கோபியர் கொஞ்சும் கிருஷ்ண அவதாரம் – ஆன்மீக பயணம்
தசாவதாரத்தில் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணா அவதாரம் ஆகும். இதனை படித்து அந்த மாயவன் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் பெறுங்கள்! வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம். இந்த அவதாரத்தில் காண்பவர் தம் மனதைக் கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினார் கிருஷ்ணர். கம்சனை கொன்றும் பஞ்ச பாண்டவர்களை காத்தும் தர்மத்தை நிலை நாட்டினார்.
ஒருமுறை பூமாதேவி நாராயணனிடம் பகவானே பூமியில் நடக்கும் அக்கிரமங்களை என்னால் தாங்க முடியவில்லை விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என வேண்டினாள். அதற்கு நாராயணனும் சற்று பொறுமையாக இருக்கும்படி கூறினார். பல காலம் கழித்து பூமாதேவி நாராயணா தாங்கள் சொன்னது போல் இன்று வரை பொறுமையுடன் தான் இருக்கிறேன். ஆனால், முனிவர்கள் செய்யும் யாகத்தை கெடுப்பவர்கள், நாத்திகர்கள், காமுகர்கள், கொலை செய்பவர்கள் கொள்ளை யடிப்பவர்கள், உழைப்பை திருடுபவர்கள் ஆகியோரை சேர்த்து சுமக்கிறேன். இவர்கள் எடையை தாங்கும் சக்தி எனக்கு இல்லை பிரபு. இவர்களை அழிக்கும் அளவிற்கு பலமும் என்னிடம் இல்லை. புருஷோத்தமா! என்னையும் நான் தாங்கும் நல்லவர்களையும் இவர்களிடம் இருந்து காப்பாற்று.
பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக்கும் கேட்டது. பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்து எழுந்தார். சிவனும் பிரம்மனும் மற்ற தேவர்களும் முன் செல்ல பூமாதேவியும் அவர்களின் பின்னால் நாராயணனை சந்திக்க சென்றனர். இவர்கள் அனைவரும் வைகுண்டத்தில் நாராயணனின் வரவுக்காக காத்திருக்கிறார்கள். நாராயணன் வரவில்லை ஆனால், பிரம்மாவுக்கு ஒரு செய்தி மட்டுமே வந்தது பிரம்மனே! பூமாதேவியின் கவலையை விடச் சொல் உலகத்தில் உள்ள பாவிகளை அழிக்க நானே பூலோகத்தில் பிறக்கப் போகிறேன். அதற்கு முன்னதாக தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் உள்ள யது வம்சம் (இடையர் குலம்) குடும்பங்களில் பிறக்க வேண்டும். எனக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதே அந்த செய்தி. பிரம்மா மகிழந்தார். பூமாதேவிக்கு தகவல் தெரிவித்தார் சிவனும் மற்ற தேவர்களும் மகிழ்ச்சி உற்றனர். தங்கள் இருப்பிடத்திற்கு சென்றனர்.
எல்லா தேவர்களும் யது குலத்தில் அவதரித்தனர். யது குலத்தில் அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர் இவருக்கு தேவகர் என்பவரின் மகள் தேவகியை பெண் பார்த்து நிச்சயம் ஆயிற்று. தேவகியின் அண்ணன் உக்கிரசேனன். போஜகுல மக்களின் ராஜாவாக இருந்தார். அவருக்கு ஒரு மகன் பெயர் கம்சன். தேவகி கம்சனின் சித்தப்பா மகள். கம்சன் தோற்றத்தால் தான் மனிதனே தவிர உள்ளத்தால் அரக்கன். ஒரு நாள் தேவகியை மணந்தார் வசுதேவர். அதன் பின் நடந்தவை எட்டாவது அவதாரம் ஆகிய பலராமன் அவதாரத்தில் பார்த்திருப்போம். ஏழாவது குழந்தையாக பலராமன் பிறந்தார். வசு தேவரையும் தேவகியையும் சிறையில் இட்டான் கம்சன்.
ஒரு நாள் நாரதர் கம்சனை காண வந்தார். கம்சன் அவரை வரவேற்று ஆசனம் அளித்து உபசரித்தான். அவர் கம்சனிடம் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக நான் ஒரு ரகசியத்தை உனக்கு சொல்கிறேன். தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறக்க போவது உறுதி. அது விஷ்ணுவின் அவதாரம் என்பதை தெரிந்து கொள். அதற்கு முன்னதாக யது குலத்தில் தேவர்களே குழந்தைகளாக வந்து பிறக்கப் போகிறார்கள். தங்கைக்கு பிறந்த முதல் குழந்தையும், இனி பிறக்கப்போகும் குழந்தைகளும் எட்டாவது குழந்தைக்கு உதவி செய்வதாகவே பிறக்கப் போகின்றன. எனவே நீ! உன் தங்கைக்கு பிறக்கும் குழந்தைகளை கொன்றுவிடு. அதில் எது விஷ்ணு அம்சமுடையது என்று கண்டுபிடிப்பது கஷ்டம் என்று தூபம் போட்டார். அவ்வளவுதான் கம்சனின் மிருக குணம் தலைதூக்கியது. நாரதரே! காலம் முழுவதும் நான் உங்களுக்கு கடமைப்பட்டவன். இனி! என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்றவன் யார் அங்கே உடனே வசு தேவரையும் தேவகியையும் பாதாள சிறையில் அடையுங்கள் என்றான்.
வசுதேவருக்கு பிறந்த குழந்தை அஷ்டவ சுக்கள் எனப்பட்டனர். இவர்கள் ஒரு சாபத்தின் விளைவாக பூமியில் பிறந்து உடனே இறந்து இறைவனை அடைய விரும்பினர். அதன்படி அவர்களில் ஆறு பேர் இறைவனடி சேர்ந்தனர். ஏழாவது குழந்தையாக தேவதையின் வயிற்றில் பிறக்க கிருஷ்ணர் தன்னை தாங்கும் அனந்தனை (நாகம்) அனுப்பி வைத்தார். கிருஷ்ண அவதாரத்துக்கு முந்தைய அவதாரத்தில் அனந்தன் ராமனின் தம்பி லட்சுமணன் ஆகப் பிறந்து தனக்கு சேவை செய்தார். அதற்கு நன்றி சொல்லும் வகையில் இப்பிறப்பில் தனது அண்ணனாக அனந்தனை அனுப்ப முடிவு எடுத்தாராம் பரமாத்மா. இவரே பலராமர் எனப்பட்டார். கிருஷ்ணரிடமே பல மாய சக்திகள் உண்டு என்றும் அதில் ஒரு சக்தியே அனந்தனாகிய பலராம் என்றும் கிருஷ்ண பக்தர்கள் சொல்வார்கள்.
அதாவது இறைவனை யாராலும் தாங்க முடியாது அவரே தன்னை தாங்க முடியும் எனவே கிருஷ்ணரே அனந்தனாகிய பாம்பு வடிவில் இருந்தார் என்றும் சொல்வதுண்டு. இதே கிருஷ்ணருக்குள் இன்னொரு பெண் சக்தியும் அடங்கிக் கிடந்தது அவளுக்கு யோக மாயை என பெயர். மேலும், பலராமனின் கரு பலவந்தமாக இன்னொரு பெண்ணின் வயிற்றுக்கு ஈர்க்கப்பட்டதால் அவரை ஆகர்ஷ்னன் என்றும் ரமணன் என்றும் சொல்வார்கள். அவரை யார் உளமாற நினைக்கிறார்களோ அவர்களுக்கு அவரே குழந்தையாவார் என்பது இதன் உட்கருத்து. ஆறு குழந்தைகளை கொன்ற பாவமும் ஒரு குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்து போகவும் தன் மூலம் தேவகிக்கு ஏற்பட்ட பயமே என்பதால் அதையும் ஏழாவது கொலையாக கருதி அதனால் தனக்கு துன்பம் விலையுமோ? என்று அச்சமும் கொண்டிருந்தான் கம்சன். கிருஷ்ணர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்தார்.
ஒரு நன்னாளில் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை வசுதேவர் பார்த்தார் பரவசத்தில் உச்சிக்கே போனார். ஆம்! குழந்தையின் கைகளில் சங்கு சக்கரம் தாமரை கதாயுதம் ஆகியவை இருந்தன. மஞ்சள் பட்டு உடுத்தி ஆபரணங்களும் அணிந்து இருந்தான் சின்ன கண்ணன். பிறந்த குழந்தைக்கு நான்கு கைகள் மகன் சாட்சார் பரமாத்மாவே என வசுதேவர் மகிழ்ச்சியில் மூழ்கி ரசித்துக் கொண்டிருந்தார். கடவுளைப் பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்த வேளையில் அண்ணன் கம்சன் அவளது நினைவில் ஊசலாடினான். அவள் அந்த தெய்வக் குழந்தை இடம் பரந்தாமா! உலகம் உய்விக்க வந்த விளக்கே தாங்கள் உங்கள் சொந்தக் கோலத்தில் எங்களிடம் எப்படி வளர முடியும் என் அண்ணன் உங்களை கொல்ல திட்டமிட்டு இருக்கிறான். அத்துடன் எங்களையும் அவன் கொன்றுவிடுவான். என்னை திருமணம் செய்த பாவத்திற்காக என் கணவரும் உயர் விடுவது எவ்வகையில் நியாயம். தாங்கள் தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என பிரார்த்தித்தால் அந்த கணமே குழந்தை விஸ்வரூபம் எடுத்து என்னைப் பெற்ற புண்ணியவதிக்கும் என் தந்தை வசுதேவருக்கும் நமஸ்காரம். தாயே!
முன் ஒரு பிறவியில் தந்தை வசுதேவர் சுதபா என்ற பெயரில் ஒரு நாட்டின் மன்னனாக இருந்தார். தாயாக நீ பிருச்னி என்ற பெயருடன் அவரது மனைவியாய் இருந்தாய். அப்போது இந்தப் பூவுலகில் மக்கள் தொகை குறைந்தது இதனால் கலவரம் அடைந்த பிரம்மன் உன்னை அணுகி மக்கள் தொகையை அதிகரிக்க உதவ வேண்டும் என்றான். ஆனால், நீயும் சுதாவும் ஐம்புலன்களையும் அடக்கி விரதம் ஒன்றை அனுஷ்டித்து கொண்டிருந்தீர்கள். இதனால் பிரம்மாவுக்கு நீங்கள் கட்டுப்படவில்லை என்று கோபமடைந்து பிரம்மன் புயலை உருவாக்கி தவத்தை கெடுக்க முயன்றான். ஆயினும், உங்களை இயற்கை கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில், உங்கள் இதயம் பரிசுத்தம் ஆயிருந்தது. பரிசுத்தமான மனம் எங்கே உள்ளதோ அங்கே இயற்கை பாதிப்பை ஏற்படுத்தாது. இப்படி பன்னிரண்டு ஆயிரம் தேவ ஆண்டுகள் விரதம் அனுஷ்டித்தீர்கள்.
உங்கள் மனம் முழுவதும் என்னை பற்றிய சிந்தனையே தவிர வேறில்லை. அப்போதும் நான் உங்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென கேட்டேன். நீங்கள் வைகுண்டம் வர விரும்புவீர்கள் என எண்ணினேன். ஆனால், நீயோ பரந்தாமா! நீ என் வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்றாய். நானும் சம்மதித்தேன். அதன் பின் நீங்கள் தவ வாழ்க்கையை நிறுத்திவிட்டு இல்லறத்தில் புகுந்தீர்கள். நான் உங்கள் வயிற்றில் பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாய் பிறந்தேன். அடுத்த பிறவியில் நீங்கள் காஷ்யப்பர் அதிதி என்ற தம்பதியராய் பிறந்தீர்கள். அந்தப் பிறவியில் நான் உபேந்திரன் என்ற பெயரில் உங்களுக்கு பிறந்தேன். இப்போது கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்திருக்கிறேன். நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியதுதான். பல பிறவிகளில் என்னை அன்புடன் மகனாய் வளர்த்த உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கம்சன் இடமிருந்து உங்களை காப்பது என் கடமை நீங்கள் உடனே கோகுலத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கே வசுதேவரின் நண்பர் நந்த கோப்பனுக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டுவந்து விடுங்கள். என்னை நந்த கோபரின் மனைவி யசோதை இடம் கொடுத்து வளர்க்க சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு சாதாரண குழந்தையாக உருமாறி விட்டார்.
பின்னர் ஒரு குழந்தை பிறந்துள்ள நினைவும் தன்னை கோகுலத்துக்கு கொண்டு போக சொன்னதையும் தவிர மற்ற எல்லாவற்றையும் தன் தாய் தந்தைக்கு மறக்கச் செய்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். கனவிலிருந்து விழித்தவர் போன்ற உணர்வே வசூ தேவருக்கு ஏற்பட்டது. குழந்தையை எடுத்துப் போகும் ஏற்பாட்டை செய்தார். அவர் குழந்தையை தொட்டாரோ இல்லையோ கையில் இருந்த விலங்குகள் கழன்று விட்டன. சிறை கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்கள் மயக்கம் வந்தது போன்ற தூக்கத்தில் கிடந்தனர். அங்கு கிடந்த ஒரு பழைய கூடையில் தன் அங்க வஸ்திரத்தை விரித்தார். குழந்தையை அதற்குள் வைத்தார். பெண் குழந்தை பெற்றிருந்த யசோதை மயக்கத்தில் இருந்து எழவில்லை. அவளுக்கு என்ன குழந்தை பிறந்தது என்று பார்ப்பதற்குள் மயங்கி விட்டாள். சப்தமின்றி வசுதேவர் கண்ணனை யசோதையின் அருகில் கிடத்தினார். பெண் குழந்தையை எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு சிறைக்கு வந்து சேர்ந்தார். குழந்தை வீறிட்டு அழவே காவலர்கள் விழித்தனர்.
குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்கு பறந்தது. மிகப்பெரிய வாளுடன் வசுதேவர் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் புகுந்தான் கம்சன். என் உயிரை குடிக்க வந்த அந்த எமன் எங்கே? அவனுக்கு எமனாய் நான் வந்திருக்கிறேன் என்ற கம்சனின் பாதத்தில் விழுந்தால் தேவகி. அண்ணா! ஏதோ ஒரு அசரீரி சொன்னது என்பதற்காக என் ஆண் குழந்தைகளை எல்லாம் கொன்றாய். இப்போது பிறந்திருப்பது பெண் அசரீரியின் வாக்கு உண்மையே என்றாலும் கூட என் வயிற்றில் பிறக்கும் எட்டாவது ஆண் பிள்ளையால் தான் உனக்கு மரணமே தவிர பெண்ணால் இல்லை பார்த்தாயா இது பெண் குழந்தை என குழந்தையை நீட்டினாள். கொடிய உள்ளம் கொண்ட கம்சன் குழந்தையின் கால்களை பிடித்தான். தலையை சுழற்சியில் ஓங்கி அடித்தான். அவ்வளவுதான் மதுரா புரியே கிடு கிடுக்கும் வகையில் ஓங்கி ஒலித்த சிரிப்புடன் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது அந்த குழந்தை. அந்த நடுநிசியில் சூரியன் உதித்து விட்டது போல ஒரு பிரகாசம் கையில் சங்கு சக்கரம் மின்ன, திரிசூரம் வாள் பளபளக்க, மண்டை ஓடுகள் மலையாய் கழுத்தை அலங்கரித்த அந்தப் பெண் ஆங்காரமாய் சிரித்தாள். கொடியவனே! உன் தங்கைக்கு நீ இழைத்த கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா மனிதனாய் பிறந்தவன் அழிவது உறுதி என்று தெரிந்திருந்தும் இவ்வுலகம் உள்ளளவும் உயிர் வாழ போவதாக எண்ணி அப்பாவி குழந்தைகளை கொன்றாயே? உன்னை கொல்ல போகிறவன் பிறந்து விட்டானடா! அவன் ஒழிந்து வளர்கிறான். உன் அழிவு நெருங்கி விட்டது. இவர்களை விடுதலை செய்து ஒரு புண்ணியத்தையாவது தேடிக் கொள் என்றாள். அத்துடன் அவள் மறைந்து விட்டாள்.
கம்சனின் மனம் அந்த கணமே மாறிவிட்டது. என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறி வசு தேவரின் கால்களில் விழுந்து வணங்கினான். தன்னையும் அறியாமல் அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது. அதன் பின் கம்சன் ஒரு நாள் அரசவையில் வீற்றிருந்தான். அவனுடைய சகாக்கள் வந்தனர். கம்சா! நீ ஏதோ தியாகி போல உன் தங்கையை விடுவித்து விட்டாய். உன்னை கொல்ல பிறந்து இருப்பவன் விஷ்ணு என்பதை நீ அறிவாய். எங்கோ அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகிறது அவன் வளர்ந்து அதன் பிறகு தானே உன்னை கொல்ல வருவான் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டாயோ? அசரீரி சொன்னதை ஒரு பொருட்டாக நீ மதிக்கவில்லை. இதன் பலனை நீ அனுபவிக்கத்தான் போகிறாய் என கம்சனை எச்சரித்தனர். உடனே கம்சன் அரசவையைக் கூட்டி நமது அதிகார எல்லைக்குள் கடந்த பத்து நாட்களுக்குள் பிறந்துள்ள எல்லா குழந்தைகளையும் கொன்று விருமாறு கூறினான். இந்த தகவல் வசு தேவனுக்கு தெரியவந்தது நந்த கோப்பருக்கு இதை தெரிவித்து கோகுலத்தில் இருக்கும் தன் குழந்தைகளான கிருஷ்ணரையும், பலராமனையும் பாதுகாக்க ஏற்பாடு செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.
இந்நேரத்தில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவே நம்பிவிட்ட கோகுல தலைவர் ஜாதகம் கணிக்க முடிவு செய்தார். தன்மகன் கிருஷ்ணரின் ஜாதக கணிப்பு திருநாளை மலை போல் செல்வத்தை குவித்து கொண்டாடினார். நந்தகோபர் பசுக்களையும், பொன்னையும், நவ ரத்தினங்களையும் தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது என்பதால் பிராமணர்களுக்கு இத்தகைய தகுதி இருப்பதால் அவர்களுக்கு தங்கள் பொருளை தானமாக கொடுத்து தங்களை புனிதப்படுத்திக் கொண்டனர் கோகுல வாசிகள். நந்தகோபர் மிக அதிகமாகவே தானம் கொடுத்தார். ஏனெனில், அவர் வீட்டில் லட்சுமியின் மணவாளனே பிறந்திருந்தார். செல்வத்திற்கு ஏது குறை கிருஷ்ணனுக்கு மிக சிறப்பாக ஜாதக கணிப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
இதன் பிறகு கோகுலத்தின் சார்பில் கம்சனுக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையை செலுத்த நந்தகோபர் மதுராபுரி வந்தடைந்தார். அவரை வசுதேவர் சந்தித்தார். குழந்தையை கொல்ல கம்சன் முடிவெடுத்து இருக்கிறான் என்ற விவரத்தை நேரடியாக சொல்லி அவரை பயமுறுத்தாமல் கோகுலத்தின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் வரப்போகிறது நீங்கள் கவனமாக இருப்பது நல்லது என்று மட்டும் சொல்லி வைத்தார். வசுதேவர், சவுத்ரியர், நந்தகோபர் வைசியர் இருப்பினும் சிறந்த நண்பர்களாக திகழ்ந்தனர். தன் நண்பர் தனக்கு தந்த எச்சரிக்கையை மறக்காத நந்தகோபர் மிக கவனமாகவே இருந்தார். இதற்குள் கம்சன் குழந்தையை கொல்வதற்குரிய ஏற்பாட்டை செய்து விட்டான். சூனியக்காரியான பூதனா என்பவளை அழைத்தான். குழந்தைகளை கொல்லும் பொறுப்பை ஒப்படைத்தான். இப்படிப்பட்ட சூனியக்காரிகளை கேசரி என்பார்கள்.
சூனியம் தெய்வ வழிபாட்டில் ஊறிப்போனவர்களை தாக்காது. கோகுலத்திலும் அதுவே நிகழ்ந்தது. பூதனா கோகுலத்தில் நுழைந்தவுடன் தன்னை பேரழகியாக மாற்றிக் கொண்டாள். முகத்தில் கனிவை படற விட்டுக் கொண்டாள். அவளது அழகும் சாந்தமும் அங்கிருந்தவர்களின் கண்களை ஏமாற்றி விட்டது. நல்லவர்களின் கண்களுக்கு கெட்டது கூட நல்லதாகத்தான் தெரியும். இதை பயன்படுத்திக் கொண்டு தன் மார்பில் நஞ்சை தடவி பல குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுக்கு அறியாமல் கொன்றாள். அவள் நந்தகோபரின் மாளிகைக்குள் நுழைந்தாள். அவள் மீது சந்தேகம் கொள்ளாத வாயிற் காவலர்கள் அவளை தடுக்கவில்லை யாரும் அறியாமல் கிருஷ்ணன் படுத்திருக்கும் அறையில் நுழைந்தாள்.
குழந்தையை பார்த்ததும் பூதனாவின் மனதில் ஏதோ சஞ்சலம் அது சாதாரண குழந்தையாக தெரியவில்லை ஏதோ ஒரு சக்தி அதனுள் மறைந்து இருப்பதை புரிந்து கொண்டாள். இருப்பினும், கம்சனின் கட்டளையை அவளால் மீற முடியுமா? குழந்தையை மடியில் வைத்தால் அவள் பாலூட்டினாள். கிருஷ்ணன் விஷபாலோடு அவளது உயிரையும் சேர்த்து குடித்தார். அவள் அலறினாள். கோகுலத்தையே அதிர வைத்தது அந்த அலறல். அது மட்டுமா? அவளது அசுர உருவம் வெளிப்பட்டது. 12 மயில் நீளத்துக்கு அவள் உடல் நீண்டது. பூதநாவின் உடலை பார்க்கவே பயங்கரமாக இருந்தது. உடனே யசோதையும், ரோகிணியும் ஓடிச்சென்று கிருஷ்ணரை தூக்கினர். தங்கள் அன்பு குழந்தை காப்பாற்றப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு கண்ணேறு பட்டு விட்டது என எண்ணி பசுவின் வாலைப் பிடித்து குழந்தையின் உடலை சுற்றி திருஷ்டி கழித்தார்கள்.
இதன் பிறகு கிருஷ்ணரை நாராயணனின் 22 நாமங்களை சொல்லி பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள். நாராயணனின் 22 திருமந்திரங்கள் சொல்வோர் அருகில் எந்த கெட்ட சக்திகளும் நெருங்குவதில்லை என நம்பிய கோகுலமக்கள் மணி மான், யக்ஞர், அச்யுதா, ஹயங்கிரிவர், கேசவர், விஷ்ணு, உருக்ரமா, ஈஸ்வரா, சக்கரதாரி, சுதசாரா, மதுசூதனா, குபேந்திரா, தார சவுயா, ஹலாதரா, ஹருஷிகேசா, நாராயணா, புருஷினி, ஹர்பா, யோகேஸ்வரா, புருஷோத்தமா, கோவிந்தா, மாதவா, வைகுண்டதிபதி என்ற நாமங்களால் அவரை பூஜித்தனர். இந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பூதனா கொடுமைக்காரி ஆக இருந்தாலும் கூட குழந்தைகளை கொன்றவள் என்றாலும் கூட கடைசி நேரத்தில் கிருஷ்ணருக்கு பாலூட்டிய காரணத்தால் அவள் வைகுண்டத்தை அடைந்தாள். அவளுக்கும் முக்தி கிடைத்தது. அவளது உடலை கோகுல வாசிகள் எரித்த போது அதிலிருந்து நறுமணம் கிளம்பியது.
மேலும், அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள். பராசுரன் கொக்காகவும், சுரிஷ்டன் காளையாகவும், கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனை கொல்ல முயன்றனர். ஆனால், ஐந்து வயதில் கண்ணன் அவர்களை துவம்சம் செய்து கொன்றார். இது போன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்ததால் அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதயும் கோகுல வாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம்பெயர்ந்தனர். அங்கும் காளிங்கமருவில் காலிங்கன் என்ற அரசன் இருந்து கொண்டு அட்டகாசம் செய்து வந்தான். கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார். இந்திரனது சூழ்ச்சியால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையை குடையாக பிடித்து பசுக்களையும் அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார்.
கண்ணன் பிறந்தது விரகு பூமி என்ற வடமதுரை. வளர்ந்தது கோகுலம். வட மதுரா முக்தி அளிக்கும் ஏழு நகரங்களில் ஒன்று. கண்ணன் என்றாலே ராதை, ருக்மணி, பாமா இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால், கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு. ருக்மணி, சத்தியபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தை, சத்யவதி, பத்திரை, இலட்சமனை இப்படி எட்டு பேர் பட்ட மகரிஷிகள். ஒவ்வொரு மனைவிக்கும் தலா பத்து குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ்பெற்றவர்கள் 18 பேர். அவர்கள் பிரத்யும்னன், அனுருதன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருகத் பானு, சித்திர பானு, விருகன், அருணன், புக்கரன், வேதபாசு, ஸ்ருத தேவன், சுருதனன், சித்திரபாஹு, விருபன், ஹநிபோக்தன்.
தீராத விளையாட்டுப் பிள்ளையாக கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.. ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது.. நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது. வெண்ணையை திருடி உண்பது போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார். கம்சன் கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பினான். ஆனால், அவர்கள் அத்தனை பேரையும் கிருஷ்ணர் கொன்று குவித்தார். அதனால் கோபம் கொண்ட கம்சன் நான் தனுர் யாகம் செய்யப் போகிறேன் அதற்கு வேண்டிய பொருட்களை எல்லாம் நந்த கோப்பரை குடும்பத்துடன் கொண்டுவரச் சொல்லுங்கள் என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறினான். அமைச்சரும் அங்கு வந்தார். உடன் பலராமனும், கண்ணனும் கம்சனின் யாக சாலைக்கு சென்றனர். வழியில் குவளய பீடம் என்னும் யானைக்கு மதம் பிடித்தது. அது துதிக்கையால் கண்ணனையும், பலராமனையும் தாக்க முயன்றது. அப்போது யானையின் தந்தத்தை உடைத்து யானையையும், பாகனையும் கொன்றார் கண்ணன். இதைக்கண்ட அனைவரும் கண்ணனை பாராட்டினார்கள்.
ஆனால், கம்சனுக்கு மட்டும் கண்ணனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வெட்டி சாய்த்து விட்டு வசுதேவர் தேவகியை கொல்லுங்கள் என்று அவன் கூறினான். உடனே, கண்ணன் தன் ஏழாவது வயதில் அவன் மீது ஏறி குதித்து அவனது தலையை பிடித்து தரையில் வேகமாக அடித்துக் கொன்றார். இத்துடன் கம்ச வதம் முடிந்தது. கம்சனின் சிறையில் இருந்த தாய், தந்தை, பாட்டனார் உக்கிரசேனர் என்று அனைவரையும் விடுவித்து கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார். கண்ணன் கம்ச வதத்திற்கு பின் மக்கள் பயமின்றி வாழ்ந்தனர். கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் சாந்தி பீவி என்ற முனிவர் ஆயக்கலைகள் 64 ஐயும் கற்கொடுத்தார். அதற்கு குரு தட்சணையாக வெகு நாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்த தனது மகனை உயிருடன் கொண்டு வந்து கொடுங்கள் என்றார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு எமனிடம் இருந்து குருவினுடைய மகனை மீட்டுக் கொடுத்தனர். மேலும், மகாபாரத போரில் பஞ்ச பாண்டவர்களுக்கு வழிகாட்டி அவர்களின் வெற்றிக்கு உதவினார். பூமியில் நிதியை நீதியையும் சம நிலையையும் நிலைநாட்டினார் கிருஷ்ணர். மனதைக் கவரும் அழகும் தெய்வீக பிரகாசமும் கொண்டவராகவும் அன்பு மற்றும் ஞானத்தின் பிரதி நிதித்துவமாகவும் போற்றப்படுகிறார். பூமியில் நிலவும் அக்கிரமங்களையும் தீமைகளையும் அழித்து தர்மத்தையும் நீதியையும் நிலை நாட்டுவதே இந்த அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு துவாபாரயுக முடிவில் கிருஷ்ணவதாரம் நிறைவு பெற்றது.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.