியர்கள் தேர்தல் நடத்தை விதி என்ன சொல்கிறது?
அரசாங்கத்தின் விதி 23 (i)ன் வரம்பைக் கையாளும் அமைச்சக அலுவலக குறிப்பாணை எண். 25/44/49-Ests.(A) படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் ( விதி 5) எந்த ஒரு அரசு ஊழியரும் இந்தியாவில் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் பங்கேற்கவோ, உதவியாகவோ, அல்லது எந்த விதத்திலும் உதவவோ கூடாது.
அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு ஜனவரி 13, 1971 தேதியிட்ட இந்திய தேர்தல் ஆணையக் கடிதம் எண். 62/71 இலிருந்து தேர்தல்கள் தொடர்பாக அரசு ஊழியர்களின் நடத்தைக்கான வழிகாட்டுதல்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவுகள் 129 மற்றும் 134, தேர்தல்கள் தொடர்பாக அனைத்து அரசு ஊழியர்களும் கடுமையான பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென , சுருக்கமாகச் சொன்னால், தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறப் போவதில்லை என்று மக்கள் நினைக்கும் சந்தர்ப்பம் ஏதும் வராமல் இருக்க, அவர்களின் பாரபட்சமற்ற தன்மை குறித்து பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஒரு அரசு ஊழியர் எந்தவொரு தேர்தல் பிரச்சாரத்திலும் அல்லது பிரச்சாரத்திலும் பங்கேற்கக்கூடாது, மேலும் அவர் தனது பெயரையோ, உத்தியோகபூர்வ பதவியையோ அல்லது அதிகாரத்தையோ ஒரு குழுவிற்கு மற்றவர்களுக்கு எதிராக உதவாமல் கவனமாக இருக்க வேண்டும். என்கிறது அரசியல் சாசனம்.
இப்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சரியா என்கிற கேள்வியை திமுக தரப்பில் இருந்து கேட்கப்படுகிறது. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட பால் கூட்டுறவு பெருந்தலைவரும் திருப்பத்தூர் திமுக நகர கழக செயலாளருமான திரு எஸ் .ராஜேந்திரன் கூறுகையில் புகார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் ஒருவேளை பாஜக வேட்பாளர் அசுவத்தாமன் வெற்றி பெற்றால், இந்த காரணத்தை வைத்தே அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும் , இந்திராகாந்தி பிரதரமாக இருந்த போது 1974ல் நடைபெற்ற பாராளுமன்ற பொது தேர்தல் போட்டியின் போது அவரது உதவியாளராக இருந்த அரசு ஊழியர் இந்திராகாந்திக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது வெற்றியை ரத்து செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். என்கிறார் வழக்கறிஞர் இராம அசோகன்.
அரசு ஊழியர்கள், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று பணியாற்றி வெளிவருகின்றனர். வந்த பின்பும் அரசு ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். ஊழியர்களாக இருந்தபோதும், பணிநிறைவுக்குப் பின்னும், எல்லார்க்கும் – எல்லாக் கட்சியினருக்கும், பொதுவாக இருக்க வேண்டியதுதான் அவர்களுக்குரிய தருமம். ஒரு கட்சியில் சேர்வது என்பது, இன்னொரு பகுதியினருக்கு வெறுப்பைத் தோற்றுவிக்கும். அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்றபின் ஓர் ஆண்டு அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற கருத்து மிகச் சரியே. அதுகூடபோதாது; அதனை மூன்று ஆண்டுகள் என்றுகூட ஆக்கலாம். என்கிறார் சமூக ஆர்வலரும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினருமான குரிசிலாப்பட்டு சண்முகம்.
இந்த புகார் குறித்து மாவட்ட மருத்துவ சுகாதாரத்துறை (PHC) அலுவலர் சித்ரசேனா அவர்களை தொடர்பு கொண்டோம். முதலில் எனக்கு அந்த வீடியோ அனுப்புங்கள் பின்னர் நானே அழைத்து பேசுகிறேன் என்றவர் ஆதாரத்தை அனுப்பி பல முறை தொடர்பு கொண்டோம் அழைப்பை எடுக்கவே இல்லை.
பாஜக துண்டோடு பிரச்சாரத்தில் ஈடுபட்ட புதுப்பேட்டை அரசு சுகாதார நிலைய மருந்தாளுனர் தர்மனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ”ஆமா நான் தான் இப்ப என்ன அதுக்கு யார் புகார் சொன்னது?” என்றவர், ”ஆளும் கட்சியினர்” என்றோம் பட்டென்று அழைப்பை துண்டித்து, மீண்டும் அழைத்த தர்மன், ”நீ எந்த ரிப்போர்ட்டர்? எந்த ஊரு? உன் பெயர் என்ன?” என்று கேட்டு பதிலை வாங்கி கொண்டவர் ”சரி வை பார்த்துக் கொள்கிறேன்” என்று மிரட்டும் தொனியில் அழைப்பை துண்டித்தார்.
மணிகண்டன்.