அரசுக்கு ஆதரவு தெரிவிக்காததால்தான் மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் ! சொல்கிறார், எச்.ராஜா !
இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்தே தவிர அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்பதாக, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேசியிருக்கிறார்.
மதுரை ஆதீனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை கண்டித்து பாஜ சார்பில் மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்.

அப்போது, “திமுக அரசு இந்து மக்களுக்கும், இந்து மடாதிபதிகளுக்கும் எதிராகவே செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்காத காரணத்தினால் மதுரை ஆதீனத்திற்கு தொடர்ந்து இந்த அரசு மிரட்டல் விடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் மதுரை ஆதீனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகும். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே போலீசார் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? விசாரணை முடிந்த பிறகு ஆதீனம் முழு ஒத்துழைப்பு அளித்தார் என்று கூறி சென்ற போலீஸ் அதிகாரிகள், சென்னை சென்றவுடன் அரசின் நிர்ப்பந்தத்தால் ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவிக்கிறார்கள்.
திமுக அரசின் இந்த செயல் ஆதீனங்கள் மீது ஒரு மன ரீதியான தாக்குதலை ஏற்படுத்த நினைக்கிறது. இது வன்மையாக கண்டிக்க தக்க செயல். பாதிரியார் மோகன் லாசரஸ் இந்து கோவில்கள் சாத்தான்களின் கூடாரம் என விமர்சித்தார். அவர் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததா? முதல்வர் ஸ்டாலின் இந்து விரோத சக்தியாக செயல்படுகிறார்.
டாஸ்மாக் ஊழல் விவகாரம் அமலாக்கத்துறை பிடியில் உள்ளதால், அதிர்ந்து போய் என்ன செய்வது என தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் நடுக்கத்தில் உள்ளார். அதை மறைப்பதற்காகவே, இந்துக்கள் மீதும் இந்து மடாதிபதிகள் மீதும் ஒரு தாக்குதலை நடத்த துவங்கி உள்ளார்.
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்த அரசு அனுமதி மறுத்தது. ஐகோர்ட்டில் அனுமதி பெற்ற பிறகும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையும் தாண்டி முருக பக்தர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. இதை திமுக அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி அளித்த நீதித்துறை மீது இந்த அரசு கோபத்தில் உள்ளது. அரசின் இச்செயல் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். 2023 ஜனவரியில் ராமஜென்ம பூமி பிரதிஷ்டை நடந்த போது தமிழகத்தில் எந்த கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தக்கூடாது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கக்கூடாது என உத்தரவிட்டது இந்த அரசு.
இதற்கு என்ன அர்த்தம்? திமுக தலைவர் ஸ்டாலின் உடல் ஆரோக்கியம் குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்தே தவிர, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என முதலில் கேட்டது பாஜதான். இந்த வழக்கில் திமுகவை சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளனர்.” என்பதாக பேசினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்