நல்லா கேட்டுக்குங்க… தேர்தல் நெருங்கிடுச்சு…. விளாசி தள்ளிய மு.க.ஸ்டாலின்
20.01.2026 அன்று திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் உரை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, “திராவிடப் பொங்கல்”-னு சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கிட்டேன். அதை கட்டளையாக ஏத்துக்கிட்டு, தமிழ்நாடு முழுக்கவும் கழகத்தின் சார்பில், முன்னெடுத்த திராவிடப் பொங்கல் கொண்டாட்டம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
கழகத்தின் சார்பில் செய்யப்பட்ட கொண்டாட்டங்களுடன், அரசு சார்பில் நாம் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், மக்களின் மகிழ்ச்சிய இரு மடங்கு ஆக்கியிருக்கிறது!
பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, எல்லாரும் ரெஸ்ட் இல்லாமல் தேர்தல் பணிக்குத் தயாராக வேண்டும்.
இன்றைய ஆளுநர் உரையில் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை தலைப்புச் செய்திகளாக சொல்லியிருக்கோம். இவ்ளோ திட்டங்களை நிறைவேத்தி இருப்பதாலதான் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள். உண்மையான பிரச்சினைகள் பெரிதாக இல்லாததால், வீண் அவதூறுகளைப் பரப்பி, மக்களை குழப்ப நினைக்குறாங்க. அதுக்கு நாம் துளிகூட இடம் கொடுத்து விடக் கூடாது. அதனால்தான், நம் சாதனைகளை எல்லாம், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நம் அரசின் திட்டங்களால் சுமார் 2 கோடி மக்கள் பயனடைகிறார்கள். ஒரு குடும்பம் விடாமல் எல்லாரும் நம் திட்டங்களால் பயனடைய வேண்டும் என பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்திட்டு இருக்கோம்! அந்த பயனாளிகள் எல்லோரையும், இனிமேல் நம்மோட வாக்காளர்களாக உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு, உங்களிடம்தான் இருக்கு.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து BLA2-க்களை வைத்து, மண்டல அளவில் பெரிய கூட்டங்களை நடத்தினோம். கடந்த தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்றோம். அதன்பிறகு, BLC-களை நியமிக்கும் பணிகளை தொடங்கி நூறு வாக்காளர்களுக்கு ஒருத்தர்னு BLC-களை நியமிச்சிருக்கோம். அடுத்து இப்பொழுது, 4 மண்டலங்களிலும் அவர்களைத் திரட்டி மாநாடு நடத்தப் போறோம். இதுவே ஒரு மண்டலத்துக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு பெரிய மாநாடுகளாக இருக்கும்.
நல்லா கேட்டுக்குங்க… தேர்தல் நெருங்கிடுச்சு. இனி நம் சிந்தனை – செயல் எல்லாத்துலயும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும்.
இங்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் எல்லாரும் இருக்கீங்க. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். “தேர்தல் வருது நடவடிக்கை எடுக்கமாட்டார்”-னு மட்டும் நினைக்காதீங்க. தனிநபர்களை விட கட்சிதான் பெரிது.
அதேமாதிரி, எல்லாரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.
களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளைச் சொன்னால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். உங்கள் முகத்தில் தப்பித்தவறிகூட, கோபமோ –ஆணவமோ – அதிருப்தியோ வெளிப்படக் கூடாது.
அதே போல, நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள், தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகிடக் கூடாது. தெளிவாகச் சொல்கிறேன்… கூட்டணி – தொகுதி பங்கீடு – இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எந்த தொகுதியில் யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நான்தான் களம் காண்பதாக நினைத்து, 100 சதவீத உழைப்பைக் கொடுத்து களப்பணி ஆற்ற வேண்டும்.
நாம ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். உட்கட்சி பிரச்சினைகள் எதுவும் எழக் கூடாது. எல்லோரையும் அரவணைத்துப் போக வேண்டிய பொறுப்புகளில் இங்க இருக்கும் எல்லாரும் இருக்கிறீர்கள்.
இந்தியாவிலேயே ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, ரொம்ப உறுதியாக, வலிமையாக இருப்பது நாமதான்-னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அதனால, நம்மை எப்படியாவது வீழ்த்திட பல சதித் திட்டங்கள் நடக்கும். அது எல்லாத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உடைத்து, ஒரு வலிமையான கட்சியாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த 3 மாதத்துக்கு உங்கள் உழைப்பு, பொறுமை எல்லாம் ரொம்ப முக்கியம்.
உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். நம்மை நம்பித்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!
மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் உரை.
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் (20-01-2026)
தீர்மானம் : 1
வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடு வீடாக மகளிர் பரப்புரை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், தோழி விடுதிகள், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என எண்ணற்ற மகளிர் மேம்பாட்டுத்திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டுப் பெண்களை உலகளவில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்களாக’ மாற்றியுள்ள மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று திராவிட மாடல் 2.0 அமைந்திடும் வகையில், நமது திராவிட மாடல் அரசு பெண்களுக்குச் செய்துள்ள சாதனைத்திட்டங்களைப் பெண்களிடம் எடுத்துக்கூறி மகளிரின் முழுமையான ஆதரவு கழகத்திற்கு மட்டுமே என்ற நிலையை உறுதி செய்திட வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
கழக துணைப்பொதுச்செயலாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் 29.12.2025 அன்று மேற்கு மண்டல மகளிரணி சார்பில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிரணி மாநாடு பெற்ற மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வரும் 26.01.2026 அன்று டெல்டா மண்டல ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளை அடுத்து,
பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதுபோது கழக அரசின் மகளிர் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், சாதனைத் திட்டங்களின் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களிடம் கழகத்திற்கான ஆதரவைத் திரட்டிட வேண்டும் எனவும், இந்தப் பரப்புரை மூலம் பெண்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் முழுமையாக கழத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 2
தமிழ்நாடு தலைகுனியாது – பரப்புரை
பிப்ரவரி-1 முதல் பிப்ரவரி-28 வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திரப் பரப்புரையாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமைக்கழகம் அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. நட்சத்திரப் பரப்புரையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 4 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் அல்லது அரங்கக் கூட்டங்களாக பரப்புரை செய்வதுடன், தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மண்டலப் பொறுப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள்/ மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்தும் கலந்துரையாடலாக பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இப்பரப்புரைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்து ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை வெற்றியடையச் செய்திடுவது என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 3
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ – வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு
கழக இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் வெற்றிகரமாக நடைபெற்ற வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி 7-ல் விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டங்களை நடத்தி வெற்றிக்கான வியூகத்தை வகுத்திடுமாறு மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக உடன்பிறப்புகளால் வெற்றிக்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கழக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2), 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (BLC) மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) ஆகியோரைத் தேர்தல் பணிக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் ‘‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’’ – வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடுகளை நான்கு மண்டலங்களில் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. அதன்படி பிப்ரவரி-11 அன்று சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாட்டை தாம்பரம் – படப்பையிலும், பிப்ரவரி-14 அன்று வடக்கு மண்டலம் மாநாட்டை திருப்பத்தூரிலும், பிப்ரவரி-21 அன்று தெற்கு மண்டலம் மாநாட்டை மதுரையிலும், பிப்ரவரி-27 அன்று மேற்கு மண்டலத்திற்கான மாநாட்டை கோவையிலும் நடத்திட இம்மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 4
‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ – கழக மாநில மாநாடு
சட்டப்பேரவைத் தேர்தலில் கழத்தின் வெற்றியை பறை சாற்றும் வகையில் மார்ச்-8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 10 இலட்சம் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளும் ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ மாபெரும் கழக மாநில மாநாட்டை நடத்துவதென இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.