சரித்திரப்பதிவேடு குற்றவாளிக்காக சவுண்டு விட்டு ஜெயிலுக்குப் போன ”இளைஞரணி செயலாளர்” !
பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்த காந்தி மகன் தனிக் என்பவர். இவர் ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தனிக் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்று இருப்பதால், அவரது நன்னடத்தை குறித்து அறிவதற்காக ஜெயமங்கலம் சார்பு ஆய்வாளர் முருகப்பெருமாள் சரித்திர பதிவேடு குற்றவாளியான தனிக்கை பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு விடம் விசாரணைக்காக அழைத்து வந்து ஆஜர் படுத்தியுள்ளார் .
தனிக்-யை விசாரணை செய்வதற்காக காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு விசாரணையை துவக்கிய போது, அவருடன் வந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் தங்கதுரை என்ற ஜிபி துரை தானும் அவருடன் விசாரணையில் பங்கேற்பேன் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு தனிக் என்பவரை மட்டும் தனியாக விசாரணை செய்ய வேண்டும் நீங்கள் விசாரணைக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்து அலுவலகத்திற்கு வெளியில் காத்திருக்குமாறு சொல்லியிருக்கிறார்.
இதனை ஏற்க மறுத்து, ஆத்திரமுற்ற ஜிபி.துரை காவல் ஆய்வாளர் அரங்கநாயகி உள்ளிட்ட காவல்துறையினரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி சரித்திர பதிவேடு குற்றவாளி தனிக் என்ற நபரை காவல்துறையினர் விசாரணை செய்யவிடாமல் ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
காவல்துறையினரை ஒருமையில் பேசுவதை நிறுத்தும்படி போலீசார் பலமுறை எச்சரித்தும், அதைக் கேட்காமல், ஜிபி.துரை காவல் துறையினரை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகள் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தள்ளுமுள்ளிலும் ஈடுபட்டு காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் காவல் ஆய்வாளர் அரங்கநாயகியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஜிபி.துரை மற்றும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தனிக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரை மிரட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஏற்கனவே ஜிபி.துரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .
— ஜெய்ஸ்ரீராம்.