அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விருதுநகர் : உயிர்பலி வாங்கத் துடிக்கும் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விருதுநகரில் சட்டவிரோதமாக வீடு பட்டாசு கடை மற்றும் கோழி பண்ணைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக, அங்குசம் இதழுக்கு பிரத்யேகமாக ஆடியோ ஆதாரங்களுடன் அதிர்ச்சியூட்டும் தகவல் கிட்டியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தை உள்ளடக்கி சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, காரியாபட்டி, திருச்சுழி என 10 வருவாய் வட்டங்கள் உள்ளது. இந்த பகுதியில் வாழும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவது பட்டாசு உற்பத்தி தொழில்தான்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பட்டாசு தொழிற்சாலைக்கு தமிழகத்தில் இரண்டு விதமான அனுமதிகள் அமலில் இருக்கின்றன. பெரும் தொகை முதலீடு செய்து அதிக அளவிலான உற்பத்தி அறைகளின் எண்ணிக்கையை கொண்ட தொழிற்சாலைகள் நாக்பூர் அனுமதியை பெறுகிறார்கள். இவர்களால் உயர்ரக பேன்சி வெடிகளை தயாரிக்க முடியும். குறைந்த முதலீட்டில், ஆபத்து குறைந்த சிறிய அளவிலான பட்டாசு வெடிகளை தயாரிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குகிறது.

வெடி விபத்துஇந்தியாவில் தீபாவளி மற்றும் விசேஷங்களில் பயன்படுத்தப்படும் ஒட்டுமொத்த பட்டாசு தேவையை  70 சதவீதம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில், நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வரும் 646 பட்டாசு தொழிற்சாலைகள்; மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று இயங்கி வரும் 2317 பட்டாசு தொழிற்சாலைகள் என ஆக மொத்தம் 2963 பட்டாசு ஆலைகள் இயங்கிவருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவற்றை மீறி பல இடங்களில் சட்டவிரோதமான முறையில், எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் ஆபத்தான நிலையில் பல பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவருவதாக சொல்கிறார்கள்.

இதன் காரணமாக, கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை 190 க்கும் மேற்பட்ட ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 337. படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 303. சராசரியாக ஆண்டுதோறும் 16-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளை எதிர்கொள்ளும் மாவட்டமாக விளங்கி வருகிறது விருதுநகர்.

வெடி மூலப்பொருட்கள்
வெடி மூலப்பொருட்கள்

இது போன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணமாக மாவட்ட நிர்வாகம் சொல்வது; மூலப்பொருள் உராய்வு; பட்டாசு ஆலைகளில் உள்ள அறைகளை தனி நபர்களுக்கு உள் வாடகைக்கு விடுவது; பின்னர், ஆலை  முழுவதுமே குத்தகைக்கு விடுவது; மாவட்ட நிர்வாகம் அனுமதி மட்டுமே பெற்று அனுமதி இல்லாத வானவெடி உற்பத்தி அனுமதி; போதிய அனுபவம் இல்லாத தொழிலாளர்களால் என பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இது போன்ற விபத்துகளில், கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் ஆண்டிற்கு சராசரியாக 40-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்ததாக தெரியவில்லை.

இந்த பின்னணியில்தான், குத்தகைக்கு பட்டாசு ஆலை கேட்டு இடைத்தரகர் ஒருவரிடம் பேசுவதான அந்த ஆடியோ வெளியாகியிருக்கிறது. பட்டாசு ஆலைகள் குத்தகைக்கு என்று இணையதளங்களிலும் விளம்பரங்கள் வெளியாகியிருக்கின்றன. அதுவும், பட்டாசு ஆலைகளில் செயல்பட்டு வரும் அறைகளை உள் வாடகைக்கு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆஃபர்களோடு வெளியாகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு பட்டாசு ஆலை முழுமையாக கட்டி முடித்து உரிமம் பெற்று இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.2 கோடி செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம். இவ்வாறு, ஒருவர் முதலீடு போட்டு அனுமதியை வாங்கிவிட்டு அதைவிட கூடுதல் விலை வைத்து ஒன்று மொத்தமாகவோ அல்லது தனித்தனி அறைகளாக பிரித்தோ வெளி நபர்களுக்கு குத்தகைக்கு விடுகிறார்கள்.

அனுமதி வாங்கியது ஒரு நபர். அந்த ஆலையை குத்தகைக்கு எடுத்திருப்பவர் வேறொரு நபர். சில நேரங்களில், ஒரே ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட குத்தகைதாரர்களும் இருப்பார்கள். ஒரு நாளைக்கு 50 பெட்டிகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்றால், அதை இரட்டிப்பாக்க தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கிறார்கள். விதிகளை மீறுகிறார்கள். ஒரு அறையில் 4 நபர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி என்றால், 8 நபர்களை அடைக்கிறார்கள். ஆட்கள் வேண்டும் என்பதற்காக, போதிய அனுபவம் இல்லாதவர்களையும் இறக்கி விடுகிறார்கள். இத்தகைய விதிமீறலும் பேராசையும்தான் பல உயிர்களை இன்றும் காவு வாங்கி வருகிறது.

இது ஒரு புறம் என்றால், இதற்கு மேலே ஒரு படி சென்று மிக எளிதாக பட்டாசு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் திரிகளை கள்ளச் சந்தையில் வாங்கி வீடுகள் பட்டாசு கடைகள் மற்றும் கைவிடப்பட்ட கோழிப்பண்ணைகளில் செட் அமைத்து முன்னணி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்து, சந்தை மதிப்பை விட மிகக் குறைந்த விலையில் விற்பது, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் இது போன்ற பல்வேறு வகையான விதி மீறல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதுபோன்ற சட்டவிரோத விதிமீறலில் ஈடுபடும் ஆலைகளுக்கு பின்னால் அரசியல்வாதிகளின் பின்புலம் இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாகவே, இதனை கண்காணித்து  கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் கல்லா கட்டிக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் சொல்கிறார்கள்.

ஆபத்து நிறைந்த வேலை என்று தெரிந்தும் வேறு வழியின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உயிரைக் காவு வாங்கத்துடிக்கும் சட்டவிரோத பட்டாசு ஆலைகளை களையெடுக்குமா, அரசு?

 

—   மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.