EVM மெஷினில் கோல் மால் : பழையபடி வாக்குச்சீட்டு முறைதான் வேண்டும் ! விடாப்பிடியாக நிற்கும் விசிக !
EVM மெஷினில் கோல் மால் : பழையபடி வாக்குச்சீட்டு முறைதான் வேண்டும் ! விடாப்பிடியாக நிற்கும் விசிக !
நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவரும் சூழலில், மின்னணு வாக்கு இயந்திர பயன்பாடு குறித்து சர்ச்சைகளை முன்வைத்து, பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் தழுவிய அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது.
திருச்சியில், டிச-04 அன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் மாநகர கிழக்கு மாவட்ட செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர் சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் முசிறி கலைச்செல்வன், குருஅன்புச்செல்வம் ஆகிய முன்னிலையில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை சிறப்புரையாற்றினார்.
மேலும், சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் வெல்ல பாதிப்புகளை தீவிர பாதிப்புகளாக அறிவித்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில நிர்வாகி அரசு, பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் பெல் சந்திரசேகரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் காட்டூர் புரோஸ்கான், மாநகர மேற்கு சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் காந்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்திரஜித், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீதர் உட்பட திரளான தொண்டர்களின் பங்கேற்போடு நடைபெற்றது.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் அரசியல் நோக்கம் குறித்த கேள்வியோடு, விசிகவின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரையிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “EVM என்றழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறிப்பிட்ட தூரத்திலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்பதை, அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்களும், தமிழகத்தைச் சேர்ந்த சில பொறியியல் வல்லுநர்களும் செய்முறை விளக்கங்களோடு அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி யிருக்கின்றனர்.
நாடுமுழுவதும் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை மேலோங்கியிருப்பதை அரசியல் விமர்சகர்கள் கோடிட்டு காட்டியிருந்த சூழலில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக, மிசோரம் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் வாக்களித்த 600 வாக்காளர்களுள் பெரும்பான்மையோர் பாஜக அல்லாத கட்சிக்கு வாக்களித்திருந்த நிலையில், அந்தக் குறிப்பிட்ட கட்சிகளுக்கு நூற்றுக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியிருக்கும் தகவலும் தற்போது வெளியாகியிருக்கிறது.
சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, யாருக்கு நாம் வாக்களித்திருக்கிறோம் என்பதை கண்கூடாக காணும் வகையிலான வாக்குச்சீட்டு நடைமுறையை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில்தான் எழுச்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வழிகாட்டலில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்திருக்கிறோம்.” என்கிறார், தங்கதுரை.
இந்திய அளவில் ஒரு சில அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீதான சந்தேகத்தை எழுப்பியிருக்கும் நிலையில், தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமே இந்த விவகாரத்தை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
– ஆதிரன்.