வீட்டு மனை அப்ரூவல் – 12 லட்சம் லஞ்சம் ! அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது.. !
வீட்டு மனை பிளான் அப்ரூவல் வழங்க 12 லட்சம் லஞ்சம் பெற்ற சம்பவத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த பரபரப்பு சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள்,
வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏகே சீனிவாசன்” பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான இவர் , ஆம்பூர் அடுத்த “மேல்சாணாங்குப்பம் பஞ்சாயத்து பகுதியில்” வீட்டு மனைகள் அமைத்து விற்பனை செய்ய சுமார் 7 ஏக்கர் நிலம் வாங்கி அதில் மனைகள் அமைத்து ப்ளான் அப்ரூவல் வாங்குவதற்காக “அதிமுகவைச் சேர்ந்த மேல்சாணாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை” அனுகியுள்ளார்.
அப்போது, ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் பிளான் அப்ரூவல் செய்ய மொத்த மதிப்பீட்டிலிருந்து தனக்கு ( 2 %) அதாவது ” 12 லட்சம் ரூபாயை லஞ்சமாக தர வேண்டும் ” என நிபந்தனை விதித்துள்ளார் . அதில் முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து அப்ரூவல் வழங்குங்க அப்புறம் பார்த்துக்கலாம் என சீனிவாசன் கூறியதாக தெரிகிறது.

“10 லட்சத்தை” பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் , அப்ரூவல் வழங்காமல் கடந்த மூன்று மாதங்களாக மீதி தொகையான 2 லட்சத்தை கேட்டு நச்சரித்து வந்துள்ளார். ஆத்திரமடைந்த சீனிவாசன் அப்ரூவல் வழங்கவில்லை என்றால் உன்னைய லஞ்ச ஒழிப்புத் துறையில் பிடித்து கொடுப்பேன் என கூறிய பிறகும், அசராத சிவக்குமார் அப்ரூவல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் , 2 லட்சத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்ட சீனிவாசன் சொல்லியபடியே, (திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை) எங்களுக்கு தகவல் கொடுத்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் , லஞ்சம் வாங்கும் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை கையும் களவுமாக பிடிக்க நினைத்தோம் அதற்காக “ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை” கொடுக்குமாறு சீனிவாசனிடம் அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம்.
அதன்படி, (ஜூலை -22) மாலை 3 மணியளவில் வாணியம்பாடி நீயூ பைபாஸ் சாலைக்கு சிவக்குமாரை வரவழைத்து ரசாயனம் தடவிய, 2 லட்சம் ரூபாயை சீனிவாசன் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த (திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்கள் ) எங்கள் குழு , ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை கையும் கழுவுமாக பிடித்தனர்.
அதனைத்தொடர்ந்து , ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை கைது செய்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தி பின்னர் வழக்கு பதிவு செய்து , திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
— மணிகண்டன்