அவனுக்கு நான் செய்தது அப்பட்டமான அநீதி. என்னை மன்னித்துவிடு கோபி… சினிமா இயக்குநரின் கதறல் !
“அண்ணே உங்கிட்ட கொஞ்சம் பேசனும்ணே…” இப்போதும் நெஞ்சை அறைகிறது இந்தக் குரல். கோபி விஜய், விகடனில் நான் பார்த்து வியந்த இளம் குருத்து. எனக்குப் பின்னால் வந்த தம்பிகளில் இரா.வினோத், பா.ஜெயவேல் வரிசையில் மிகுந்த நம்பிக்கையாளனாக நான் கோபியை பார்த்தேன்.
பல நாட்கள் என் வீட்டிலேயே வைத்து வளர்த்தேன். எவ்வளவு நெருங்கினாலும் என் உடைகளைக் கொடுக்கிற அளவுக்கு நான் எவரிடமும் ஒட்டியதில்லை. “உன்னோட சட்டை எனக்கு சரியா இருக்குண்ணே…” என மாட்டிக்கொண்டே சொல்வான். விகடனில் பணியாற்றிய காலத்தில் இருவரும் வண்டியில் சுற்றாத நாளில்லை.
கனிமொழி பேட்டிக்காக நான் திகார் கிளம்பிய நாளில், “உன்னால நிச்சயமா அவங்களை சந்திக்க முடியும்ணே… நீ எடுக்கப்போற பேட்டி மொத்த அரசியலையும் ஸ்தம்பிக்க வைக்கப் போகுது பாரு” என என்னை முறுக்கேற்றி விமான நிலையம் வரை பைக்கில் கொண்டுவந்து விட்டவன். கனிமொழியை திகார் ஜெயிலுக்குள் போய் சந்தித்துத் திரும்பியதும், கோபி விஜய்க்குத்தான் முதல் போன் போட்டேன்.
விகடனில் இருந்து வெளியேறிய பிறகு இருவரும் எங்கேயாவது எதிர்ப்படுகிறபோது சந்திக்கிற ஆட்களானோம். நான் சினிமா பக்கம் வர, அவன் எங்கெங்கோ திசைமாற பேச்சும் அறுபட்டுப் போனது. அவ்வப்போது ஏதாவது ஓர் எண்ணில் இருந்து அழைப்பான். என் நெருக்கடி புரியாது வதைப்பான். எல்லாம் அன்புதான். மிதமிஞ்சிய அன்புதான். ஆனாலும் அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லை. அவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே துண்டித்துவிடுவேன். மறுபடி மறுபடி அழைப்பான். வேறு வேறு எண்ணிலிருந்து அழைப்பான்.

“ஏன்டா என் உசுரை எடுக்குற? போன் விஷயத்தில் தெரியாத நம்பர்ல இருந்து யார் அழைச்சாலும் எடுக்கிற ஒரே ஒரு நல்ல பழக்கம்தான் என்கிட்ட இருக்கு. அதையும் காலி பண்ணி தொலைச்சிடாதே…” என ஒருமுறை ஆத்திரப்பட்டேன். “அண்ணே…” உயிர் நடுங்க அவன் அழைத்த குரல் கலங்கடிக்க, “சொல்லித் தொலைடா…” என்றேன். சில விஷயங்களைச் சொன்னான். என் உதவி இயக்குநரின் எண் கொடுத்து, “உனக்கு எது தேவைன்னாலும் இவனிடம் கேள். இவன் உனக்கு எல்லாமும் செய்வான். என்னை மட்டும் தொந்தரவு பண்ணாதே” என்றேன். அவ்வப்போது என் உதவி இயக்குநருக்கு போன் பண்ணுவான்.
கடந்த மாதம் புதிய எண்ணிலிருந்து ஓர் அழைப்பு. “அண்ணே வைச்சிடாதே…” அவனேதான். இந்த முறை அவன் குரலில் அநியாய பதட்டம். “உனக்குத்தான் என் அசிஸ்டண்ட் நம்பர் கொடுத்து தொலைச்சிருக்கேனே…” என்றேன் ஆத்திரமாய். “போன் தொலைஞ்சிடுச்சுண்ணே… உன்னோட நம்பர் மட்டும்தான் அண்ணே என் ஞாபகத்துல இருக்கு” என்றான். இன்னும் ஏதோ சொல்ல முயன்றான். என் உதவி இயக்குநரின் கையில் போனை கொடுத்து, “அவன் என்ன கேட்கிறானோ செஞ்சு கொடுத்திடுப்பா” எனச் சொன்னேன். “அண்ணே உங்கிட்ட கொஞ்சம்
பேசனும்ணே…” என என் கையிலிருந்து உதவியாளருக்கு போன் கைமாறிய கணத்தில் அவன் பேசிய வார்த்தைகள் இப்போதும் என் ஈரக்குலையை அறுக்கின்றன. பாதியிலேயே நான் தவிர்த்த அவன் குரலை இனி எப்போது கேட்கப் போகிறேன்? அவன் வாழ்வை அவன் அணு அணுவாக அழித்துக் கொண்டதைப் பொறுக்காமல்தான் ஒவ்வொரு முறையும் அவனிடம் ஆத்திரப்பட்டேன். அவன் எப்படியாவது மறுபடியும் பழையபடிக்கு வந்துவிட மாட்டானா என ஏங்கி ஏங்கித் தோற்றுப்போன இயலாமைதான் என்னை இவ்வளவு கோபமாக்கியது. எல்லா வாய்ப்புகளையும் வலிய தவறவிட்டு எளியவனாகவே நின்றவன் அவன். இயக்குநர் வினோத் தொடங்கி பரமு அண்ணன் வரை அவனைப் பற்றிப் பலரிடமும் பேசிக்கொண்டே இருந்த நான், அவனிடம் மட்டும் சரிவர பேசவில்லை.
கொஞ்சமும் ஒவ்வாத மனிதர்களுக்குக்கூட மணிக்கணக்கில் நேரம் ஒதுக்கிப் பேசுகிற நான், என் சிஷ்யனாக வரித்துக்கொண்டு நின்றவனுக்குக் காது கொடுக்காமல் போய்விட்டேன். “நல்லது செய்திருக்கிறேனோ இல்லையோ, ஆனால் யாருக்கும் தீங்கு நினைத்ததில்லை…” என்கிற ஒரு நிம்மதிதான் இவ்வளவு காலம் என்னை இயக்கியது.
இனி அந்த நிம்மதியும் இருக்காது. என்னதான் வருத்தம் இருந்தாலும், நான் அவனோடு தொடர்ந்து பேசியிருக்க வேண்டும். அவனுக்கு நான் செய்தது அப்பட்டமான அநீதி. இரைஞ்சுகிற ஒருவனின் குரலுக்கு மனம் கொடுக்காத நான் கல். அவன் இறந்துகிடக்கும் புகைப்படம் எவருக்குமே நேரக்கூடாத இறுதிநிலை. என்னை மன்னித்துவிடு கோபி…
இரா சரவணன்
திரைப்பட இயக்குநர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.