அவருடைய பதவிக்காகத்தான் பொறுத்து போகிறோம் … பி.ஆர்.ஓ.வுக்கு எதிராக கலெக்டரிடம் கொந்தளித்த பத்திரிகையாளர்கள் !
“பத்திரிகையாளர்களை நாய்ங்க வந்துவிட்டது, பிச்சைக்கார பசங்க போறானுங்க பாரு என்கிறார். சில போலி நிருபர்களுக்கு சலுகைகளை பெற்று தருகிறார். கடந்த ஆண்டு அவருக்கு எதிராக புகார் கொடுத்ததற்காக எங்களை தொடர்ந்து பழி வாங்கி வருகிறார். அவர் வகித்து வரும் பதவிக்காகதான் பொறுத்து கொண்டு இருக்கிறோம் “ என்பதாக, திருப்பத்தூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையாவுக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள், திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கத்தினர்.

பி.ஆர்.ஓ. சுப்பையாவுக்கு எதிராக ஏற்கெனவே, தங்களது சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்த நிலையில், அன்றிலிருந்து தொடர்ந்து தங்களை அவர் அவமதித்து வருவதாகவும், பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பத்தூர் பிரஸ் கிளப்பின் செயலாளர் கோவி சரவணனிடம் பேசினோம்.
“பத்திரிகையாளர்களை நாய்ங்க வந்துவிட்டது, பிச்சைக்கார பசங்க போறானுங்க பாரு என்கிறார் , ஒரு சில தினசரி நிருபர்களை வைத்துக்கொண்டு மற்ற செய்தியாளர்களை பெற்ற தாயை பழித்தும் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசுகிறார். அவரை போல நாங்களும் பேசினால் என்ன செய்ய முடியும், அவர் வகித்து வரும் பதவிக்காகதான் பொறுத்து கொண்டு இருக்கிறோம்.
இதுமட்டுமில்லங்க சில போலி நிருபர்களுக்கு சலுகைகளை பெற்று தருகிறார். அதை சுட்டிக்காட்டினால், மற்ற செய்தியாளர்களுக்கு இடையே சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்துகிறார்.

இதுகுறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் புகார் அளித்து இருந்தோம். அதன்பேரில், பதவியை தவறாக பயன்படுத்தி அரசு விதிமுறைகளை மீறி சிலருக்கு அரசின் சலுகைகளை வழங்கியது கண்டறியப்பட்டு அந்த அறிக்கையை செய்தித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்திருந்தார். அதனடிப்படையில் தான், தற்போது புதியாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் சிவ சவுந்திரவள்ளி’ ஐஏஎஸ்-இடம் புகார் அளித்து இருக்கிறோம். ஆட்சியரும் செய்தி துறை இயக்குநரும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சுப்பையா பாண்டியன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” என்றார் காட்டமாக.
மாவட்டத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அமைச்சர் மற்றும் பொறுப்பு அமைச்சர், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்தும் மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்து செயல்படுவது செய்தித் துறையாகும்.
அரசு , ஒரு திட்டத்தை அறிவித்ததும் அதன் பயன்களை பொதுமக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு இந்த அலுவலர்கள் , முனைப்புடன் செயல்பட வேண்டும். அரசின் சாதனைகள் பற்றிய குறும்படங்கள், திரையரங்குகளில் திரையிடப்படுகிறதா என்பதை அந்த துறை கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக வெளிவரச் செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் தாமதமின்றி பெற்றுத் தரவேண்டும். அரசுக்கும் பொதுக்களுக்கும் இடையே பாலமாக இருந்து அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
ஆனால், திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் “சுப்பையா பாண்டியன்” மற்றும் “ஜனார்த்தனன்” ஆகியோர் பணம் குவிப்பதிலும் அதிகார திமிரிலும் இருப்பதாக ஆளும் கட்சியனர் , அதிகாரிகள் முதல் பத்திரிகையாளர்கள் வரை பலரின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதற்கு முன்னர் வேலூர் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்று சென்றிருந்த நிலையில், அங்கும் இதேபோல வேலையை காட்ட அங்கிருந்து நான்கே மாதங்களில் தூக்கியடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சுப்பையா நாவடக்கம் இல்லாதவர் என்றும் , ஆணவப் பேச்சு பேசுபவர், அதிகார மோகத்துடன் ரொம்ப திமிராக அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவார், துறை அலுவலர்கள் அவரிடம் செய்தி வெளியிடக் கோரி பேசினால் மூச்சுக்கு முந்நூறு தடவை `நான் டெப்புடி கலெக்டர் ரேங்க். மாசம் 85 – ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறேன். என் முன்னாடியெல்லாம் உட்கார்ந்துப் பேசக் கூடாது” என்றெல்லாம் அதிகாரத் திமிரில் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் இவருக்கு எதிராக இருக்கின்றன.
— மணிகண்டன்.