தமிழக அரசியல் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி… தலைவலியில் உதயநிதி..!
தி.மு.க., துணை பொதுச்செயலரும், துாத்துக்குடி எம்.பி.,யுமான கனிமொழி, மாநில அரசியலில் ஈடுபட வேண்டும்’ என, நீண்டநாளாகவே அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பிறந்த நாள் கண்ட எம்.பி கனிமொழிக்கு தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் நேரிலும், தனது எக்ஸ் பக்கத்திலும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அதனுடன் கனிமொழிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச்செயலர் வேணுகோபால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆகியோர் செல்போன் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள கனிமொழி வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், முத்துசாமி, சாத்துார் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, ராஜா, மனோ தங்கராஜ், மகேஷ், தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி, எம்.பி.,க்கள் வில்சன், கலாநிதி, தமிழச்சி ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.
ஆனால் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரிலோ, செல்போன் வாயிலாகவோ அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவோ கனிமொழிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காதது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகியுள்ளது. அதே சமயம், நவம்பர் -27 உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளன்று அவர் நேராகவே கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால் தனது குடும்ப உறுப்பினரும், அரசியலில் சீனியருமான கனிமொழிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம் ஒரு வேளை கனிமொழி அவர்களது ஆதரவாளர்கள் தமிழக அரசியலில் ஈடுப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வரும் நிலையில், அப்படி அவர் வந்தால் கண்டிப்பாக துணை முதல்வராக்க வேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகும். இந்த சூழலால் தான் வாழ்த்துக்கள் தெரிவிக்க வில்லை என்கின்றனர்.

அதே சமயம் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கனிமொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது தமிழக அரசியலுக்குள் விரைவில் கனிமொழி வருவார் என்பதையே உணர்த்துகிறது.
மேலும் கனிமொழியின் பிறந்தநாள் நிகழ்ச்சியானது சி.ஐ.டி காலனி நடந்தது. இந்த பகுதி சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதி, டி நகர் ஏரியாவில் வருகிறது. சென்னையை பொருத்தவரை தி.மு.க., சார்பாக 6 மாவட்ட செயலாளர்கள் இருந்து வருகின்றனர். அதில், சேகர் பாபு, சிற்றரசு, மயிலை வேலு, ஆர்.டி.இ சேகர் ஆகியோர் மட்டும் தான் கனிமொழியை நேரில் சென்று பார்த்துள்ளனர். ஆனால் சுகாதரத்துறை அமைச்சரும், மா.செ-வுமான மா.சுப்ரமணியன், மற்றும் மாதவரம் சுதர்சனம் ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதும் சென்னை அரசியல் வட்டாரங்களில் பகீரினை கிளப்பியுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க ரத்தமும், சதையுமாக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் ஹை கமாண்ட்டான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரிடமிருந்து வாழ்த்துக்கள் வரவில்லை என்பது கவனிக்கக்கூடிய விசயமாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சியும், சித்தாந்தமே பொருந்தாத கட்சியான பா.ஜ.க., வின் ஹை கமாண்ட் கனிமொழிக்கு வாழ்த்துக்கள் மழை பொழிந்திருப்பது பா.ஜ.க மத்தியில் கனிமொழிக்கு தனி செல்வாக்கு இருப்பதை உணர்த்தியுள்ளது.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற இருந்த ”வெல்லும் தமிழ்ப்பெண்கள்” டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடானது 26 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், பிரியங்கா காந்தி கலந்துக்கொள்வதாக தகவல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நடிகருமான வாகை சந்திரசேகர், எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர், கனிமொழி பிறந்த நாளன்று ‘மாநில அரசியலில் ஈடுபட வேண்டும்’ என கனிமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
— ஜெ. ஜான் கென்னடி








Comments are closed, but trackbacks and pingbacks are open.