வீட்டில் பாலியல் தொழில் நடத்தி கைதான பாஜக பிரமுகர் ! புதுக்கதை சொல்லும் கரூர் பாஜகவினர் !
வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகரை போலீசார் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்திருக்கும் விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டத்திற்கு, ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு பணிக்கு வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த கும்பல்களைப் பிடிக்க விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் ரோந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் தாந்தோன்றிமலை ஊரணி மேட்டு பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதி என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததை உறுதி செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ரகுபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்த போலீசார், அந்த வீட்டிலிருந்து விபச்சார நடத்த உதவியாக இருந்த பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தங்களது கட்சி நிர்வாகியை போலீசார் பொய் வழக்கில் கைது செய்துவிட்டதாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் V.V.செந்தில்நாதன் கண்டனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
“கரூர் மாவட்டம் முழுவதும் தினம் ஒரு கொலை, கொள்ளை, பள்ளி மாணவர்களுக்கு கூட எளிதில் கிடைக்கக்கூடிய அளவிற்கு, கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருள்கள்.. தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மணல் கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை, திராவிட மாடல் அரசின் ஏவல் துறையாக கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
மாற்றுக் கட்சியின் நிர்வாகிகளை திமுகவிற்கு அழைத்துச் செல்வது, மறுப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பது என கரூர் மாவட்டத்தில் தொடர்கதை ஆகி வருகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் ரகுபதி அவர்களின் மனைவி, திமுகவின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருகின்ற ஒருவரின் தாயாரை எதிர்த்து கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மாயனூர் ஊராட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த நபர் ரகுபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு பிரச்சனைகளை, தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில் பொய் வழக்கில் கைது செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம்.” என்பதாக பாஜக சார்பில் வெளியான கண்டன அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.