ஜேக்டோ ஜியோ(JACTO GEO) வேலைநிறுத்த போராட்டம் ! ஐபெட்டோ.அண்ணாமலை அறைகூவல் !
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோ ஜியோ (JACTO GEO), திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2025 நவம்பர் 18 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளது.
“சங்க வேறுபாடுகளை ஒருபுறம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் “ என ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு அறிவித்துள்ள தேர்தல் கால வாக்குறுதிகளை தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நிறைவேற்றிடச் செய்ய வேண்டிய முழு கவனத்தையும் ஈர்த்து ஒட்டுமொத்த ஆசிரியர், அரசு ஊழியர், பணியாளர்கள், தொழிற்சங்கத்தினர், ஓய்வூதியதாரர்கள், ஒப்பந்த அடிப்படை சிறப்பாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் அளித்த தேர்தல்கால வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றி வைத்திட வேண்டுமென்றால், ஒட்டுமொத்த 12 லட்சம் பேரின் எதிர்ப்புணர்வினை வெளிப்படுத்திக்காட்ட வேண்டாமா?
1. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.
2. இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் உட்பட அனைத்துப் பிரிவினரின் பாதிப்புகளுக்கும் தீர்வுகாண வேண்டும்.
3. தணிக்கைத் தடை என்ற பெயரால் அரசாணைகளை புறந்தள்ளிவிட்டு தலைவர் கலைஞர் அரசு அளித்துவந்த பணப் பயன்களையும் பறித்து வருகிற கொடுமை – உடன் இரத்து செய்யப்பட வேண்டும்.
4. டெட் கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
5. அரசாணை எண்.243-க்கு தீர்வு காண வேண்டும்.
*ஒருநாள் அடையாள வேலை நிறுத்த அறிவிப்பால்தான் அகவிலைப்படி உயர்வினை அறிவித்துள்ளார்களா?
*அந்த ஒப்பீட்டுக்கே நாம் செல்லத் தேவையில்லை.
*மத்திய அரசுக்குஇணையான அகவிலைப்படியினை 1.7.2025முதல் நிலுவைத் தொகையுடன் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு – நிதி அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் உறுதிமொழி அளித்தது போல் மத்திய அரசு அறிவித்த மறுநாளே தலைவர் கலைஞர் அவர்கள் காலம் போல் அறிவித்திருந்தால் அரசின் மீது இழந்து வரும் நம்பிக்கை உணர்வினை மாற்றம் கொண்டுவரும் புதிய நம்பிக்கை உணர்வினை ஏற்படுத்தியிருக்கலாம்?
*நல்லெண்ண உணர்வினை வெளிப்படுத்துவோம்.
*அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு திராவிட மாடல் அரசு அளித்த வாக்குறுதிகள என்னவாயிற்று? என்று கேள்விக் கணைகள் தொடுக்க தொடங்கிவிட்டனர்.
*ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினை – அனைத்துப் பிரிவினரும் கரம் கோர்த்து நின்று முழு வெற்றியடையச் செய்வோம்!
*1.50 கோடி வாக்காளர்கள் குடும்பங்களை மையப்படுத்தியுள்ள நமது வாக்கு வாங்கியினை இழக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உணர்வில் தொடர் போராட்டக் களத்திற்கும் தயாராகி நிற்போம்.*” என்பதாக அறைகூவல் விடுத்திருக்கிறார்.
— அங்குசம் செய்தி பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.