தமிழகத்தில் வலுவாக கால்தடம் பதிக்கும் அமுல் நிறுவனம் – எம்.டி அமித் வியாஸ் !
“ஐஸ்க்ரீம், பட்டர், நெய், தயிர், சாக்லெட்டை தொடர்ந்து தமிழகத்தில் பால் விற்பனை!” – அமுல் பால் நிறுவன எம்.டி பேட்டி
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ – 2025, திருச்சி மாநகரில் உள்ள கலையரங்கம் அரங்கில் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாபெரும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை சத்யம் அக்ரோ கிளினிக் மற்றும் அமுல் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
இந்நிலையில், குஜராத்தில் இருக்கும் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் நிறுவனத்தின் எம்.டி அமித் வியாஸ் இந்த வேளாண் கண்காட்சியில் கலந்துகொண்டு அரங்குகளை பார்வையிடடார். அதன்பிறகு, அமுல் நிறுவன அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“இதுபோன்ற கண்காட்சியை நான் இங்கு தான் முதல் முறையாக பார்க்கிறேன். அமுல் நிறுவனம் கடந்த 1946 – ம் ஆண்டில் இருந்து விவசாயிகளின் கூட்டுறவு முயற்சியில் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, அமுல் நிறுவனம் கடந்த 4 வருடங்களாக ஆர்கானிக் உரம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.
வரும் காலங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் எங்களது விவசாய உரம் மற்றும் அதுசார்ந்த பொருட்களை விற்பனை செய்ய உள்ளோம். தற்போது, குஜராத் மாநிலத்தில் மட்டுமே விற்பனை செய்து வந்தோம். எங்களது விற்பனையை விரிவுபடுத்தி உள்ளோம்” என்றார்.
அவரிடம், “தமிழகத்தில் அமுல் பால் மற்றும் பால் சம்பந்தபட்ட பொருட்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அமுல் நிறுவனப் பால் பொருட்கள் தமிழகத்தில் ஏற்கனவே உள்ளது.
ஐஸ்கிரீம், பட்டர், சீஸ், சாக்லேட் போன்றவை நாடு முழுவதும் உள்ளது. தற்போது, அமெரிக்காவில் எங்களது கிளை நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். விரைவில் ஸ்பெயின் நாட்டிலும் எங்களது பிராண்ட் அமுல் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் அமுல் நிறுவன பால் வழங்குவதை பொறுத்தவரை, நாங்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் புதிதாக ஒரு கிளை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். சித்தூரில் இருந்து பெங்களூருக்கு பால் சப்ளை செய்யப்படும். விரைவில் தமிழகத்திற்கும் விரிவுப்படுத்தப்படும்.
தற்போது சென்னையில் அமுல் தயிர் கிடைக்கின்றது. மெதுவாகவும், வலுவாகவும் நாங்கள் தமிழகத்தில் கால் பதிப்போம். அமுல் கூட்டுறவு நிறுவனம் விவசாயிகளிடமிருந்து எவ்வளவு பணத்தை பெறுகிறோமோ அது திரும்ப அவர்களுக்கு கிடைக்கும் வகையிலேயே எங்கள் நிறுவனம் செயல்படுகிறது” என்றார்.