சரியோ, தப்போ ஒரு பக்கம் நின்று கட்சிப் பணியாற்றுங்கள் !
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் திமுக மாவட்ட துணைச்செயலராக பணியாற்றி வந்தவர். திருச்சி மாவட்ட திமுகவில் குறிப்பிடத்தகுந்த களப்பணியாளர்களுள் ஒருவர் குடமுருட்டி சேகர். எந்தக் கருத்தையும் துணிச்சலாகவும், தடாலடியாகவும் முன்வைக்கக்கூடியவர்.
கட்சியினரிடையே ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக, கடந்த மூன்றரை ஆண்டுகள் கட்சி நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்தவர். சமீபத்தில் தனது ஆதரவாளர்களோடு, திமுகவின் முதன்மைசெயலரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து சமாதானம் ஆகியிருக்கிறார். இந்த திடீர் மனமாற்றம் குறித்து, அங்குசம் சார்பில் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்திருந்தோம்.
”அமைச்சர் நேருவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினையும் கிடையாது. எனக்கு ஆகாதவர்கள் சிலர், என்னைப்பற்றி அவரிடம் தவறாக சொல்லிவிட்டார்கள். அவரும் இதுபற்றி என்னிடம் நேரடியாக கேட்டதில்லை. நானும் விளக்கம் கொடுக்கவுமில்லை. அப்படியே ஒதுங்கி இருந்துவிட்டேன். அவ்வளவுதான்.
இந்நிலையில்தான், நானே அமைச்சருக்கு போன் போட்டேன். அவரும், நீயாதான் போன. நான் ஒன்னும் உன்னை வெளியே போக சொல்லவில்லை. எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார். எனக்கு தெரிஞ்சு நேரு யாரையும் கட்சியை விட்டு நீக்கினது இல்ல. அதன்பிறகே, அவரை நான் சந்தித்தேன். பழைய மரியாதையோடு என்னை மீண்டும் சேர்த்துக் கொண்டார். திருச்சினா நேரு. நேருன்னா திருச்சி. எல்லாமே, அவர்தான். இனிமேல், அவரிடம் இருப்பதுதான் மரியாதை என்று எனக்கே தோன்றியது.
நான் திமுகவின் கிளை செயலாளராக இருந்து, அந்தநல்லூர் ஒன்றிய துணைச்செயலராக இருந்து, அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினராக ஆனேன். அதன்பிறகே, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் துணைச்செயலர் ஆனேன். அமைச்சர் மாவட்ட செயலராக இருந்த சமயத்தில், தொடர்ந்து மூன்று முறை மாவட்ட துணைச்செயலராக இருந்திருக்கிறேன். கீழ்மட்டத்தில் இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது அண்ணன் நேருதான்.
பல நேரங்களில் தனிப்பட்ட முறையில் அமைச்சருடன் காரில் பயணித்திருக்கிறேன். அப்போதெல்லாம், எனக்கு ஆகாத கட்சியினரைப்பற்றி எப்போதும் போட்டுக்கொடுத்ததில்லை. அதேநேரம், மனசுல ஒன்னு வெளிய ஒன்னு வச்சிக்க மாட்டேன். எல்லாத்தையுமே ஒப்பனா பேசிவிடுவேன். அதுதான் எல்லோருக்கும் தப்பா தெரிகிறது. குடமுருட்டி சேகர் கரடுமுரடா பேசுறான்னு சொல்வாங்க. வேற ஒன்னும் இல்லை.
என்னோட குணம் எல்லோருக்கும் தெரியும். என்னை ஏன் ஒதுக்கினார்கள்னா? அரசியல்ல எப்போதும் முழிச்சிகிட்டே இருக்கனுங்க. நம்ம இடத்தை பிடிக்க யார் யாரோ நிறைய பேர் இருக்காங்க. எதிர்க்கட்சி இருந்த பத்து வருசத்துல, 20 கேஸ். அத முடிக்க கோர்ட்டுக்கு அலைஞ்சே என் வாழ்க்கை போச்சு.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திருச்சியில் அவர் கட்சி தோற்றதற்கு நான் தான் காரணம்னு அடுத்தடுத்து ரெண்டு குண்டாஸ் போட்டாங்க. தனிப்பட்ட முறையில என்மேல ஒரு 75 கேஸ்கூட கிடையாது. எல்லாமே, அரசியல்ரீதியான வழக்குகள்தான்.
இடைப்பட்ட ஆண்டுகளில் அதிமுக, பாஜக, விஜய் தரப்பில் என வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன். இங்கே நான் பி.எச்.டி. முடித்துவிட்டேன். திரும்பவும் எல்.கே.ஜி.யிலிருந்து தொடங்க முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டேன்.
என் வீழ்ச்சிக்கு காரணம், நானேதான். நடுவுல கொஞ்சம் யுடர்ன் அடிச்சோம். அதன் விளைவுதான் இவ்வளவு வீழ்ச்சிக்கு காரணம். கழக தொண்டர்களுக்கு நிறைவா சொல்றதுன்னா, இக்கரைக்கு அக்கரை பச்சைனு நான் போனதுதான் தப்பு. சரியோ, தப்போ ஒரே பக்கம் இருந்து கட்சிப்பணி ஆற்றினால் எந்த பிரச்சினையும் இல்லை.”
நேர்காணல்: வே.தினகரன்.
முழுமையான நேர்காணலை காண : திருச்சினா நேரு. நேருன்னா திருச்சி – குடமுருட்டி சேகர்
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்