துட்டு இருந்தால்தான் டிரான்ஸ்பர் … பகீர் குற்றச்சாட்டை கிளப்பும் நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் !
நெடுஞ்சாலைத்துறையில் பண செல்வாக்கு உள்ள பொறியாளர்களுக்கு மட்டுமே பணி மாறுதல் வழங்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர் சங்கத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலர் மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கையில், “நெடுஞ்சாலைத்துறையில் பண செல்வாக்கு உள்ள பொறியாளர்கள் மட்டுமே பணி மாறுதல் பெற்று வருகிறார்கள். பொதுவாக அரசு துறையில் A, B நிலையில் உள்ள அலுவலர்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஒரு இடத்தில் பணியாற்ற வேண்டும். எனவே, ஆண்டுதோறும் பொதுமாறுதல் வழங்கப்பட வேண்டும். பல துறைகளில் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 2018-இல் கடைசியாக பொது மாறுதல் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, கோவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் பொது மாறுதல் வழங்கப்படவில்லை. அதன் பிறகு பொது மாறுதல் 2021-க்கு பிறகு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் / உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் ஆகியோர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால், பொது மாறுதல் வழங்கப்படாமல் ஒரே இடத்தில் 8 வருடங்களுக்கு மேலாக இருக்கும் நிலை பொறியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பண செல்வாக்கு படைத்தவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பணியிட மாறுதல் நினைத்த இடத்திற்கு வாங்கி விடுகிறார்கள். இந்த உத்தரவுகள் வெளிபடைதன்மை இல்லாமல் இருந்து வருகிறது.
இது சம்பந்தமாக தொடரப்படும் வழக்கிலும் நீதிமன்றத்துக்கும் தவறான தகவல்களை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. எனவே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சார்பாக தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், எதிர்கட்சி தலைவர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர்கள் பொது மாறுதல் வழங்க தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டுகோள் வைக்கிறோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசு விதிமுறைப்படி பொறியாளர்களுக்கு பணிமாறுதல் வழங்க தி.மு.க. கூட்டணிக்கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.” என்பதாக தெரிவித்திருக்கிறார்.
பசையுள்ள துறை என்பதாக பொதுவில் சொல்லப்படும் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொறியாளர்களின் புலம்பல் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.