சவக்கிடங்கிலிருந்து ஒலிக்கும் நீதிக்கான குரல் !
சுர்ஜித் என்கிற இளைஞனுக்கு வயது 24. நவநாகரீக இளைஞன். ஆங்கிலம் தெரியும். படித்தவன். அறிவியல் முன்னேற்றங்களை தெரிந்து வைத்திருப்பவன். அவனது பெற்றோர்கள் இருவரும் காவல்துறையில் பணிபுரிகின்றனர். பணத்திற்கு பஞ்சமில்லை. அந்தஸ்த்திற்கும் குறைச்சல் இல்லை. அவனது அக்கா சுபாஷினி சித்தா மருத்துவர். அடுத்த 5 ஆண்டுகளில் அவனுக்கு திருமணம் நடந்திருக்கும். வசதி மிக்க நடுத்தர வாழ்க்கையில் நுழைந்தும் இருப்பான். அவன் அப்படி இருக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். ஆனால் அவனது அத்தனை விருப்பங்களும் கனவுகளும் நொறுக்கப்பட்டு சிறையில் இருக்கிறான்.
ஆங்கில புலமை, பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தும் கேடு கெட்ட சாதி வெறியனாகவும் இருந்திருக்கிறான். தன் அக்காவை விரும்பிய கவின் செல்வகணேஷை கடந்த 27 ஜுலை 2025 பிற்பகல் 2.30 மணியளவில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருக்கிறான். அவன் அரிவாளால் கவினின் உடலில் 4 இடங்களில் வெட்டியிருக்கிறான். நான்கும் கழுத்து மற்றும் தலைப்பகுதி. உடலில் சிறு காயம் கூட இல்லை. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கவின் உயிரை விட்டிருக்கிறான். கூலிப்படை கும்பல் போன்று அவனது வெட்டுக்கள் இருந்தன.
உடுமலைப்பேட்டையில் சங்கரை வெட்டிய கோரப்படுகொலை, திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் வெட்டிய கொடூர படுகொலை, அருப்புக்கோட்டையில் அழகேந்திரனின் தலையையும் ஆணுறுப்பையும் வெட்டிய குரூர படுகொலை போன்றவை போன்று இல்லாமல் சைலன்சாக சில விநாடிகளில் கவினின் உயிரை காவு வாங்கியிருக்கிறான் சுர்ஜித்.

பட்டியல் சாதி இளைஞன் எப்படி தன் அக்காவை காதலிக்கலாம்? என்கிற ஆத்திரம் தான் இப்படுகொலைக்கு மையக்காரணம். எம் புள்ள போட்டா மட்டும் எல்லா ஊடகத்துலயும் வருகிறது. ஆனால் என் புள்ளய காதலிச்ச அந்த சுபாஷினி போட்டாவும் அவ அப்பன், ஆத்தா போட்டா மட்டும் ஏன் எந்த ஊடகத்திலயும் வரல? குற்றவாளிகளின் முகத்தை சமூகத்தில் காட்ட மறுப்பது இக்கொலைக்கு உடந்தைதானே என்று கேட்ட கவினின் தாயார் தமிழ்செல்விக்கு பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தேன்.
எப்போதும் பெண்களிடத்தில் ஆழமான தெளிவும் சமூகம் குறித்த புரிதலும் ஆண்களைவிட அதிகம் இருக்கும். கவினும் சுபாஷினியும் நண்பர்களாகத்தான் பழகினார்கள் காதலிக்கவில்லை என்று கவினின் தரப்பில் உள்ள ஆண்கள் கூறினார்கள். ஆனால் பெண்களோ அப்படி அல்ல காதலிப்பது என்ன சமூக குற்றமா? ஒரு இளம் பெண்ணும் ஒரு இளம் பையனும் காதலிப்பது இயல்புதானே, எங்க வீட்டு பையன் இன்ஜினியர். மாதம் 50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறான். அந்த பெண்ணும் எங்க பையன காதலிச்சது. இன்னும் சொல்லப்போனால் அந்த பொண்ணுதான் எங்க பையனை வற்புறுத்தி காதலிக்க வைச்சது. இப்போது கவினை காதலிக்கவில்லை என்று அவ சொன்னதாக செய்தில வருது. அந்த செய்தி மட்டும் உண்மையாக இருந்தால் அவளின் துரோகத்தை மன்னிக்கவே முடியாது என்று உணர்வுபூர்வமாக அதே நேரத்தில் நிதானமாகவும் கூறினார்கள்.
சாதி என்பது வன்மம். அது கொடூரமான துரோகம். மனிதர்களின் இரத்தம் குடிக்கும் குரூர பசி கொண்ட மிருகம். அது எத்தகைய மனிதர்களையும் அழித்தொழிக்கும். கவின் படுகொலையின் பின்னணியில் இருக்கும் சதியை ஆராயும் போது அதிர்ச்சியும் வேதனையும் தான் ஏற்படுகிறது.

கவினும் சுபாஷினியும் ஒன்றாக படித்தவர்கள். பத்து வருடங்களாக பழக்கத்தில் இருப்பவர்கள். ஏழு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு சுபாஷினியின் தந்தை சரவணனும் தாய் கிருஷ்ணகுமாரியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் தமிழ்செல்விக்கு தெரியவர, பதட்டத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார். சுபாஷினியின் குடும்பத்தினரால் கவினின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று அஞ்சியும் இருக்கிறார். அந்த பெண்ணுடன் பழக வேண்டாம், அவளது உறவினை நிறுத்திக் கொள் என்று தன் மகனுக்கு அறிவுறுத்தியும் உள்ளார்.
இதனை அறிந்த சுபாஷினி அலைப்பேசி மூலமாக தமிழ்செல்வியை தொடர்பு கொண்டு நான் உங்கள் மகனை காதலிக்கிறேன். அவரை தான் திருமணம் செய்து கொள்வேன். இதுகுறித்து பேச உங்களை நேரில் சந்திக்க வருகிறேன் என்று கூற, அதெல்லாம் வேண்டாம் தயவுசெய்து என் மகனுடன் பழகாதே என்று கெஞ்சியும் உள்ளார். இதெல்லாம் ஆறு மாதம் முன்பு நடந்த சம்பவங்கள்.
இந்நிலையில் கவினின் தாத்தா முத்துமாலை கீழே விழுந்து அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயத்திற்கு திருச்செந்தூரில் சிகிச்சையும் எடுத்திருக்கிறார் முத்துமாலை. ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை, இதனை அறிந்த சுபாஷினி அலைப்பேசி மூலமாக கவினை தொடர்பு கொண்டு உங்கள் தாத்தாவை நான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள். இங்கு நல்ல முறையில் சிகிச்சை கொடுத்து குணமாக்குவார்கள் என்று கூறியிருக்கிறார். சுபாஷினி கூறிய விபரத்தை தனது தாயாரான தமிழ்செல்வியிடம் கூற, அதற்கு தமிழ்செல்வி தயங்கி இருக்கிறார். ஆனாலும் தற்போது கவினுக்கும் சுபாஷினிக்கும் எந்த உறவும் இருக்காது. அதே நேரத்தில் தன் அப்பாவின் சிகிச்சை முக்கியம் என்று கருதிய தமிழ்செல்வி, முதலில் நாம் சுபாஷினியை சந்தித்து சிகிச்சை விபரங்களை கேட்டறிவோம். அதன்பிறகு தாத்தாவை சிகிச்சை அழைத்து வருவோம் என்று கவினிடம் கூறியிருக்கிறார்.
இதனடிப்படையில் 27.07.2025 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் தமிழ்செல்வி, கவின், தமிழ்செல்வியின் இளைய மகன் பிரவின் செல்கர், சகோதரர் பாலகணேஷ் ஆகிய 4 பேரும் சுபாஷினி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சுபாஷினியை சந்தித்து சிகிச்சை குறித்த விபரம் கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு சுபாஷினியின் தம்பி சுர்ஜித் வந்திருக்கிறார்.

கவினை தனியாக அழைத்த சுர்ஜித், நீங்கள் என் அக்காவை காதலிப்பது எனக்கு தெரியும். இதுகுறித்து உங்களிடம் பேசுவதற்காக என் அப்பா, அம்மா காத்திருக்கின்றனர். நீங்கள் என்னோடு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். சுர்ஜித் கூறியதை உண்மை என்று நம்பிய கவின் அப்பாவியாக அவனுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றிருக்கிறார். பாளையங்கோட்டை, கேடிசி நகரில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய சுர்ஜித், கீழே இறங்கு என்று கூறியிருக்கிறார். கவினும் வாகனத்தை விட்டு கீழே இறங்கியிருக்கிறார். உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் அக்காவ காதலிப்ப பள்ளத் தேவிடியா மகனே என்று கூறிக் கொண்டு அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பிற்பகல் 2.30 மணியளவில் நடந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் பலத்த சந்தேகம் உள்ளது. சுபாஷினி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு எதேச்சையாக தன் அக்காவை பார்க்க வந்த சுர்ஜித்துக்கு எப்படி கவினும் அங்கு வந்திருக்கிறான் என்கிற விபரம் தெரியும்? அதற்கு முன்பே குறிப்பிட்ட இடத்தில் அரிவாளை பதுக்கியும் வைத்திருக்கிறான் சுர்ஜித்.
தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை சாதி ரீதியான ஆணவப்படுகொலையில் 65 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் தமிழ்நாடு அரசு கடந்த 2017 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் 3 ஆணவக்கொலை நடந்திருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த நவம்பர் 2019ம் ஆண்டு ஓசூர் அருகே கர்நாடகாவில் உள்ள ஏரி ஒன்றில் நந்திஷ் – சுவாதி என்கிற இருவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு அவர்களது உடல் வீசப்பட்டு இருந்தது. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வருவோம் என்றார். ஆனால் கடந்த வருடம் 2024ம் ஆண்டு ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் தேவையில்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதுமட்டுமல்ல எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் இருக்கிற பட்சத்தில் எதற்கு ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் என்று விளக்கமும் கொடுத்திருந்தார்.
பாதிக்கப்படுபவர்கள் பட்டியல் சாதியாக இருந்தால் மட்டும் தான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய முடியும். பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்குள் நடக்கும் ஆணவக் கொலையோ அல்லது பட்டியல் சாதி இளைஞர்கள் காதலிக்கக்கூடிய பெண்களை கொலை செய்கிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதோ அல்லது பட்டியல் சாதிக்குள் நடக்கக்கூடிய ஆணவக்கொலையை பிஎன்எஸ் கீழ் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமே தவிர வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது.
கடந்த 30 ஆண்டுகளில் 7 ஆணவக் கொலைகளுக்கு மட்டுமே மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்துள்ளது. 1.திருநெல்வேலி கல்பனா, 2.உடுமலைபேட்டை சங்கர், 3.திருவாரூர் அமிர்தவள்ளி, 4.நாகப்பட்டிணம் அபிராமி, 5.விருத்தாசலம் கண்ணகி – முருகேசன், 6.ஓமலூர் கோகுல்ராஜ், 7.மேட்டுப்பாளையம் வர்சினி – கனகராஜ் ஆகிய 7 வழக்குகளுக்கு மட்டும் தான் தீர்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது. அதுவும் குற்றவாளிகள் மேல் முறையீடு செய்து தண்டனையிலிருந்து விடுதலை ஆகிவிடுகின்றனர் அல்லது தண்டனையை குறைக்கவும் செய்து விடுகின்றனர்.
சாதி பெருமிதம், ஆணாதிக்கம், பெண்ணுடைய உடம்பை சாதியை உற்பத்தி பண்ணக்கூடிய தூய்மை நிறுவனமாக பார்க்கக்கூடிய போக்கு, அந்தஸ்து போன்ற பல காரணங்களால் ஆணவப்படுகொலைகள் நடந்து வருகின்றன.
இந்த சம்பவத்தில், கவின் நன்கு படித்தவன். நல்ல வேலையில் இருப்பவன். கை நிறைய சம்பளமும் வாங்குபவன். அவனது குடும்பத்தினருக்கு நிறைய நிலங்கள் உள்ளன. ஓரளவு வசதியான குடும்பம். அந்தஸ்திலும் பொருளாதாரத்திலும் எந்த நிலையிலும் அவன் குறைந்தவன் அல்ல. ஆனால் சாதியில் கீழானவன் என்று கருதி இந்த படுபாதக செயலை செய்திருக்கிறான் சுர்ஜித்.

படிப்பு, அந்தஸ்து, மரியாதை போன்ற எல்லாவற்றையும் தாண்டி பத்து பைசாவுக்கு பயனில்லாத சாதி மசுரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் அற்பர்களும் அந்த அற்பர்களுக்கு துணை போகிற சாதி பொறுக்கிகளும் அந்த சாதி பொறுக்கிகளை வளர்த்தெடுக்கக்கூடிய சாதி சங்க எருமை மாடுகளும் என்றைக்கு திருந்துவார்கள் என்று தெரியவில்லை. இந்த நாகரீக சமூகத்தில் இதுபோன்ற படுகொலைகளை ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
நான்கு நாட்களாக தன் நீதிக்காக சடலமாக கிடக்கிறான் கவின். அவனின் பெயரின் அர்த்தம் அழகு. என் புள்ள உடம்பு எத்தனை நாள் ஆனாலும் மருத்துவமனையில் கிடக்கட்டும். ஆனால் எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். அதுவரை நாங்கள் இங்கு போராடுகிறோம். என் மகன் தன்னந்தனியாக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறான் என்று சொன்ன தமிழ்செல்விக்கு இந்த தமிழ் சிவில் சமூகம் என்ன பதிலை சொல்லப்போகிறது?
– எவிடென்ஸ் கதிர்