வெளிநாட்டு முதலீட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்தர வேலை!
தன் மகனுக்கு கிடைத்திருக்கும் வேலைக்கான பணி ஆணையைப் பார்த்த அந்தப் பெற்றோர், பரவசத்தில் கண் கலங்கினர். “கும்புட்ட சாமி உன்னை கைவிடல” என்றார் அப்பா. “படிச்ச படிப்பு உன்னை கரை சேர்த்திருக்கு” என்றார் அம்மா. சாமி படத்தைக் கும்பிட்டுவிட்டு, பெற்றவர்களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்ற அந்த மகன் படித்தது, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில். அவருக்கு வேலை கிடைத்திருப்பது பன்னாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட் (Vinfast)மின் வாகன உற்பத்தி ஆலையில். அதுவும் சொந்த ஊரான தூத்துக்குடியிலேயே! இதுதான் திராவிட மாடல்.
வெளிநாட்டு முதலீட்டுக்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழிற்சாலைகளாக உருவெடுப்பதுடன், அந்தத் தொழிற்சாலை எந்தப் பகுதியில் அமைகிறதோ, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இயன்ற அளவு வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் இலக்கு. வின்ஃபாஸ்ட் நிறுவனம் 16ஆயிரம் கோடி முதலீட்டில், தூத்துக்குடி மாவட்ட சிப்காட்டில் 406 ஏக்கர் பரப்பளவில் தன் கட்டமைப்பைத் தொடங்கியபோது, உள்ளூர்க்காரர்களுக்கு வேலைவாய்ப்பு என்கிற முதலமைச்சரின் இலக்கை வலியுறுத்தினார் தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா.
“எங்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்கள் தேவை. அவர்கள் எப்படி உள்ளூரிலேயே கிடைப்பார்கள்? பிற மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் தகுதியானவர்களைத் தேட வேண்டுமே?” என்று வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்தபோது, அவர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “இது தமிழ்நாடு. இங்கே தொழில்நுட்பம் அறிந்த இன்ஜினியர் பட்டதாரிகள், பட்டயப் பொறியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உங்கள் நிறுவனத்தில் என்ன வேலைக்குத் தேவையோ அதற்கேற்ப பயிற்சியளித்தால் போதும். உள்ளூரிலேயே உங்களுக்கான ஆட்கள் கிடைப்பார்கள்” என்று உறுதியாக சொன்னார்.
“சரி.. ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், ட்ரிபிள் ஈ, லாஜிஸ்டிக்ஸ் இவற்றில் டிப்ளமோ படிப்பவர்கள் தேவை. ஆனால், அரியர்ஸ் வைக்காதவர்களாக இருக்கவேண்டும். சமீபத்தில் டிப்ளமோ முடித்தவர்களாகவும் இருக்கலாம்” என்று தெரிவித்தது நிறுவனம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட 9 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 344 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதலமைச்சரின் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்.
ஒன்றரை மாதப் பயிற்சியில் மின் வாகனம் குறித்த பாடங்கள், கலந்தாலோசனைகள், மாதிரித் தேர்வுகள் உள்ளிட்டவை இடம்பெற்றன. இதனையடுத்து, வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடைபெற்றது. 344 பேரில் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 200 பேரில் 105 பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள். 95 பேர் தனியார் பாலிடெக்னிக்குகளை சேர்ந்தவர்கள்.
வெளிநாட்டு முதலீடு என்பது இலட்சம் கோடிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல. அது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், அடுத்த தலைமுறையின் முனனேற்றத்திற்குமான புதிய-அகலமான வாசல். அந்த வாசலைத் திறந்து வைத்து, உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்தர வேலைகளை உருவாக்கித் தருகிறது முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
அடுத்த 5 ஆண்டுகளில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 3,500 வேலைவாய்பபுகளை உருவாக்க இருக்கிறது. இனி, கல்லூரி-பாலிடெக்னிக் படிக்கும் மாணவமணிகள் உள்ள வீடுகளில், அவரவர் பெற்றோர் தாங்கள் நம்பும் சாமியை வேண்டிக் கொள்வார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் வகையில், நான் முதல்வன் திட்டமும், அதில் கொடுக்கப்படும் திறன்மேம்பாட்டுப் பயிற்சியும் இளைஞர்களுக்கான பணி ஆணைகளைத் தரும்.