கலெக்டர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய காப்பீட்டு அட்டைகள் குப்பையில் கிடந்தது எப்படி ?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள புள்ளியியல் துறை அலுவலக வாசல் அருகே 50-க்கும் மேற்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் குப்பையில் கிடந்துள்ளன. கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா, தாலுகா அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வந்தபோது, ஏடிஎம் அட்டை போன்று ஏராளமான அட்டைகள் குப்பையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன்பின் தாலுகா அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். அந்த அட்டைகளைப் பார்த்தபோது, அவை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் என்பது தெரியவந்தது. அட்டைகளில் பயனாளிகள் அனைவரும் பாண்டவர்மங்கலம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதையடுத்து கீழே கிடந்த மருத்துவ காப்பீட்டு அட்டைகளை சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
இதுகுறித்து தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் எவ்வாறு குப்பையில் வந்தன என்பது குறித்து விசாரணை மேற்கொள்கிறோம்,” என்று தெரிவித்தனர்.
— மணிவண்ணன்.