சமையல் குறிப்பு: பச்சை பட்டாணி வடை
வணக்கம், சமையலறை தோழிகளே!இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ரெசிபி பச்சை பட்டாணி வடை தாங்க. ஈவினிங் டைம்ல டீ கூட சூடா வடை, பஜ்ஜி சாப்பிடுற தோழிகள், நண்பர்கள், பெரியவர்கள் ஏராளம் அவங்களுக்கு தகுந்த மாதிரி வெறும் பருப்புல மட்டுமே வடை சுடாம வித விதமான பருப்புல இனி வடை செஞ்சு அசத்தலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:-
ஊறவைத்த பச்சை பட்டாணி 250 கிராம், ஊறவைத்த கடலைப்பருப்பு நான்கு ஸ்பூன், கடலை மாவு ஒரு கப், பெரிய வெங்காயம் நறுக்கியது ஒரு கப், பச்சை மிளகாய் ஐந்து நறுக்கியது, சோம்பு 2 ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், பூண்டு ஆறு பற்கள், கருவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கியது சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் பொறிக்க தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு.
செய்முறை:-
ஊற வைத்த பட்டாணி பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றும், இரண்டுமாக சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம் ஊற வைத்த கடலைப்பருப்பு, நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், சோம்பு, சீரகம் கடலை மாவு, பெருங்காயம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். மீண்டும் ஒரு கடாயில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். எண்ணெய் காய்ந்ததும் கலக்கிய பருப்பு கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வடை பதத்தில் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான பச்சை பட்டாணி வடை தயார். தனியாக சுவைக்கும் தேநீருக்கு துணையான ஒரு தின்பண்டம் தயார். டீயுடன் சுவைத்து மகிழுங்கள்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.