அஜய் ரஸ்தோகி : இந்தப் பெயரை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறோமே !
கரூர் துயரம் பற்றி விசாரிக்கும் பொறுப்பை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக கோரியது. அந்த விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கண்காணிக்க வேண்டும் என்று தவெக கோரியது.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் உடனே ஏற்று மாண்பமை உச்ச நீதிமன்ற நீதியர் ஜே.கே. மகேஸ்வரியும், என்.வி. அஞ்சாரியாவும் ஆணையிட்டுள்ளனர். அது மட்டுமல்ல. சிபிஐ விசாரணையைக் கண்காணிப்பதற்கான முன்னாள் நீதிபதியின் பெயரையும் அறிவித்து விட்டனர். அவர் பெயர் அஜய் ரஸ்தோகி.

இந்தப் பெயரை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறோமே! என்று கொஞ்சம் தேடிப்பார்த்தேன். ஓ! அது ஒரு புகழ்மிக்க (?) வழக்கு! குசராத் இசுலாமியர் இனப் படுகொலையின் போது (2002) பில்கிஸ் பானு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யம் ஷா என்பவர் 2022 மே மாதம் தம்மை விடுதலை செய்யுமாறு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 32இன் படி நீதிப்பேராணை வழக்குத் தொடுத்த போது, அந்த விண்ணப்பத்தை ஏற்று அவர் உட்பட 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய ஆணையிட்ட உச்ச நீதிமன்ற நீதியர் இருவரில் ஒருவர்தான் இந்த அஜய் ரஸ்தோகி (மற்றொருவர் விக்ரம் நாத்).
மோசடி ஆவணங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது உச்ச நீதிமன்றத்திலேயே மெய்ப்பிக்கப்பட்டு அந்தக் குற்றவாளிகள் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள் நீதியர் பிவி நாகரத்னா, உஜ்ஜல் புயன் ஆகியோர். பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்க மறுத்து மோசடிக்குத் துணை போன அதே திருவாளர் அஜய் ரஸ்தோகியைத்தான் கரூரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட நம் 41 தமிழர்களுக்கு நீதி வழங்கும் பணியை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற நீதியர் ஜே.கே. மகேஸ்வரியும், என்.வி. அஞ்சாரியாவும் பொறுக்கி எடுத்துள்ளனர். ஒருவேளை அவர்களுக்கு பில்கிஸ் பானு வழக்கும் அஜய் ரஸ்தோகியின் தீர்ப்பும் நினைவுக்கு வராமல் போயிருக்கலாம்.

கரூர் விஜய் நெரிசல் கொலை வழக்குப் புலனாய்வைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து மாண்பமை முன்னாள் நீதியர் அஜய் ரஸ்தோகியை நீக்கும் படி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலிருந்து இவ்வாறான விண்ணப்பங்கள் பெருந்திரளாகத் தலமை நீதியர்க்கு செல்லட்டும். நாம் பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடுமையை மறக்கவில்லை என்றால், கரூரில் 41 பேர் கொல்லப்படக் காரணமானவர்களைக் கூண்டிலேற்றாமல் ஓய மாட்டோம் என்றால், அதிகார உச்சியின் சூழ்ச்சிகளை நாம் விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்றால். நமது குரல் இந்திய உச்ச நீதிமன்றச் சுவர்களில் மோதி ஒலிக்கட்டும்: தலைமை நீதியர் பி.ஆர். கவாய் அவர்களே! அஜய் ரஸ்தோகியை கரூர் விசாரணைப் பொறுப்பிலிருந்து உடனே நீக்குங்கள்!
தோழர் தியாகு, பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
Comments are closed, but trackbacks and pingbacks are open.