ரீல் ஒன்றுக்காக உயிரை பணயம் வைக்கும் போக்கு!
சமீபத்தில், சித்தூர் மாவட்டம் பாளமனேறு அருகே உள்ள கைகால் நீர்வீழ்ச்சி (Kaigal Waterfalls) பகுதியில் ஒரு வருத்தகரமான சம்பவம் நடந்தது. 23 வயதுடைய யூனீஸ் என்ற இளைஞர், சமூக ஊடக ரீல் ஒன்றை படமாக்கும் முயற்சியில், தனது நண்பர்களிடம் தனது மொபைல் போனை கொடுத்துவிட்டு, வெள்ளத்தில் குதித்து நண்பர்கள் கண்முன்னே அவர் மூழ்கிப் போனார். அவரது கடைசி தருணங்கள் பதிவு செய்யப்பட்டு, அவர் விரும்பியபடி வீடியோ வைரலானது. ஆனால் அவர் பார்க்க அங்கு இல்லை. இரண்டு நாட்கள் தேடுதல் பணிக்குப் பிறகே அவரது உடல் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம், இன்று சமூக ஊடகங்களில் “வைரல் ஆக வேண்டும்” என்ற பேராசை எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. வீடியோவைப் பார்த்த பலர் யோசிக்காமல் அருவியில் குதித்து உயிர் இழந்த இளைஞன் குறித்து வருத்தம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாகவும், அவரது உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது போன்ற ரீல்களை உருவாக்க விரும்புவோருக்கு இந்த வீடியோ ஒரு பாடம் என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ரீல்கள், பைக்குகள் மற்றும் கார்களைத் தவிர வேறு உலகம் இல்லை என்பது போல் வாழ்வது வருத்தமளிக்கிறது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதைச் செய்து உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்நாள் முழுவதும் துன்பப்படுத்தாதீர்கள் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த காலங்களில் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
இதேபோன்ற சில சம்பவங்கள்!
சாஹிப்கஞ்ச் குவாரி ஏரி, ஜார்கண்ட்:
18 வயது இளைஞர் ஒருவர், இன்ஸ்டாகிராம் ரீலுக்காக 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்தார். அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்கள் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
பிலாஸ்பூர் சயின்ஸ் கல்லூரி, சத்தீஸ்கர்:
20 வயதுடைய அஷுதோஷ் சாஹு, நண்பர்களுடன் ரீல் எடுக்க முயன்றபோது, பழைய கட்டிடத்தின் சாய்ந்த சன்ஷேடு மீது ஏறி வீழ்ந்து உயிரிழந்தார்.
எண்ணூர் கடற்கரை, சென்னை:
18 வயது மாணவர் ஒருவர், நண்பர்களுடன் கடலில் ரீல் எடுக்கச் சென்றபோது, திடீரென ஏற்பட்ட பெரிய அலைக்குள் சிக்கி உயிரிழந்தார்.
ஒரு ரீலுக்காக ஆபத்தான ஸ்டண்ட் செய்வது வாழ்க்கையை ஆபத்துக்குள் இட்டுவிடும். இடத்தின் நிலைமை, நீரின் ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து செயல்பட வேண்டும். லைஃப்கார்டு அல்லது பாதுகாப்பு குழுவில்லாமல் ஆபத்தான இடங்களில் வீடியோ எடுக்கக் கூடாது. நண்பர்களின் உற்சாகத்தில் தவறான முடிவுகளை எடுக்காமல், பாதுகாப்பே முதன்மை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களில் வைரல் ஆக வேண்டும் என்ற ஆசை, பலரின் உயிரையும், குடும்பங்களின் நிம்மதியையும் கவர்ந்து விட்டது. ஒரு சிறிய ரீல், ஒரு பெரிய ஆபத்தை உருவாக்கக் கூடும். ஒரு ரீலுக்காக உயிரை இழக்க வேண்டாம். இதையெல்லாம் செய்வதற்கு முன், வீட்டில் உங்களுக்காக உயிர்கள் காத்திருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். தங்கள் எல்லா மகிழ்ச்சியையும் தியாகம் செய்து உங்களை வளர்த்த உங்கள் பெற்றோரின் கண்ணீருக்கு நீங்களே காரணமாகாதீர்கள்…
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.