பொதுமக்களுக்குத் தவறான செய்தியைத் தருவது இதழியல் அறமா? வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம் குறித்து தினத்தந்தி, தினகரன் !
மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம் குறித்து தினத்தந்தி, தினகரன் (25.06.2024) தவறான தகவல் பொதுமக்களுக்குத் தவறான செய்தியைத் தருவது இதழியல் அறமா?
மதுரை – பெங்களூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் செவ்வாய்கிழமை தவிர்த்து மற்றைய வார நாட்களில் இயக்கப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஊர்களில் நின்று செல்லும். காலை 5:15 க்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
அதே ரயில் மீண்டும் மதியம் 1:45-க்கு பெங்களூரிலிருந்து புறப்பட்டு இரவு 9:45-க்கு மதுரை வந்து சேரும். வண்டி எண் 06003/06004, சராசரி வேகம் 71 கிமீ. விரைவில் முன் பதிவு துவங்கும். இதுதான் இரயில்வே துறை பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய செய்தியாகும்.
ஆனால் தினத்தந்தி தினகரன் நாளிதழும் தவறான செய்தி வெளியிட்டுள்ளது. அது என்னவெனில், மதுரையிலிருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் இரயில் நள்ளிரவு 1.00 மணிக்கு பெங்களூரைச் சென்று சேரும், என்றும் பெங்களூரிலிருந்து நள்ளிரவு 1.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு செய்தி நாளிதழுக்குத் தகவல் கிடைக்கின்றது என்றால் அந்தத் தகவலை எடிட் செய்யக்கூடிய ஆசிரியர்கள் கூர்ந்து கவனித்திருந்தால் இந்தப் பிழை நடந்திருக்காது. பொதுமக்களைச் சென்றுசேரும் ஒரு முக்கிய செய்தியில் இதழியல் அறம் காக்காது போகிறபோக்கில் தினத்தந்தியும் செய்தியை வெளியிட்டுள்ளன என்றே கருத வேண்டியுள்ளது.
வந்தேபாரத் இரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு சுமார் 8 மணி நேரத்தில் பெங்களூர் அடைக்கின்றது. அங்கிருந்து அதே 8 மணி நேரத்தில் மீண்டும் மதுரை வந்தடைகின்றது. நாளிதழ்கள் கணக்குப்படி மதுரையிலிருந்து பெங்களூர் செல்ல 11 மணி நேரம் என்றும் மதுரை திரும்ப 11 மணி நேரம் வருகின்றதே இதில் ஏதோ ஒரு தவறு இருக்கின்றது என்பதை எடிட் செய்யும் ஆசிரியர்கள் பார்க்கவில்லையா ? பார்த்து திருச்சி இரயில்வே மக்கள் தொடர்பு அலுலரைத் தொடர்பு கொண்டு கேட்டிருந்தால் பிழை நீக்கப்பட்டிருக்குமே. பொதுமக்கள் குறித்த இது போன்ற தகவல்களில் நாளிதழ்கள் அலட்சியம் காட்டுவது ஏற்புடையது அல்ல.
– ஆதவன்