கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பாலின மன்றம் சார்பாக உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது . இந்நிகழ்விற்கு கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன் முன்னிலை வகித்தார் .
சிறப்பு விருந்தினராக காவேரி மகளிர் கல்லூரியின் மேனாள் துணை முதல்வர், மாவட்ட குழந்தைகள் நல குழுவின் மேனாள் உறுப்பினர், திருச்சி குடும்ப நீதிமன்றத்தின் குடும்ப நல ஆலோசகர், முனைவர் சங்கரி சந்தானம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கலைக்காவிரியின் மாணவிகள் மட்டுமே பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். மாணவியர் பாடல் இயற்றி மெட்டமைத்து இசையமைத்து கலை நிகழ்வை வழங்கினார்கள். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய முனைவர் சங்கரி சந்தானம் அவர்கள் புத்திசாலி பெண்கள் மிகச்சிறந்த வீட்டை கட்டி அமைக்கிறார்கள்.
ஒரு சமூகத்தை உருவாக்குகிறார்கள், ஒரு சமூகத்தை வழி நடத்துகிறார்கள் ,ஒரு சமூகத்தை மேம்படுத்துகிறார்கள் ஒரு சமூகத்தை நடத்துகிறார்கள் ஒரு சமூகத்தை ஆளுமை செய்து பண்படுத்துகிறார்கள், எனவே கல்வியும் அறிவுத்திறனும் கொண்டு பெண்கள் திறம்பட துறை தோறும் தனக்கு கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு போராடி வெல்ல வேண்டும் என்றார்.
பெண்கள் இயல்பாகவே பன்முகத் திறன் கொண்டவர்கள், பெண்களுடைய மூளை ஆண்களினுடைய மூளைய விட எடை குறைவு என்றாலும் அறிவுத்திறனில் ஆளுமை பண்பில் தீர்வு காண்பதில் முடிவெடுப்பதில் வழி நடத்துவதில் பண்படுத்துவதில் உற்பத்தி செய்வதில் ஆகச்சிறந்த அறிவுத்திறனோடு இருக்கக்கூடிய மூளை பெண்களுடைய மூளையாக இயற்கை வழங்கி இருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே பெண்கள் தனக்கு கிடைத்த க் கல்வியை சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், சமத்துவத்தை சகோதரத்துவத்தை பாலின பேதமின்றி பெற்றோர்களை பாதுகாத்து தன் குடும்பத்தையும் தன் கணவனின் குடும்பத்தையும் பாதுகாத்து சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
பெண்மை என்கின்ற ஆற்றல் தனிமனிதன் ஒரு குடும்பம் ஒரு சமூகம் ஒரு இனம் இதைத் தாண்டியும் உலகத்தையே திசை திருப்பக் கூடிய அளவில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கக்கூடிய திறன் மிக்கது. எனவே பெண்மையின் ஆற்றலை புரிந்து கொண்டு பண்பட்ட சமூகத்தை உயர்ந்த நவீன சமூகத்தை உருவாக்கிட பெண்கள் அச்சத்தை உடைத்து துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் செல்வி .தேஜினி வரவேற்புரை ஆற்றினார் செல்வி வைதேகி நன்றியுரை வழங்கினார் .இந்நிகழ்வை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பாலினமன்ற ஒருங்கிணைப்பாளர் கி.சதீஷ்குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் இரு பால் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.