பெண் பணியாளருக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர் கைது ! ஆசிரியரை விடுவிக்க கோரி மாணவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் !
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் பூனைகுட்டைப் பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுப்ரமணி என்பவர் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 14 ந்தேதி மாலை பள்ளி நேரம் முடிந்த நிலையிலும் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவரிடம் ஆனந்தி உதட்டில் தலைமையாசிரியர் முத்தம் கொடுத்ததாகக்கூறி ஆனந்தி இந்த சம்பவத்தை தங்களது உறவினர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியின் உறவினர்கள் கடந்த 15-ம் தேதி , பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த
ஜோலார்பேட்டை போலீசார் , வட்டாரக் கல்வி அலுவலர் அசோக் குமார் , குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியானதால், அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தலைமையாசிரியர் சுப்பிரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் கைதை கண்டித்து 18 ந்தேதி காலை , பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்று கூடி “தலைமையாசிரியர் சுப்ரமணி இது போன்ற தவறை செய்திருக்க மாட்டார். இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும்; தலைமை ஆசிரியர் சுப்ரமணியத்தை விடுவிக்க வேண்டும்”
என்றும் பள்ளியின் கேட்டைப் பூட்டி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் சுப்ரமணி கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நல்ல மனிதர். எங்கள் பள்ளியை தரம் உயர்த்தி உள்ளார். சுப்ரமணி தான் ஆனந்திக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலே வாங்கி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கூறப்பட்ட நிலையில், அதனை பேசி தீர்க்க முயற்ச்சித்தோம்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் எழுதியதில் தனக்கு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆனந்தி முன்வைத்ததாக கூறப்படுகிறது. உன்மையிலேயே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர் அந்த புகாரில், தனக்கு இலவச வீடு கேட்க வேண்டிய அவசியம் எதனால் வந்தது? ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா சார்?” என கேள்வி எழுப்புகிறார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஒருவர்.

எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று அறிய முடியாது என்ற பழமொழி போல், எவர் ஒருவர் பற்றியும் நம்மால் நற்சான்றிதழ் வழங்கி விட முடியாது. அதேசமயம், மாணவர்களுக்கும் பள்ளிக்கும் நல்லது செய்தார் என்பதற்காக, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டை புறந்தள்ளி விடவும் முடியாது.
— மணிகண்டன்