மொழிப்போர் : துப்பாக்கிச்சூட்டுக்கு இரையான முதல் தியாகி இராஜேந்திரன் !
அறுபது ஆண்டுகளுக்கு முன் 1965 ல் நடந்த மொழிப்போரின் நெருப்பு நீறு பூத்த நிலையில் இருந்து வந்து, இன்று அதன் வெப்பத்தை ஈராயிரக் குழவியரும் உணரும் வகையில் கடத்தியுள்ளது. அந்த அணையா நெருப்பை உண்டாக்கிய தீக்குச்சிகளில் ஒன்றைப் பற்றி குடும்பத்தில் ஒருவனாக நின்று நான் அறிந்த தகவல்களைப் பகிர எண்ணுகிறேன்.
அந்தத் தீக்குச்சியின் பெயர் ராஜேந்திரன். சிறு வயதில் இருந்தே வறுமையின் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்தே வளர்ந்திருக்கிறார்.
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு இவற்றின் மீது ஈடுபாடு அதிகம். தமக்கையர் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் வைப்பதில் காட்டிய ஆர்வமே அதற்கு சாட்சி.
சிவகங்கை மன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதம் படித்தார்.

1965 ஜனவரி 26 மொழிப்போரில் முக்கியமான நாள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் விடுதியில் மாமா (ராஜேந்திரன்) இருந்திருக்கிறார். 26/1/65 இரவில் அடுத்த நாள் செல்ல வேண்டிய ஊர்வலத்திற்கு வேண்டிய முழக்கங்கள் எழுதியிருக்கிறார். ஏந்தப்பட வேண்டிய பதாகைகளை எழுதியும் ஒட்டியும் ஏற்பாடு செய்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் இருந்து கிளம்பிய மாணவர் ஊர்வலம் சிதம்பரம் நகரை நெருங்கிய போது இடையில் இருந்த ரயில்வே கேட்டை மூடிவிட்டு போலீசார் மாணவர்களைத் தடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் தடியடி, கல்வீச்சு என்று நிலமை கைமீறிப் போகிறது. கண்ணீர்ப்புகை குண்டு வீசினால் அதை எதிர்கொள்ள வெங்காயம் தேடி வைத்துள்ளனர். இடித்து ஓரிரு துளிகள் கண்களில் விட்டால் பெருகும் கண்ணீரில் கண் எரிச்சல் குறைந்து கண்கள் தெரியுமாம்! ஆனால், வந்ததோ துப்பாக்கிக் குண்டுகள். பெருகியதோ செந்நீர்!
என் அம்மாவின் வார்த்தைகள் – ” இடது நெற்றியின் மேல்புறத்தில் ஒரு புளியங்கொட்டை அளவுக்குக் காயம் இருந்தது. ஆனால் சுழன்று சென்ற தோட்டா பிடறியில் வெளியேறிய இடத்தில் உள்ளங்கை அளவுக்கு பள்ளம் இருந்தது”. திரைப்படத்தில் சித்தரித்தது போல யாரும் தூக்கிக் கொண்டு மருத்துவ உதவி தேடிப் போக இயலவில்லை.
என்ன வலியை உணர்ந்தாரோ? யாரை நினைத்தாரோ? ஒரு புளியமரத்தின் அடியில் குப்புற விழுந்து, கையும் காலும் மடங்கி, அத்தனை ஆசைகளும்…. கனவுகளும் குருதி வழியே வெளியேற, பதினெட்டு வயதில் இறுதி மூச்சு நிறுத்தினார். மீண்டும் காவல்துறை தன் அடக்குமுறையைக் காட்டுகிறது. உடலை இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று கண்டிப்பு காட்டுகிறது.
1938 முதல் 1964 வரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிகழ்ந்த உயிர்த்தியாகங்கள் எல்லாமே தீக்குளிப்பு…. விசம் அருந்துதல்…. என்று தன்னுயிர் ஈதலாகவே இருந்தன. முதன் முதலாக அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதில் ஒரு உயிர் பிரிந்தது என்பதே தமிழ் நாட்டில் பெரும் போராட்டமாக மாறியது. போராட்டம் வன்முறையாக மாறியது. அதன் முத்தாய்ப்பாக பொள்ளாச்சி கலவரம் அமைந்தது. சரியாகச் சொல்வதானால் Trigger point.
உடலைப் பெற்றுக் கொண்டால் வைத்து அழவோ, உறவினர்கள் வந்து முகம் பார்க்கும் வரை வைத்திருக்கவோ இடமில்லாத கையறு நிலை! யாரும் இடங்கொடுக்க முன் வந்தாலும் காவல்துறை தடுக்கிறது. மிரட்டுகிறது! பெரியவர்கள் தவித்து நின்ற நிலையில் உதவ முன்வந்தார் பெரிய மாமாவின் நண்பர் ஒருவர். பரங்கிப்பேட்டையில் சைக்கிள் கடை வைத்திருந்தார். வெள்ளையர் என்று அறியப்பட்ட சுப்பிரமணியன் என்ற சாமானியர். காவல்துறையின் மிரட்டலை மீறி துணிச்சலாக எதிர்கொண்டு உடலைத் தன் வீட்டில் வைக்க பெற்றுச் சென்றார். அப்படித்தான் பரங்கிப்பேட்டை எங்கள் குடும்பத்தினர் இன்றும் செல்லும் புனித இடமானது.
பல்கலைக்கழக வளாகத்தில் இராஜேந்திரன் மாமாவின் முழு உருவச் சிலை அப்போதிருந்த மாணவர் குழுவால் அமைக்கப்பட்டது. திறந்து வைத்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி.
அணையா நெருப்பைப் பற்ற வைத்த தீக்குச்சி கருகியிருக்கலாம்! தீ அணையவில்லை! தேவை ஏற்படின் ‘தீ பரவட்டும்’ ! அனைத்து மொழிப் போர் தியாகிகளுக்கும் வீரவணக்கம்!
– ரவிக்குமார் ராஜாமாணிக்கம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.