தமிழ்நாட்டில் நல்லாசிரியர்களே இல்லையா ? புள்ளி விவரங்களால் போட்டுத் தாக்கிய ஐபெட்டோ அண்ணாமலை !
ஆண்டுதோறும் 378 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தநிலையில், தமிழகத்திலிருந்து மட்டும் சுமார் 25 பேருக்கும் குறையாத ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிரடியாக வெறும் இரண்டு ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்போவதாக மோடியின் ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் நிலையில், இந்த புதிரான நடவடிக்கைக்கு கடும் ஆட்சேபணை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், வா.அண்ணாமலை.
தமிழகத்திலிருந்து தேர்வான அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் என்பதால் என்னவோ, கடந்தகால புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துப்போட்டு அம்பலப்படுத்தியிருப்பதோடு, இது ”தமிழ்நாட்டு விரோதப் போக்கா? இரு மொழி விரோத போக்கா?” என்பதாக காட்டமான கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார், மூத்த ஆசிரியர் தொழிற்சங்கவாதியான வா.அண்ணாமலை.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”சுமார் 45 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இந்தியப் பெருநாட்டில் பாரதப் பிரதமராக மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு 378 ஆசிரியர்களை தேர்வு செய்து தேசிய நல்லாசிரியர் விருதினை அறிவித்து வந்தார்கள்.
ஆனால் 2025 ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 45 ஆசிரியர்களை மட்டுமே மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை தேர்வு செய்து அறிவித்துள்ளார்கள்.
இவர்கள் அனைவருக்கும் முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளான செப்டம்பர் -5 ஆம் தேதி டெல்லியில் இந்திய நாட்டின் குடியரசு தலைவர் அவர்களால் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. ரூபாய் 50,000 ரொக்கப் பரிசு, வெள்ளி பதக்கம், நற்சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழ்நாட்டின் சார்பில் இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்கள். வரவேற்று வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!
1.திருமதி ரேவதி பரமேஸ்வரன், முதல்வர் பி எஸ் சீனியர் செகண்டரி பள்ளி, மயிலாப்பூர், சென்னை. 34 ஆண்டு காலமாக கணித ஆசிரியராகவும், 8 ஆண்டு காலமாக முதல்வராகவும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
2.திருமதி வி.விஜயலட்சுமி, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
2025 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 5 பேர் மட்டுமே. மணிப்பூர் உயர் தொடக்க பள்ளி-1. மேற்கு வங்காளம், பீகார், குஜராத், பஞ்சாப் தலா ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மட்டுமே!.. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி தொடங்கி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வரை, தமிழ்நாட்டுக்கு மட்டும் தேசிய விருது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 17, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 8 என தமிழ்நாட்டுக்கு மட்டுமே 25 பேருக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒருவர் அல்லது இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்தியா முழுவதும் 378 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தது. தொடக்கப் பள்ளிகள்- 180 + 23. செகண்டரி – 135+17 மொத்தம் = 355. மொழி வாரியாக – 23 (அரபி, பாரசீகம், சமஸ்கிருதம்) எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 378.
28 மாநிலங்களில் உள்ள, 45 இலட்சம் ஆசிரியர்களில் இருந்து 378 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேசிய விருது, தற்போது இலட்சத்திற்கு ஒருவர் வீதம் 45 பேருக்கு மட்டுமே விருதினை குறைத்தது ஏன்? ஏன்? விருது விரோத எண்ணம் உள்ள அரசா? மத்திய அரசு? தமிழ்நாட்டின் சார்பாக 25 பேர் விருதினை பெற்று வந்தோம். தமிழ்நாட்டு விரோதப் போக்கா? இரு மொழி விரோத போக்கா?
Teachers are true builders of a Nation. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்! ஆசிரியராக பணியாற்றியவர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் செப்டம்பர்-5. அவர்களின் பெயரால் வழங்கும் தேசிய விருது எண்ணிக்கையினை குறைப்பதற்கான திட்டம் மத்திய அரசிடம் உருவாகலாமா? மூன்று முறை பிரதமர் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய வரலாற்றுப் பதிவு பிரதமர் அவர்களுக்கு உண்டு.

2026 ஆம் ஆண்டு தேசிய விருது தேர்வு செய்யும் போது 378 ஆசிரியர்களுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு 25 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். கல்வி விரோத, இருமொழி விரோத, மாநில விரோத அரசாக, செயல்படாமல், அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக எண்ணி செயல்படும் ஒன்றிய அரசாக விளங்க வேண்டும்.
ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHER S’ ORGANISATION (AIFETO) சார்பாகவும், தமிழ்நாட்டு ஆசிரியர்கள் சார்பாகவும் ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் என்ற முறையிலும், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களையும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களையும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஜிடிபி யில் 4% கூட சென்றடையவில்லை. நிதி ஒதுக்கீட்டில் ஒருதலை சார்பாக நடவடிக்கை. தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டிய 2152 கோடி நிதி இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மாணவர்களின் கல்வி நலனை பாதிப்படைய செய்யலாமா? மத்திய அரசின் செயல்பாடுகளில் மாற்றம் இல்லையெனில், வரும் மாநிலங்களில் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்த ஆசிரியர்களும், பொதுமக்களும், மாணவர்களும் எதிர்ப்புணர்வினை காட்டாமல் இருப்பார்களா?” என்பதாக கேள்வி எழுப்புகிறார், ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் ஐபெட்டோ வா.அண்ணாமலை.