அதிகாலையில் பரணி தீபம்… ! மாலையில் மகா தீபம் …!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர், மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் அதி விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தீப திருவிழாவின் தொடக்க நிகழ்வாக கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக 30- ந்தேதி பஞ்ச ரத தேரோட்டங்கள் நடைப்பெற்றன.
இதனையடுத்து விழாவின் உச்சபட்ச நிகழ்ச்சியாக டிசம்பர் 3 -ந்தேதி திருக்கார்த்திகையான இன்று அதிகாலையில் கோயில் மூலவர் சந்நிதியில், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில்”பரணி தீபம் ‘ ஏற்றி வைக்கப்பட்டது.
முன்னதாக, கோயில் மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் இந்த நாளில் மட்டும்தான் அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை காண முடியும்.
அவர் அருகில் வைக்கப்பட்ட பரணி தீபத்தை கோவில் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு
ஐந்தே முக்கால் அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 1500 மீட்டர் திரியை வைத்து சுமார் 4500 லிட்டர் ஆவின் நெய் நிரப்பி மாலை 6 மணியளவில் “மகா தீபம்’ ஏற்றப்பட்டது.
அப்போது திருவண்ணாமலை நகரமே அண்ணாமலைக்கு அரோகரா … உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா… என்று விண் அதிர பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கமிட்டு கொட்டும் மழையிலும் மக்கள் நனைந்தபடியே கிரிவலம் வருகின்றனர்.
தொடர்ந்து , கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், இதர வாகனங்களில் பஞ்ச மூர்த்தியர்களின் தேரோட்டமும் கோலாகலமாக நடைபெறவுள்ளன.
இந்த தீபம், இன்றிலிருந்து 11 நாள்கள் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும். தமிழ்நாடெங்கும் பக்தர்கள் அவரவர் வசிக்கும் இடங்களிலும் கோவில்களிலும் தீபங்கள் ஏற்றி வழிப்பட்டு வருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நேற்று முதலே, பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர்.
மலை உச்சியில் , ஒளி வீசும் இந்த ஜோதியை மண்ணுலகில் இருந்து கண்டு, அண்ணாமலையாரை தரிசிக்க கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பக்தர்கள் அதிகரித்திருக்கிறார்கள் .
— மணிகண்டன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.