முதல் முதலில் பேட்டி எடுத்த நபர்! – உங்கள் ஜோல்னா ரெங்கா
அப்போது நான் “சென்னையில்” (Chennaiyil) என்னும் யூடியூப் சேனலில் புதியதாக வேலைக்கு சேர்ந்த சமயம். ஒரு நகைச்சுவை நடிகரை தேர்வு செய்து அவரை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்ட் (Assignment). உடனே என் நினைவுக்கு வந்தவர் நடிகர் மதன் பாப் அவர்கள்தான். அன்றே சில கேள்விகளை தயார் செய்து எடிட்டரிடத்தில் அனுமதி பெற்றேன். என் சக ரிப்போர்ட்டர்ஸ் நண்பர்களின் உதவியோடு நடிகர் மதன்பாப் அவர்களின் கைபேசி எண்களை பெற்றுக்கொண்டேன்.
ஒரு சிறிய யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி கொடுப்பாரா? என்கின்ற தயக்கத்துடன் அவரை தொடர்புக்கொண்டேன். “நாளைக்கு மீட் மண்ணலாமா? உங்களுக்கு நேரம் இருக்குமா? என் வீட்டின் விலாசம் உங்களுக்கு தெரியுமா?” என்று கனிவோடு என்னிடம் பேசி, கைபேசியிலேயே என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். எனக்கு அவரை நேரில் பார்க்காமலேயே பிடித்துவிட்டது. அவர் கொடுத்த தேதியில் வீட்டிற்கு சென்றேன்…
இங்குதான் கதையில் ஒரு ட்விஸ்ட்…
எனக்கு முன்பாகவே இயக்குனரும், நடிகருமான மனோ பாலா “வேஸ்ட் பேப்பர்” (Waste Paper) என்னும் தனது யூடியூப் சேனலுக்காக நடிகர் மதன் பாப்பை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். அதை நான் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். காரணம், பெரியபெரிய இரண்டு லைட்டுகள், பெரிய கேமராக்கள் இரண்டு, ஆடியோ மைக், கேமராமேன்கள் நான்கு நபர்கள், மனோபாலாவின் உதவியாளர்கள் இருவர் என ஒரு பெரிய யூனிட்.
என்னிடத்திலோ, ஒரே ஒரு கேமரா, கேமராவை வைக்க கேமரா ஸ்டாண்ட், ஆடியோவை பதிவு செய்ய ஒரு ரெக்கார்டர் மொத்தமாகவே என்னிடத்தில் இருந்தது இவ்வளவுதான்.
என்னடா… பெரிய டீமுக்கு சார் பேட்டி கொடுக்குறாரு.. நமக்கு கொடுப்பாரா? இப்படியே போய்டலாமா… ச்சாச.. அப்படிலாம் போகவேண்டாம். இவ்வளவு தூரம் வந்துட்டோம்.” என்று எனக்குள்ளே ஆயிரம் ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. சிறிது நேரத்திற்கு பின், என்னை கண்ட அவர்,
சாரிப்பா.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.. இந்த பேட்டியை முடிச்சிட்டு உங்களுக்கு பேட்டி தரேன். காபி வரும், குடிச்சிட்டு இங்கேயே வெயிட் பண்ணுங்க சாரி…”
என்று பத்து சாரி கேட்டார். பதற்றமாக இருந்த என்னை சற்று தனிய வைத்தது அவரின் இந்த ஆறுதலான பேச்சு. அதுமட்டுமில்லை, அவர் எனக்கு பேட்டி கொடுப்பதும் உறுதியானது. மனோபாலா கேட்ட கேள்விகளில், என்னிடத்திலும் சில கேள்விகள் இருந்தன, அதனை ஒவ்வொன்றாக பேனாவை வைத்து அடித்துக்கொண்டே வந்தேன். 10 கேள்விகளில் 6 கேள்விகள்தான் என்னிடத்தில் மீதம் இருந்தன. ஆகையால், அவசர அவசரமாக ஒரு நான்கு கேள்விகளை புதியதாக சேர்த்து, அதனை எந்த சமயத்தில் அவரிடத்தில் கேட்கலாம் என்று மனதில் தயார் படுத்திக்கொண்டு இருந்தேன்.
மனோபாலாவின் பேட்டி முடிந்தது. அவர்கள் எடுத்துவந்த பொருட்களையெல்லாம் பேக்கிங் செய்யவே அரைமணி நேரமானது. மனோபாலா டீம் சென்றவுடன், என்னை அழைத்தார் நடிகர் மதன்பாப். அவர் இருக்கும் அறைக்கு சென்றேன். அவரை சுற்றிலும் ஒரே விருதுகள் குவிந்து இருந்தன. அதனை நோட்டம்யிட்டவாறே நான் கொண்டு சென்ற ஒரு கேமரா, ஸ்டாண்ட், ரெக்காடரை எடுத்து ஆன் செய்து அவர் முன்பாக வைத்தேன்.
அவ்வளவுதானா…!” என்றார் மதன்பாப்.
ஐயையோ.. பேட்டி கொடுக்கமாட்டாரோ… என்று தயங்கி,
ஆமா சார்” என்றேன்.
அப்போ இண்டர்வியூக்கு போலாமா?” என்றார். நானும் போலாம் என்றேன்
சார்.. நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் உங்கள் அப்பான்னு…” என்று கேள்வியை முடிப்பதற்குள்,
சார்.. நல்ல கேள்வி. யாருமே என்ட கேக்கலை நீங்களாவது கேட்டிங்களே. காக்கா ராதாகிருஷ்ணன் என் அப்பாவே கிடையாது. எல்லாம்.. விக்கிபீடியா செஞ்ச வேலை…” என்று கலகலவென அவருக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில்கூறி பேட்டியை முடித்தார். நான் கிளம்பும்முன்,
சார்.. நீங்க எனக்கு பேட்டி கொடுக்க மாட்டிங்கனு நினைச்சேன். ஏன்னா.. மனோபாலா சார் பெரிய கேமராவை வச்சி உங்களை இண்டர்வூ பண்ணிக்கிட்டு இருந்தாரு…” என்றதும்.
அதுலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. “technology is nothing but tool” அவ்வளவுதான். இங்கே நான் என்ன பேசுகிறேன் என்பதுதான் ரொம்ப முக்கியம். பாருங்க… நீங்க காக்கா ராதாகிருஷ்ணன் பற்றிய கேள்வியை கேட்டீங்க. நானும் பதில் சொல்லிருக்கேன். அது பத்து பேர்ட்ட ரீச் ஆகும்” காக்கா ராதாகிருஷ்ணன் என் அப்பா இல்லைனு பத்து பேர் புரிஞ்சிக்குவாங்க, அந்த பத்து பேர் இருவது பேர்ட்ட சொல்லுவாங்க, இருவது முப்பதாகும், முப்பது நாப்பதாகும்” என்று சிரித்துக்கொண்டே என்னை உற்சாகப் படுத்தினார்.
அவரிடம், புகைப்படம் எடுத்துக்கொண்டு ஜாலியாக சிலவற்றை பேசிவிட்டு என் பைக்கை கிக் அடிக்கும் முன்னர், “Madhan bob not only a comedy actor… Good heartfull man, He’s a comedian in the movies but in real life he’s a hero‘‘ என்று நினைத்தவாறு சென்றேன்.
சார்… உங்களின் சிரிப்பை அனைவரும் தியேட்டர்ல, டிவில பாத்திருப்பாங்க. இனியும் பார்ப்பாங்க. ஆனால், நான் உங்களின் கள்ளங்கபடமில்லாத அந்த சிரிப்பை, நேரிலேயே கண்டு ரசித்திருக்கின்றேன். உங்களை பற்றி தெரிந்துக்கொண்டு இதோ… உங்களை பற்றி சிலாகித்து எழுத்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கு கடவுளுக்கு நன்றி… உங்களுக்கும் நன்றி.. உங்களை போன்ற ஒரு நல்ல ஆன்மா இறைவனிடத்தில் அடையாது.. வேர் எந்த ஆன்மா அடையும்? நிச்சயம் நீங்கள் இறைவனிடத்தில் அடைந்திருப்பீர்கள்.