தீ பரவட்டும்…..
1968ஆம் ஆண்டு இதே ஜனவரி 23ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா. “தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும், மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிவிட இப்பேரவைத் தீர்மானிக்கிறது” என்ற இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றியதுடன், “அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சமமான அளவில் நிதி உதவி வழங்கவேண்டும் என்று இப்பேரவை வலியுறுத்துகிறது’‘ என அறிவித்தார்.
இரண்டு நாட்கள் கழித்து, ஜனவரி 25 அன்று சென்னை நேப்பியர் பூங்காவில் (இப்போது மே தினப் பூங்கா) நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய அண்ணா, “என்னால் ஆனதை நான் செய்து விட்டேன். இனி டெல்லி, தன்னால் ஆனதை செய்து கொள்ளட்டும். தியாகத்தை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார். இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து, தமிழைக் காக்கும் சட்டத்திற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை என்பதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாற்றை, மாணவப் பருவத்தின் மொழிப்போராட்ட வீரரும், முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அ.இராமசாமி, ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு‘ என்ற தலைப்பில் இருபாகங்களாக எழுதினார். தற்போது வெளியான பராசக்தி படத்தின் கதைக்கான பல செய்திகள் இந்தப் புத்தகத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படக் குழுவினரிடம் முனைவர் அ.இராமசாமி நேரடியாகவும் பல செய்திகளைப் பகிர்ந்து, ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அவர் எழுதிய, இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு புத்தகத்தை நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டது. அச்சுக்கு செல்வதற்கு முன்பாக, புத்தகத்தை முழுமையாகப் படிக்க வேண்டிய வேலை என்னுடையது. முனைவர் அ.இராமசாமி என்னிடம், புத்தகத்தில் இணைக்க வேண்டிய பகுதிகள், அரிய படங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்குவார். நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடுகளை கவனித்த நண்பர் பரமேஸ்வரன் E B Parameshwaran இந்தப் புத்தகத்தை நல்ல முறையில் கொண்டு வரக் கடுமையாக உழைத்தார்.
2016ஆம் ஆண்டு ஜனவரி 23 (இருமொழிக் கொள்கை நிறைவேறிய அதே நாளில்) முனைவர் அ.இராமசாமி அவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு இரு பாகங்களையும் சென்னை முத்தமிழ்ப் பேரவை அரங்கில் இன்றைய முதலமைச்சர்-கழகத் தலைவர் வெளியிட்டார். கழகப் பொருளார் டி.ஆர்.பாலு எம்.பி. பெற்றுக்கொண்டார். நக்கீரன் கோபால் அண்ணன் முன்னிலை வகித்தார். விழா மேடைக்கு என்னை அழைத்த முனைவர் அ.இராமசாமி, இந்த நூலாக்கத்தில் என்னுடைய பணியையும் நண்பர் பரமேஸ்வரன் பணியையும் விளக்கி, மேடைக்கு அழைத்தார். கழகத் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். நிகழ்வு நடந்து பத்தாண்டுகளாகிவிட்டன. எத்தனை ஆண்டுகளானாலும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான தீ பரவிக் கொண்டுதான் இருக்கும்.
-கோவி.லெனின்








Comments are closed, but trackbacks and pingbacks are open.