இந்த காலத்தில் இப்படி ஒரு திருமணமா?
நன்றாக படிக்க வைத்து, பாதுகாப்பாக வளர்த்து, நல்ல கௌரவமான குடும்பத்தில் பெண்ணை கரம்பிடித்துக் கொடுக்க வேண்டுமென்ற அழுத்தம் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் எல்லோரிடத்திலும் இயல்பாகவே மாறிவிட்ட காலம் இது. அதுவும் நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டிருக்கும் காலத்தில், இந்த அழுத்தம் வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை. கார், பைக் உள்ளிட்டு சீர்வரிசை பொருட்களும், மண்டப செலவும், சாப்பாட்டு செலவும் என சில இலட்சங்கள் இல்லாமல் திருமணத்தை நடத்திவிட முடியாது.
திருமணம் என்றாலே, இப்படித்தான் நடத்த வேண்டுமென்று பொதுநியதியாகிவிட்ட காலத்தில், இப்படி ஒரு திருமண விழாவா? என்று ஒரு கணம் நம்மை நாமே கிள்ளிப் பார்க்க வைத்திருக்கிறது மணமக்கள் ஆப.அர்ஜுன் – கு. மணிசங்கரி ஆகியோரின் மணவிழா.
இத்திருமணத்தில், வழக்கமான சம்பிரதாய முறையான தாலி கட்டவில்லை. மோதிரம் மாற்றவில்லை. மணமக்கள் மாலை மட்டுமே மாற்றிக் கொண்டனர். அடுத்து, மணமகளின் வீட்டாரிடமிருந்து ஆபரணங்கள், நகைகள், சீர்வரிசை போன்ற எந்த பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த திருமணத்தில், மணமகன்,மணமகள் மற்றும் இருவரின் பெற்றோர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆகவே, உறவினர்கள், நண்பர்கள், மற்றும் சுற்றத்தார்களிடமிருந்தும் எவ்வித பரிசு பொருட்களும் பெறவில்லை.

மணமக்களின் சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்த வருவாய் மூலம் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நான்கு ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள இளம் சிறார்கள் முதல் முதியவர்கள் வரை உள்ள சுமார் 250 நபர்களுக்கு மணமக்கள் உணவு வழங்கி மகிழ்ந்தார்கள்.
அவ்வளவு ஏன்? மண்டப செலவு கூட இல்லை. திருமணம் நடைபெற்றதே மணமகன் வீட்டில்தான். ஒருவேளை செலவுக்கு பயந்துதான் இப்படி ஏற்பாட்டை செய்திருப்பார்களோ என்று தட்டையாக புரிந்து கொண்டுவிடாதீர்கள்.
திருச்சி, திருவெறும்பூர், துவாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராகவும்; புதுக்கோட்டை கீரனூர் பகுதிகளில் டி.எஸ்.பி.யாகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆறுமுகம் மற்றும் திருச்சி துவாக்குடி அரசினர் கலைக்கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பத்மா ஆகியோரின் மகன்தான் மணமகன் அர்ஜூன். இவர்களது மகள் அபிநயா தற்போது டி.எஸ்.பி. பயிற்சியில் இருந்து வருகிறார். அர்ஜூன் தற்போது லண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் நினைத்திருந்தால், நட்சத்திர விடுதி ஒன்றில்கூட, திருமண விழாவை வெகு விமர்சையாக நடத்தியிருக்க முடியும்.
வெற்று ஆடம்பரத்திற்காகவும், வறட்டு கௌரவத்திற்காகவும், இன்னும் சிலர் சாதியப் பெருமைகளுக்காகவும் ஆடம்பர திருமணங்களை நடத்திவரும் நிலையில், மிக எளிமையான முறையில் நடைபெற்றிருக்கும் இந்த சீர்திருத்த திருமணம் முன்னுதாரணமானது மட்டுமல்ல! ஆகச்சிறந்த நடைமுறை அனுபவமும்கூட!
– கலைமதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.