ஈராயிரம் ஆண்டு – கருவறை இருள் கிழித்த – சுயமரியாதை சூரியன் கலைஞர் புகழ் வாழ்க!
ஈராயிரம் ஆண்டு – கருவறை இருள் கிழித்த – சுயமரியாதை சூரியன் கலைஞர் புகழ் வாழ்க!
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரது சாதனைகளை நினைவுகூரும்விதமாக, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வ.ரங்கநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,
“ஒரு வரலாற்று சகாப்தமாக வாழ்ந்த மாண்புமிகு கலைஞரின் சாதனைகள் அளப்பரியது. அதில் முத்தாய்ப்பாய் நிகழ்த்தப்பட்டது தான் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம். ஈராயிரம் ஆண்டாய் கருவறையிலிருந்து விலக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் கருவறைக்குள் அழைத்துச் செல்ல அறிவாசான் தந்தை பெரியார் முயற்சிக்க , அவரது மாணவர் கலைஞர் 1971-ல் சட்டமாக்கினார்.
பார்ப்பனர்களின் தொடர் சட்ட, நீதிமன்ற முட்டுக்கட்டைகளைத் தாண்டி, 2007-ல் மீண்டும் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் திறந்து, உதவித் தொகை தந்து – ஆகமங்கள், மந்திரங்கள் கற்க வைத்து தீட்சையும் பெற வைத்தார். மீண்டும் பார்ப்பனர்கள் தடுக்க, தொடர்ந்து அதிமுக ஆட்சியின் வஞ்சனையும் சேர்ந்து உரிய கல்வித் தகுதி பெற்றும் இருளில் தள்ளப்பட்டோம்.
நாங்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் போது பார்ப்பன அர்ச்சகர்கள் சாதிரீதியாக எங்களை அவமானப்படுத்தி கோயில் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கக்கூட அனுமதிக்கவில்லை. பள்ளு, பறை, சக்கிலி எல்லாம் வந்துட்டாங்க போன்ற கொச்சையான வார்த்தைகளைச் சொல்லி எங்களை அவமானப்படுத்தினார்கள். இச்செய்தி கலைஞரை எட்டியவுடன் உடனே ஒரு ஆணை பிறப்பித்து அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வழிபட அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுதான் கலைஞர்.
அர்ச்சகர் பேச்சுப்பள்ளியில் படித்து முடித்த பின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தோம் அதில் திராவிட முன்னேற்ற கழகம், திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக, நாம் தமிழர் மற்றும் அனைத்து இயக்கங்கள் ஆன்மீகத்தில் உள்ள இந்து அமைப்பான பிஜேபி ஆர் எஸ் எஸ் விசுவ இந்து பரிசத் இந்து மக்கள் கட்சி போன்ற அனைத்து அமைப்புகளையும் சந்தித்தோம்.
அப்பொழுது முத்தமிழ் கலைஞர் அவர்களை சந்தித்தபோது ஆகமம் என்ற ஒரு பிரச்சனைகள் உள்ளன. நீதிமன்றத்தில் அந்த வழக்கு விரைவில் முடித்து உங்களுக்கு என் உயிர் இருக்கும் வரை நான் உங்களுக்கு கோயில் கருவறையில் பூஜை செய்வதற்கு பணி ஆணை வழங்குவேன் என்று உறுதி அளித்தார் இதுதான் கலைஞர்.முத்தமிழ் கலைஞர் அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக சமத்துவம் சமூக நீதி உருவாக்குவதற்கான அனைத்து திட்டங்களையும் வழிவகை செய்து வந்தவர்
அடுத்து அதிமுக ஆட்சி வந்தது. அர்ச்சகர் நியமனம் கிடப்பில் போடப்பட்டது. நம்பிக்கை இழந்தோம். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தினோம். தீர்ப்பு வந்தும், பயனில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தது எடப்பாடி அரசு. மீண்டும் மலர்ந்தது கலைஞரின் கொள்கை அரசு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையில். பெற்றோம் அர்ச்சகர் பணியை.
2000 ஆண்டுகளாக இறைவனுக்கு பூசை செய்ய விடாமல் தமிழ் சமூகத்தின் பிள்ளை, யாதவர், தேவர், கவுண்டர், செட்டியார், வன்னியர், முதலியார், ஆதி திராவிடர், தேவேந்திரர், அருந்ததியரை தடுத்து வந்த பார்ப்பனீய சதியை வீழ்த்தி கருவறையில் எம்மை நுழையச் செய்து கருவறைத் தீண்டாமையை, பெரியாரின் நெஞ்சிக் தைத்த முள்ளை, கலைஞரின் வாழ்நாள் கனவை , நனவாக்கினார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து வந்த சதி – சிக்கல்களை தகர்த்தெரிந்து கருவறையில் தமிழின் – தமிழனின் குரலை ஒலிக்கச் செய்தார்.
தமிழக அரசு அர்ச்சகர் பணி நியமனங்களை, வழக்கு உச்சநீதிமன்றம் செல்லும்முன் உடனடியாக நியமிக்க வேண்டும் என . மாண்புமிகு.தமிழக முதல்வரை கோருகிறோம்.” என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
– ஆதிரன்.