“பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடியம் எம்.சின்ன சுவாமி யார் தெரியுமா ?
“பெங்களூரில் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பெயர் என்ன?” என இந்தி கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் ஒருமுறை கேட்டார். உடனே எதிரில் இருந்த இளைஞர், ” எம்.சின்ன சுவாமி ஸ்டேடியம்” என்றார். உடனே பச்சன், “யார் அந்த எம்.சின்ன சுவாமி? என கேட்க அவருக்கு பதில் தெரியவில்லை.
இதுபற்றி ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, நண்பர் மஞ்சுநாத், ” சின்ன சுவாமி மண்டியாவை சேர்ந்த கன்னட பிராமின். அவரது முழு பெயர் மண்டியா சின்ன சுவாமி ” என்றார். எனக்கு தலை சுற்றிவிட்டது.
ஏனென்றால் மஞ்சுநாத் ஓரளவுக்கு விஷயம் தெரிந்த கன்னட பத்திரிகையாளர். அவரே தவறான சொல்கிறாரே என நொந்து கொண்டேன்.
“முதலில் அவர் பெயர், எம்.சின்ன சுவாமி இல்லை. சின்ன சாமி. அவர் கன்னட பிராமின் இல்லை. அவர் பச்சை தமிழர். அவரது முழு பெயர் மங்கலம் சின்னசாமி முதலியார்.
கர்நாடகாவில் தமிழர் ஒருவரின் பெயரில் பிரதான இடம் இருக்கிறது என்பது தெரியக்கூடாது என்பதற்காக எம்.சின்ன சுவாமி என மாற்றி விட்டார்கள்.
அவரது குடும்பத்தினர் இன்றும் டஸ்கர் டவுனில் இருக்கிறார்கள். அங்கே ஒரு தெருவுக்கு சின்னசாமி முதலியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது” என விளக்கினேன். அவரால் அந்த உண்மையை நம்பவே முடியவில்லை.
இணையத்தில் தேடி பார்த்துவிட்டு, “நீ சொல்வது போன்ற தகவல்களே இல்லை. அவரது புகைப்படம்கூட எங்குமே இல்லை. ஸ்டேடியத்தில் கூட நான் பார்த்ததில்லை ” என வாதிட்டார். பிறகு நான் முன்னொரு காலத்தில் எழுதிய குறிப்பை எடுத்து காட்டிய பின்னர் நம்பினார்.
அண்மையில் நண்பர்களை சந்திக்க சின்னசாமி ஸ்டேடியத்துக்கு சென்றிருந்தேன். அங்கு சிறியதாக வைக்கப்பட்டிருந்த சின்னசாமியின் சிலையை படமெடுத்து மஞ்சுநாத்துக்கு அனுப்பினேன்.
முதலியார் நமக்கு வேண்டப்பட்டவர் என்பதால் நானும் அவருடன் படம் எடுத்துக்கொண்டேன்.
உண்மையான வரலாறையும் அடிக்கடி சொல்லி நிரூபிக்க வேண்டி இருக்கிறது.
Ra Vinoth
பத்திரிகையாளர்