“மனிதர்” என்ற சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்தார் காட்டூர் மாரிமுத்து !
நீங்கா நினைவுகளை விட்டுச் சென்ற மாரிமுத்து என்ற மனிதர் ! மாரிமுத்து. பெயரை போலவே எளிமையான அந்த காலத்து மனிதர். எவரிடத்தும் அதிர்ந்து பேசாதவர். இனி எப்போதும் எவரிடமும் அவர் பேசப்போவதுமில்லை. 15.08.2024 நேற்று வரை ஓடியாடி வேலை செய்த மாரிமுத்து இன்று ஓரிடத்தில் நிலையாய் துயில் கண்டு விட்டார்.
மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாய் சொன்னவர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் கூட “இனி நிரந்தரமாய் மூச்சை நிறுத்திக்கொள்ளப் போகிறேன்” என்று சொல்லாமலே விடைபெற்று சென்றுவிட்டார்.
காலை ஆறு மணி வாக்கில் மாரிமுத்து இறந்து போனார் என்ற அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்தது. அடுத்த அதிர்ச்சி அவரது வயது 84 என்பதை அறிந்தபோது ஏற்பட்டது.
சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாய் எப்போது பார்த்தேனோ, அப்போது பார்த்த அதே சரீரம் தான் இப்போதும். சாவதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை, அப்போது நான் பார்த்ததைப்போலவே எப்போதும் இங்குமங்கும் ஓடியாடும் மாரிமுத்துவாகத்தான் இருந்திருக்கிறார். அவரை பொறுத்தமட்டில் 84 என்பது ஒரு எண். அவ்வளவே!
சாகும் வரை கடும் உழைப்பாளியாய் வாழ்ந்து மறைந்தார் என்பதால் மட்டுமல்ல; “மனிதர்” என்ற சொல்லுக்கு இலக்கணமாய் அவர் திகழ்ந்தார் என்பதாலும் தான்.
மனிதம் என்பதே அற்றுப்போய் அப்பட்டமான சுயநலமே மனித இயல்பாக மாறிப்போன காலத்தில் மாரிமுத்து தனித்து தெரிகிறார். மனிதம் நிறைந்த மனிதர் அவர். நான்கு நல் முத்துக்களை மகன்களாக கொண்ட மாரிமுத்துவின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை பல நேரங்களில் “ வானத்தைப் போல “ திரைப்படக் காட்சிகளை நினைவுபடுத்தும்.
நான்கில் ஒரு முத்து திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளர். கருப்பு சட்டையில் இருந்து பின்னர் சிகப்பு சட்டையை நிரந்தரமாக்கிக் கொண்டவர். இன்றும் கருப்பு கோட்டுடன் மக்கள் வழக்கறிஞராக வலம் வருகிறார் கடைசி முத்து. மற்ற இரண்டும் கருப்பு – சிகப்பு அரசியலின் ஆதரவாளர்கள்.
ஒருவர் முரட்டுத்தனமான நாத்திகம் பேசுவார். இன்னொருவர் புரட்சி வர்க்கம் என்று பேசுவார். மற்ற இருவரும் எங்கள் தலைவர் இரண்டும் பேசியவர்தான் என்பார்கள். அவரவர் விரும்பிய அரசியல் வழி பின்பற்றவும் கொண்ட அரசியலை பகிரங்கமாக பிரச்சாரம் செய்யவும் மாரிமுத்து என்றைக்குமே தடை சொன்னதில்லை. சிகப்பு நூல்களை கரைத்துக் குடித்தவர்களிடத்தும் காணாத அந்த தன்னியல்பான ஜனநாயக மாண்பு மாரிமுத்துவின் தனித்த அடையாளங்களுள் ஒன்று.
மாரிமுத்துவின் கடைக்குட்டி மகன் தான் அவரது தலைமுறையின் முதல் பட்டதாரி. கல்லூரிக்கு படிக்க போன இடத்தில், போராட்டம் செய்ததற்காக மகன் ஜெயிலுக்கு போன போது கலங்கித் தான் போயிருந்தார் மாரிமுத்து. “அவன் ஒன்னும் திருடல. பொய் சொல்லலை. கொலை பன்னிட்டு ஒன்னும் ஜெயிலுக்கு போகல. எல்லாம் தோழருங்க பார்த்துப்பாங்க. சும்மா கெடயா” னு கமலத்தின் அதட்டல்தான் அவரை அமைதி கொள்ள வைத்தது.
“செல்லமா வளர்த்த புள்ள… எவனும் மேல கீழ கைய வைக்க மாட்டானுங்களே” என்பதுதான் மாரிமுத்து வின் கவலையாக இருந்தது.
மற்றபடி, “இதுக்காக போராட்டம் செஞ்சோம். உங்க மகன் உள்ளிட்டு இத்தனை பேர் கைதாகி இருக்காங்க. இத்தனை நாள்ல வந்துடுவாங்க”னு தகவல் சொல்ல எந்த தோழரும் அந்த வீட்டிற்கு தைரியமாகப் போகலாம். தகவல் சொல்லி விட்டு வயிராற சாப்பிட்டும் வரலாம்.
மாரிமுத்துவின் அதிகபட்ச எதிர்ப்பு, “உங்களுக்கே நல்லா இருக்கா? என்னமோ பன்னுங்க. நான் சொன்னா கேக்கவா போறீங்க? “ என்பதான முணுமுணுப்பாகவே இருக்கும். வழக்கம் போல, கமலத்தின் அதட்டல்தான் அவரை சாந்தமாக்கும். அதற்கும் விரைப்பான ஒரு முறைப்பை எதிர்வினையாக தந்துவிட்டு கடந்து போவார்.
அன்று சிறைக்கெல்லாம் சென்று படிப்பை முடிக்க முடியுமா என்ற வினாவோடு இருந்த கடைக்குட்டி சிவசங்கர் என்கிற சங்கர் இப்போது வழக்கறிஞர். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் நிர்வாகி. வழக்கு நடத்தி பிழைப்பு நடத்தும் நோக்கமின்றி, மக்கள் நலன் சார்ந்த வழக்கறிஞராக இன்றளவும் இயங்கி வருபவர்.
அவர் அவ்வாறு இயங்குவதற்கான ஆதாரம் மாரிமுத்து. திக சின்னத்துரை என்ற அடையாளத்தை விட, மகஇக சங்கர் வீடு என்பதுதான் அந்த வீட்டின் அடையாளமாக மாறியது.
சங்கர் வீட்டில் எப்போதும் ஒரு குண்டான் சோறு தண்ணீரில் மூழ்கி கிடக்கும். தோழருங்க வந்தா சாப்பிட இருக்கனும்னு ஒரு படி சோறு எப்போதும் சேர்த்து பொங்குவது வழக்கம். இரவு 11 வரை பார்த்து விட்டு தான் சோற்றில் தண்ணீர் ஊற்றுவார்கள். (திருச்சி – திருவெறும்பூர்) காட்டூரை கடந்து செல்லும் தோழர்கள் யாராக இருந்தாலும் சங்கர் வீட்டை எட்டிப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.
விருந்தினர் போல ஒருவர் இருவராக இல்லாமல், ஒரு பத்து பதினைந்து பேர் நாள் முழுதும் தங்கியிருந்து சங்கம் தொடர்பான பொதுக்குழு செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் மண்டபமாகவும் மாறியிருக்கும் சங்கரின் வீடு. ஆணோ, பெண்ணோ “வா யா” “வா சாமி” என வாஞ்சையாய் கமலமும் மாரிமுத்துவும் விளிப்பதே பேரானந்தமாயிருக்கும்.
இரவு தங்க நேரிடும் நாட்களில், இனிப்பு அப்பத்தோடும் சற்றே சூடு ஆறிய டீயோடும்தான் எழுப்புவார். ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அந்த டீயை பார்சல் வாங்கி வந்திருப்பார் மாரிமுத்து.
அவர் முகத்தில் பெரிய அளவில் புன்னகையெல்லாம் பார்த்தது இல்லை. வாய் விட்டு சிரித்து பார்த்ததேயில்லை. அதுபோலவே, அவர் கோபப்பட்டும் பார்த்ததில்லை. அதிகபட்சம் முறைப்பதும், ஊமையாய் பேசாமல் கடந்து போவதும் தான் அவரது கோபத்தின் வெளிப்பாடுகள். மருமகள்களோடு பிணக்கு என்றாலும் பேரப்பிள்ளைகளிடத்து அதனைக் கடத்தாதவர். பேரப்பிள்ளைகள் அனைவரிடத்தும் பேரன்பு காட்டியவர் மாரிமுத்து.
காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரையில் ஓயாமல் ஓடியாடி ஏதேனும் ஒரு வேலை செய்து கொண்டே தான் இருப்பார். அவரிடம் எப்போது பேசினாலும், ஏதேனும் ஒரு உதாரணத்தையோ பழமொழி ஒன்றையோ எடுத்து சொல்லி அதுபோல இருக்கிறது என்பதாக பேசுவதே கதை கேட்கும் ஆவலை தூண்டும்.
போராட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என அமைப்பு நிகழ்ச்சிகளில் மொத்தக் குடும்பமும் கலந்து கொள்ளும். அவர்கள் திரும்பும் வரையில், தனி ஒரு ஆளாக இருந்து வீட்டையும் மாட்டையும் பார்த்து கொள்வார் மாரிமுத்து. அவரும் அவ்வப்போது வந்து வேடிக்கை பார்க்கவும் செய்வார்.
“எல்லாம் நல்லவங்க தான். என்ன பிழைக்க தெரியாதவங்க” என்பதுதான் தோழர்கள் பற்றிய அவரது மதிப்பீடு. கட்சி, போராட்டம்னு என் புள்ள வாழ்க்கையை கெடுக்குறீங்கனு ஒரு நாளும் எந்த தோழரிடமும் அவர் சண்டைக்கு போனதில்லை. வீட்டிற்கு வரும் தோழர்களை அவமதித்து திருப்பி அனுப்பியதில்லை.
தோழர்கள் எல்லோரும் அவர்களை அப்பா – அம்மா என்றே அழைப்பார்கள். பெற்றெடுத்த அப்பா – அம்மாவிற்கு அடுத்து, உரிமையோடு அம்மா என்று அழைத்தது கமலத்தை. அப்பா என்றது மாரிமுத்துவை. அந்த பாசாங்கு இல்லாத பரிபூரண உணர்வு அவர்கள் இருவரிடத்திலும் நிறைந்து வழியும்.
அவர்கள் இருவரையும் அப்பா – அம்மா என்று அழைத்தது சரிபாதியாகத்தான் இருக்கும். மறு பாதி கமலம் மாரிமுத்து தான். அந்த உரிமையையும் அவர்களிடத்தில் எதிர் பார்க்கலாம்.
மாரிமுத்து ஒன்றும் மாமனிதர் இல்லை. சூது வாது வஞ்சனை இல்லாமல், சுற்றத்தாரிடம் அன்பு காட்டி அனைவரையும் அரவணைக்கத் தெரிந்த நல்ல மனிதர். ஆடம்பரமில்லா எளிய மனிதர்.
“நீ எங்கே போயிருக்கனு தெரியும். நா சீக்கிரமே உனை பார்க்க வந்துருவேன்யா”னு கமலம் கதறி அழுத போது காதல் காவியங்கள் அத்தனையும் தோற்றுப் போயிருந்தன.
சென்று வாருங்கள் மாரிமுத்து. உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம். உங்கள் நீங்கா நினைவுகளை சுமந்தபடி!
இளங்கதிர்.
சிறப்பு. ஒரு எளிய விவசாயி வாழ்க்கை பற்றிய அனுபவம் அதை வெளிப்படுத்திய கட்டுரை சிறப்பு.
நன்றி சார்