கலைஞர்- ஸ்டாலின் எனும் கடலடி மலைத் தொடர் !
கலைஞர்- ஸ்டாலின் எனும் கடலடி மலைத் தொடர்!
கலைஞருக்குப் பிறகு தி.முக. என்னவாகும்? – இது கலைஞர் வாழ்ந்த போது எழுந்த கேள்வி. கலைஞரைப் போல ஸ்டாலினால் செயல்பட முடியுமா? – இது கலைஞர் இறந்த பிறகு எழுந்த கேள்வி. “நான் கலைஞரல்ல. கலைஞரைப் போல பன்முகத் திறமை கொண்டவனல்ல” – இது கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்ற தளபதி மு.க.ஸ்டாலின் சொன்ன பதில். அப்படியென்றால்..? மீண்டும் முதல் வரியைப் படியுங்கள். அதே கேள்வி தான் எழுந்தது.
தனித்துவமிக்க தலைவரான கலைஞரிடம் பேச்சு, எழுத்து, கவித்துவம், நிர்வாகத் திறன், அரசியல் சாதுர்யம் என பன்முகத் திறமை உண்டு. எனினும், அன்றைய சூழலில் அரசியலில் வெற்றி பெறத் தேவையான சாதி செல்வாக்கு, குடும்பப் பெருமை, மதக் கட்டமைப்பின் ஆதரவு, பெரும்பணம், உயர்படிப்பு, ஸ்தாபன பலம் என்ற எதுவுமே கலைஞருக்கு இல்லை. அத்தகைய நிலையில், அவருடைய பன்முகத் திறமையை வெற்றிகரமாக வெளிக் கொண்டு வரத் துணை நின்றது அவரின் அயராத உழைப்பு.
கலைஞரின் பன்முகத்திறமை தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படையாகச் சொன்ன தளபதி மு.க.ஸ்டாலினிடம் இருந்தது கலைஞரின் அயராத உழைப்பு. அந்த உழைப்பு தான், ஸ்டாலினிடம் தனக்கு மிகவும் பிடித்தது என்பதை கலைஞரே சொல்லியிருக்கிறார். ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு.. உழைப்பு..உழைப்பு..’ என்று அங்கீகரித்திருந்தார். கலைஞர் அங்கீகரித்த அந்த உழைப்புதான் தளபதி ஸ்டாலினை கழகத்தின் தலைவர் என்ற நிலைக்குக் கொண்டு வந்தது.
அரை நூற்றாண்டுகாலம் ஓர் இயக்கத்தைக் கட்டிக் காத்த தலைவரின் மகன் அதே இயக்கத்தின் தலைவராக வருவதற்கு கலைஞரிடம் ஸ்டாலின் கற்ற உழைப்புப் பயன்படலாம். மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தல் களத்தில் தி.மு.க.வை மீண்டும் வெற்றி பெறச் செய்வதற்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும், திறமையுடன் ஆட்சியை நடத்துவதற்கும் இந்த உழைப்பு போதுமா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
தன்னுடைய 14 வயதிலிருந்து தேர்தல் களத்தில் பணி செய்து வருபவர் மு.க.ஸ்டாலின். அவர் எதிர்கொண்ட வெற்றிகரமான தேர்தல்கள் உண்டு. சில தோல்விகளும் உண்டு. இரண்டையும் பாடங்களாக எடுத்துக்கொண்டு, தொடர்ந்து உழைக்கின்ற பக்குவம் அவரிடம் உண்டு. கலைஞர் இல்லாத தி.மு.க.வில் கழகத் தலைவர் ஸ்டாலினின் அந்தப் பக்குவமான உழைப்பு, தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தலைமையில் வலுவானக் கூட்டணியை அமைத்தார். அது, தேர்தல் நேரத்திற்கானக் கூட்டணி மட்டுமல்ல.
இந்தியாவை அச்சுறுத்தும் பாசிச மதவெறி – ஆதிக்கவெறி கொண்ட பா.ஜ.க. ஆட்சிக்கெதிரான இந்தியாவின் பன்முகத்தன்மை மீது நம்பிக்கை கொண்ட ஜனநாயக சக்திகளின் கூட்டணி. இந்திய அளவிலோ, தனிப்பட்ட எந்த மாநிலத்திலோ இத்தகையக் கூட்டணிகள் அமையாத 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமையான கூட்டணி அமைந்தது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பா.ஜ.க. கூட்டணிக்குப் படுதோல்வியைக் கொடுத்து மகத்தான வெற்றி பெற்றது தளபதி ஸ்டாலின் அமைத்த கூட்டணி.
கலைஞர் தலைமையேற்றிருந்த காலத்தில்கூட அமையாத வகையில், நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையைப் பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம். ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணி ஃபார்முலாவையும் வெற்றியையும், ‘தமிழ்நாடு மாடல்’ என இந்திய ஊடகங்கள் உச்சரித்தன. அதே கூட்டணியை ஒருங்கிணைத்து-வலிமைப் படுத்தி 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தை சந்தித்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 6வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 7-5-21 அன்று ஆளுநர் மாளிகையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக’ப் பதவியேற்றார் கழகத் தலைவர். கலைஞர் கருணாநிதியின் ஆட்சிதான் தொடர்கிறது என்பதே அவருடைய பதவியேற்பு உறுதிமொழியில் உச்சரித்த பெயரில் கொடுக்கப்பட்ட அழுத்தம்.
தமிழ்நாட்டின் திட்டங்களை இந்திய அளவில் கவனிக்கச் செய்வதும், பிற மாநிலங்கள் அவற்றைப் பின்பற்றுவதும் அண்ணா, -கலைஞர் ஆகியோர் தொடங்கி வைத்த நடைமுறை. அதில் தனது 50ஆண்டுகால அரசியல் தலைமை வாழ்வில் 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த கலைஞரின் ஆட்சிக்காலங்களில் மூன்று தலைமுறைகளை உள்ளடக்கிய திட்டங்களை செயல்படுத்தக் கூடிய வாய்ப்பு அமைந்தது. முந்தைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் பாலமாக அமையக்கூடிய கலைஞர் ஆட்சிக்காலத் திட்டங்கள் போலவே முதமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியின் திட்டங்களும் நடைமுறைக்கு வந்தன.
பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்கள் தங்குவதற்கு தோழி விடுதி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான புத்தொழில் திட்டம், தொழில் வளர்ச்சிக்கான 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு, திருநங்கையர்-மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டிசம் எனும் மதி இறுக்கம் கொண்ட குழந்தைகளுக்கானத் திட்டங்கள் என ‘எல்லாருக்கும் எல்லாமும்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றும் இந்திய அளவில் கவனிக்கப்படும் திட்டங்களாக அமைகின்றன.
கடுமையான நிதி நெருக்கடி, ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்க மறுக்கும் உதவிகள் இவற்றுக்கிடையிலும் மாநில உரிமைகளுக்கானப் போராளி யாக நின்று, மக்களுக்கானத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் 71 வயதினை நிறைவு செய்யும் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அவருடைய ஆட்சிக்காலத்தில் கலைஞரின் நூற்றாண்டு அமைந்தது பெரும்பேறு. கலைஞரின் பெயரால் பய னுள்ள திட்டங்கள் மக்களுக்கு கிடைத்து வருகின்றன.
சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் உலகத் தரத்திலான கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிளாம் பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அலங்கா நல்லூர் அருகே கலைஞர் ஏறுதழுவதல் அரங்கம் ஆகியவற்றை அரசு சார்பில் அமைத்திருப்பதுடன், அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை உருவாக்கியிருக்கிறார் கழகத் தலைவரான முதலமைச்சர். கலைஞர் மறைந்த போது அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், கடற்கரையில் அவரது உடலை அடக்கம் செய்ய சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிகண்ட மு.க.ஸ்டாலின், அங்கே கலைஞரின் நினைவிடத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்.
மக்கள் மன்றத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மாநில உரிமைகளின் குரலை ஒலிக்கச் செய்கிறது அவரது தலைமையிலான திராவிட மாடல் அரசு. ஆளுநரின் அடாவடி செயல்களுக்கு எதிரான உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறது. கலைஞரின் மாநில உரிமைக் குரல்கள், இந்திய அளவில் அரசியல் சக்திகளை ஒருங்கிணைத்ததுபோல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் குரலும் ‘இந்தியா’ என்கிற பெயரில் அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளது.
மூன்றாண்டு கால ஆட்சியில் குறைகளே இல்லையா என்று கேட்கலாம். நிர்வாகத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் இப்போதும் இருக்கின்றன. அவற்றை முதலமைச்சர் புறக்கணிப்பதோ, புறந்தள்ளு வதோ இல்லை. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் தலைவராக அவர் இருக்கிறார். நியாயமானத் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவராக இருக்கிறார்.
தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமான ஆட்சியாக இல்லாமல், தனது இயக்கத்திற்கு வாக்களிக்கத் தவறியவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் தான்தான் முதலமைச்சர் என்ற உணர்வுடன் செயல்படக்கூடியவராக அவர் இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் உழைக்கிறார்…உழைக்கிறார்.. உண்மையாக உழைக்கிறார். அதனால்தான் இந்திய அளவில் கவனித்திற் குரியவராக இருக்கிறார்.
இந்திய அரசியலில் தோழமைக் கட்சியினர் தன்னை முன்னிறுத்தியபோது, ‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்றவர் கலைஞர். அதே வழியில், தன் உயரத்தை அறிந்தவராக இருக்கிறார் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கலைஞரின் புகழைத் தன் தோளில் வைத்து உயர்த்திக் காட்டும் உயரம் கொண்டவராக அவர் திகழ்கிறார்.
கலைஞர் வாழ்ந்த காலத்திலும், அவருக்குப் பிறகு ஸ்டாலின் காலத்திலும் இருவரின் உயரத்தையும் குறைத்து மதிப்பிட்டவர்கள், குறிவைத்து தாக்குபவர்கள் உண்டு. அது இயல்பு. முத்தமிழறிஞர் கலைஞரும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் தங்கள் உயரத்தை வெளிக்காட்டாத கடலடி மலைத் தொடர்கள் போன்றவர்கள். அவர்களின் உயரம் கண்களுக்குத் தெரியாது என்பதால், குறைத்து மதிப்பிட்டு மோதுபவர்கள், கடலடியில் இருந்த பனிமலை மீது மோதிய டைட்டானிக் கப்பலைப் போன்றவர்கள்.
-கோவி.லெனின்