ஓட்டல்கள்_மாற வேண்டும் !
இன்றைய காலத்தில் லாபகரமான தொழில் திட்டமிட்டு ஓட்டல் துவங்குவது என்றும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஓட்டல் துறை தான் கோலோச்சும் என்கிறது புள்ளி விபரங்கள்! ஆனால் அதை முற்றிலும் பொய்யாக்கும் அளவிற்கு தான் இப்போதைய ஓட்டல் நிர்வாகங்கள் நடந்து வருகின்றனவோ எனும் ஐயம் எழுகிறது!
நான் இங்கு சொல்ல வருவது சாதாரணமாக இயங்கி வருகின்ற ஒரே ஒரு ஓட்டலையோ, சிறு, குறு உணவகங்களையோ அல்ல! சரவணபவன், சங்கீதா, அன்னப்பூர்ணா, ஆனந்தாஸ் போன்ற கார்ப்பரேட் ஸ்டைல் செயின் ரெஸ்டாரெண்டுகளை! இவர்களின் நிர்வாகம், திட்டம், செயல் எல்லாம் மிகத் துல்லியமாக இருக்கும்!
இங்கே மார்க்கெட்டிங் உதாரணக் கதை ஒன்று! இங்கிலாந்தில் உணவுத் தயாரிப்பில் 60 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மக்கள் பெரிதும் விரும்பும் பிராண்ட் ஒன்று செல்லப் பிராணிகளுக்கான உணவுகளை தயாரிக்கப் போவதாக அறிவிக்கிறது! உலகிலேயே வீட்டில் நாய், பூனை வளர்ப்பு அதிமுள்ளது இங்கிலாந்தில் தான்!
மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ! அந்த தயாரிப்பு வெளி வரும் நாளை குணா கமல் போல பார்த்தவிழி பூத்திருக்க காத்து இருக்கின்றனர், அந்த நாளும் வந்தது! கடைகளில் கூட்டம் அலைமோதியது! தயாரித்து விற்பனைக்கு வந்த அரைமணி நேரத்தில் அனைத்தும் விற்று தீர்ந்துவிட மகிழ்கிறது நிறுவனம்!
தங்களது உற்பத்தி திறனை 2 மடங்காக்கி கடைகளுக்கு அனுப்ப அதுவும் அன்றே விற்று தீர்ந்து முன்பதிவும் நடக்கிறது! நிறுவனம் அடுத்து 3 ஷிப்டில் வேலை செய்து அதை மும்மடங்காக தயாரித்து அனுப்புகிறது! முதல் மாதம் முழுக்க டிமாண்ட்டில் விற்பனை! மறு மாதம் எல்லா கடைகளிலும் போதிய ஸ்டாக் வைத்தது நிறுவனம்!
வாரம் இரண்டாயிற்று நான்காயிற்று அந்த மாதமே முடிந்துவிட்டது எந்தக் கடையிலும் ஒரு பாக்கெட் கூட விற்கவில்லை! மக்கள் ஒருவரும் வாங்கவில்லை! என்ன நடந்தது? ஏனிந்த மாற்றம்? குழம்பிப் போன நிர்வாகம் கள ஆய்வு செய்கிறது! மக்களிடம் அந்த உணவு பற்றிய கேள்விகளை எழுப்பி ஆய்வு செய்கிறது!

உணவின் விலை, பேக் டிஸைன், கடைகளில் இருப்பு எதிலும் எந்தக் குறையோ குற்றமோ இல்லை! ஆனால் பிரச்சனை எங்கே தெரியுமா? நாய், பூனைக்கு அந்த உணவு பிடிக்கவில்லையாம்! இதன் பின்பு தான் யார் பயனாளர்களோ அவர்களுக்கு தயாரிப்பை தந்து பிறகு தயாரிக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது என்பார்கள்.
இதே தான் இன்றைய பெரு ஓட்டல் நிர்வாகங்களுக்கும்! அவர்கள் நிர்வாகம் திறன், செயல் திட்டம் எல்லாம் கார்ப்பரேட் லெவலில் இருந்தாலும் மக்களுக்கேற்ற சேவை இல்லை! சென்ட்ரல் கிச்சன் எனும் கான்செப்டை இவர்கள் முன் வைப்பார்கள்! இவர்களது எந்தக் கிளையில் போய் சாப்பிட்டாலும் ருசியும் தரமும் மாறாது!
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுதான் அதன் தாரக மந்திரம் என்பார்கள்! ஆனால் அது துளியும் உண்மையில்லை என்பதே வருத்தமான செய்தி! ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு ருசி! தங்க விலை போல அது ஒவ்வொரு நாளும் வேறுபடுகிறது என்பது மிகப் பெரிய குறையாகும்! இதை எந்த ஓட்டல் நிர்வாகமாவது சரி செய்து இருக்கிறார்களா?
மத்திய கிச்சனில் உப்பு பார்த்து ருசி பார்த்தால் மட்டும் போதாது! பிராஞ்சைஸ் கொடுக்கப்பட்ட கடைகளில் பொதுவாக இது ஏற்படும்! ஏன்னா பிராஞ்சைஸ் எடுப்பவர் பணம் சம்பாதிக்கத் தான் இதை எடுத்திருக்கிறார்! அவருக்கு அந்த ஓட்டல் குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றிய அக்கறை எள்ளளவும் கிடையாது!
“ மிகப்பெரிய பிரியாணி கடைகள் ” எனும் பிராண்ட் இன்று தேக்க நிலையில் இருக்க இதுவே காரணம் ! விறகடுப்பில், ஃபேன் கூட இல்லாத புழுக்கமான இடத்தில் ருசித்த பிரியாணி & தால்ஸாவின் ருசி இன்று.. அண்டார்டிக் போல குளிர் வீச, குஷன் சோபாவில் LED விளக்கொளியில் முற்றிலும் தொலைந்து போய்விட்டது!
உணவில் உப்பு அதிகம் என்றால் “அப்படிங்களா என்னான்னு பார்க்கிறேன்” எனும் பதிலை டெம்ப்ளேட்டாக வைத்துள்ளார்கள்! என் அப்பா காலத்தில் உப்பு கம்மின்னா பாம்பு கடித்தது போல பதறுவார்கள்! அந்தத் தவறுக்கு வருந்தி அந்த உணவை உடனே மாற்றித் தருவார்கள்! இன்றைக்கு இதெல்லாம் நடப்பதேயில்லை.
தோசை சூடாக இல்லை என்றால் இன்னிக்கு கூட்டமா இருக்கு அப்படித்தான் என்கிறார்கள்! அப்போ கேஷ் கவுண்ட்டரில் கூட்டமா இருந்துச்சுன்னு நாம பில் கொடுக்காம போகலாமா? இந்த உணவுக்கு அதிகமாகவே நாம் விலை தருகிறோம்! நமது தேவைக்கு உரிய உணவு தரவேண்டியது அவர்களின் கடமை!
இது நுகர்வோரின் உரிமை ! நாம் போனில் பேசிக் கொண்டே வந்த தோசையை சாப்பிடாது ஆறிப் போனால் நாம் பொறுப்பாகலாம் ! அவங்க தரும் போதே அது ஆறியிருப்பதை ஏற்கவே முடியாது! இவ்வளவு கூட்டத்தில் இதெல்லாம் பார்க்க முடியாது என்பவர்கள் இதை கார்ப்பரேட் ஸ்டைல் என்று எங்கும் சொல்லவே கூடாது!
அடுத்து கடைக்கு வந்து டேபிளுக்காக காத்திருப்பது ! இந்தக் கூட்டம் தான் உங்களது வணிக பலம்! நிறைய இடங்களில் இங்கு காத்திருக்க நேரமின்றி பலர் கிளம்பிவிடுகின்றனர்! தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் போல உள்ளே இடமில்லை (அ)15 நிமிடம் காத்து இருக்கணும் எனும் அறிவிப்பை கடைக்கு வெளியே வைக்கலாம்!
அது நிறைய மக்களின் நேர விரயத்தை மிச்சப்படுத்தும் ! டைம் மேனேஜ்மெண்ட் என்பது ஓட்டல் நிர்வாகத்தின் ரத்தம், மக்களுக்கு அது தக்காளி சட்னியல்ல என்பதை உணரவேண்டும் ! வீடு தேடி வந்து பீட்ஸா டெலிவரி தரும் நிறுவனங்கள் காலிங் பெல் அடித்து டெலிவரி தருவது குறிப்பிட்ட விநாடிகளுக்குள் நடக்கவேண்டும்.
என்பதை திட்டமிட்டு அதற்கு முறையான பயிற்சியை டெலிவரி பணியாட்களுக்குத் தருகிறது! அது போல உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்து சாப்பிடும் மேசைக்கு சூடாக உணவினை சர்வ் செய்யும் பயிற்சியளிக்க வேண்டும்! கூட்டம் அதிகம் போன்ற பொறுப்பற்ற பதில்களை தராமலிருக்க அறிவுறுத்த வேண்டும்!
முடிந்தால் ஓட்டல் பணியாளர்களுக்கு ஆண்டுக்கொரு முறை பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் வகுப்புகள் எடுப்பது சாலச் சிறந்தது ! என்ன தான் கார்ப்பரேட் லெவலில் நீங்கள் திட்டங்கள் வகுத்தாலும் ஓட்டலில் தரும் உணவு ருசியாக இல்லாவிட்டால் இங்கிலாந்து உணவு பிராண்டுக்கு ஏற்பட்ட கதி தான் நடக்கும்!
நம் ஓட்டலுக்கு காத்திருந்து சாப்பிட ஒரு கூட்டமே இருக்கிறது என்று கர்வம் கொள்ளாமல், அடுத்தகட்ட செயல் திட்டத்திற்கு தயாராகுங்கள்! பொது கிச்சனை விட்டுவிட்டு கிளைகளிலும் விசிட் அடியுங்கள்! மக்கள் கேட்பதை செய்யுங்கள்! தவறினால் உங்கள் வாசலில் காத்திருக்கும் கூட்டம் காணாமல் போகும் !
– வெங்கடேஷ் ஆறுமுகம்,
நடிகர் & இயக்குநர்.