“பிரபாகரன் இருக்கிறார்” செய்தியில் உண்மை இருக்கிறதா? விளையாட்டா? ‘விலை’யாட்டா?
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக, அவர் இருக்கிறாரா? இருந்தாலும் எங்கிருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பதே தெரியாமல் இருந்த பழ.நெடும்மாறன் திடீரென கிளம்பி வந்து “பிரபாகரன் இருக்கிறார்” என்ற செய்தியைப் போட்டுள்ளார். செங்கல்லை மட்டுமே நம்பி பிழைப்பை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள், இப்போது தமிழர்களின் தலையில் இந்த பாறாங்கல்லையும் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.
இந்த ‘ஃபேக் நியூஸ் பேக்கிங்’ ‘எக்ஸ்பைரி டேட்’ முடிந்தது தெரிந்தே நெடும்மாறன் மூலம் தமிழ்நாட்டில் விற்பனைக்கு அனுப்பியிருக்கிறார்கள் டெல்லி தயாரிப்பாளர்கள்.
நெடுமாறனுக்குப் பக்கத்தில் நிற்கும் டெல்லி தயாரிப்பாளர்களின் தமிழக ‘ரெப்’பைப் பார்த்தவுடனே தமிழர்களுக்குப் புரிந்திருக்கும் “ஏதோ பெருசா ப்ளான் பண்ணிட்டாய்ங்கன்னு.
2009 –ல் ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டனர். போர்க்களத்தில் மாவீரனாக மாண்டதுடன் தனது குடும்பத்தையும் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றாமல் வீரச்சாவை தழுவச் செய்தார்.
பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவக் காடையர்கள் கொடூரமாக சுட்டுக் கொன்றனர். அந்த கொடூரத்தை போட்டோவாகப் பார்த்த உலகத்தமிழனமே கதறியழுதது.
அதன் பின்னர் நடந்த இந்திய பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று கூச்சநாச்சமில்லாமல் கூவினார் கூலிக்கு கூவும் சீமான். அத்தோடுவிட்டாலும் பரவாயில்லை, “பிரபாகரன் எனக்கு ஆமைக்கறி சமைச்சுப் போட்டார். நைட் டிபனுக்கு என்ன வேணும்னு ஆர்டர் எடுத்தார்” என்றெல்லாம் உடுக்கடித்து சம்பாரித்தார்.
இப்போது அவரைத் தவிர உலகத்தில் யாருமே உத்தமன் இல்லை, யோக்கியன் இல்லை என்ற ரேஞ்சுக்கு நெஞ்சு விடைக்க கத்திக் கொண்டிருக்கிறார்.
இப்போது நெடும்மாறன்கள் சீசன் போல. தமிழ், தமிழர்கள் என்றாலே டெல்லி சூனாபாணாக்களுக்கு வேப்பங்காய சூப்புன மாதிரி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இப்போது பிரபாகரன் ‘இஸ் லைவ்’ என்ற செய்தியைக் கிளப்புகிறார்கள் என்றால் மகா கொள்ளையன் அதானி விவகாரம், எல்.ஐ.சி.க்கு ‘டெட் பாலிஸி’ அதை மறைக்க, மழுங்கடிக்க ‘தேட் பிராப்ளம் இஸ் டெட்’ என சோலியை முடிக்க இன்னும் பல சோலிகளை ஆரம்பிக்க துருப்பிடித்த கல்லாக்காரர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளார்கள்.
2009—ல் பிரபல பத்திரிகை ஒன்றில் இதே செய்தி வந்தது. அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர் ( யாழ்ப்பாணத்தில் புலிகளின் தலைமையகத்தில் சர்வதேச பத்திரிகையாளர்களை பிரபாகரனும் ஆண்டன் பாலசிங்கமும் சந்தித்த போது, அந்த ஆங்கிலப் பத்திரிகையின் நிருபரும் சென்றிருந்தார்) அந்தப் பத்திரிகையாளரிடம் ’உண்மை’யைச் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மையும் கூட.
பதிமூன்று வருடங்கள் கழித்து இப்போது ‘காலாவதி’ சரக்குகளை தமிழனத்திடம் சப்ளை செய்ய வந்திருக்கிறார் ரொம்பவே காலாவதியாகிவிட்ட நெடும்மாறன்.
மூத்த பத்திரிகையாளரான எம்.பி.உதயசூரியன், தனது ஃபேஸ்புக்கில், “வீர விளையாட்டுக்களைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் ஒரு வீரனை வைத்து விளையாடுவதை இப்பத் தான் பார்க்கிறோம்” என பதிந்திருக்கிறார்.
இது தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி என்ற நம்பிக்கையில் உள்ளார் நெடும்மாறன்.
ஆனால்….. சீமான்களும் நெடும்மாறன்களும் ‘விலை’ ஆட்டுபவர்கள்.
அப்போது நேதாஜியை வைத்து விளையாட்டு காட்டினார்கள். இப்போது மாவீரன் பிரபாகரனை வைத்து ‘விலை’யாடுகிறார்கள்.
–மதுரை மாறன்