விழிபிதுங்கும் தலைமை – தலைசுற்ற வைக்கும் லோக்கல் பாலிடிக்ஸ்!
கட்சித் தலைமையிடம் சில விசயங்களை எதிர்பார்த்து அது கிடைக்காத சூழலில், அதிருப்தியில் சிலர் இருப்பதென்பதும்; இந்த அதிருப்தி மெல்ல தனி அணியாக உருமாறுவதென்பதும் எல்லா கட்சியிலும் நிலவக்கூடிய ஒன்றுதான்.
ஆனால், ”தருமபுரியில் லோக்கல் உடன் பிறப்புக்களின் பாலிடிக்ஸ் எப்போதும் வெடிக்க காத்திருக்கும் எரிமலை போலவே, நீருபூத்த நெருப்பாக நீண்டகாலமாக கனன்று கொண்டேதானிருக்கிறது. அதன் சமீபத்திய வெளிப்பாடுதான், தர்மசெல்வன் விவகாரம்” என்கிறார்கள், அரசியல் வட்டாரத்தில்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிபாரிசில், உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட விருப்பத் தேர்வாகத்தான் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலராக தர்மசெல்வன் நியமிக்கப்பட்டார். இவர் பெரியண்ணனுடன் ஒன்றாக பாமகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர். பெரியண்ணன் கட்சியில் மா.செ.வாகவும் எம்.எல்.ஏ.வாகவும் செல்வாக்காக இருந்த சமயத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மறைந்தார். அவர் மறவையடுத்து அவரது மகன் இன்பசேகரனை 26 வயதிலேயே மா.செ. வாகவும் எம்.எல்.ஏ.வாகவும் ஆக்கி அழகு பார்த்தவர் மு.க.ஸ்டாலின். அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்கிறார்கள்.
அதேசமயம், பெரியண்ணனோடு ஒன்றாக அரசியல் களத்தில் பயணித்த தர்மசெல்வன் தலையெடுக்க முடியாமல் தடுமாறினார். இந்த பின்புலத்தில்தான், தர்மசெல்வன் மா.செ.வாக பதவியேற்ற சில நாட்களிலேயே அவருக்கு எதிரான ஆடியோக்கள் படையெடுக்க ஆரம்பித்தன. அதுவும் முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன் சமூக வலைதள பக்கங்களின் வழியாகவே வெளியானது பலருக்கும் அதிர்ச்சி.
தர்மசெல்வனுக்கு எதிராக ”ஆடியோ சரவெடி”யை கொளுத்திபோட்ட கையோடு, அறிவாலயம் சென்றவர்; “எனது அப்பாவுக்கு அடுத்து திமுக கட்சியும் ஸ்டாலினும்தான் எனக்கு அப்பா மாதிரி. எனக்கு எதிராக கட்சி இரண்டு முறை நடவடிக்கை எடுத்த போதும், வேறு கட்சிக்கு சென்றேனா?” என அறிவாலயத்திலும் சென்டிமென்ட் ரக பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறார், இன்பசேகரன்.
அதோடு நிற்கவில்லை, மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகிய மூவர் அணியால்தான் மாவட்டத்தில் கட்சி பின்னடைவை சந்தித்திருப்பதாக அவர்களை வைத்துக் கொண்டே, தலைவரிடத்தில் தானே வெடித்திருக்கிறார் இன்பசேகரன்.
“அதெல்லாம் சரி. ஆடியோவை கட்சியில் கொடுக்காமல் வெளியில் போட்டதுக்கு தண்டனைதான் இது” என்று, இன்பசேகரனை புஸ்வானமாக்கிவிட்டு முன்னாள் எம்.பி. மணிக்கு மா.செ. வாய்ப்பை வழங்கியிருக்கிறார் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த விவகாரம் உதயநிதி தரப்பை அப்செட் ஆக்கியிருக்கிறது. இது தெரியாமல், உதயநிதியிடம் ஆசி வாங்க சென்று, அங்கு நடைபெற்ற உரையாடலால் படுஅப்செட்டாக சென்ற வேகத்தில் திரும்பியிருக்கிறார், புதிய மா.செ. மணி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்னும் சொல்லப்போனால், தர்ம செல்வன் பழைய பாசத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் நட்புறவில் இருந்தார் என்பது இன்பசேகரன் முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால், இதே இன்பசேகரன் மா.செ. பதவிக்காக, ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு, அதிமுகவிற்கு போன முல்லைவேந்தனிடம் ஆதரவு கேட்டு சென்றவர்தான் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள், உடன்பிறப்புக்கள். புதிய மா.செ. மணியும் லேசு பட்டவர் இல்லை. மேற்கு மா.செ. பழனியப்பனை ”சரிகட்டி” எம்.பி. சீட்டு வாங்கிய பாணியில், மா.செ. பதவியை வாங்கிவிட்டார் என்கிறார்கள்.
இப்போதே, பலரிடம் வசூல் வேட்டையை நடத்த ஆரம்பித்துவிட்டார். என்ற பேச்சும் அரசல் புரசலாக வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே, ”மாவட்டத்தில் பழனியப்பன்; தடங்கம் சுப்ரமணி; இன்பசேகரன்; எம்.பி.செந்தில்குமார் என நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. போதாக்குறைக்கு, மணி தலைமையில் புதிய அணி உருவாகாமல் இருந்தால் சரிதான்” என கிசுகிசுக்கிறார்கள், கழக உடன்பிறப்புக்கள்.
— விசாகன்.