எல்லா வரியும் கட்டி அறுபது ஆண்டுகளாக குடியிருக்கும் எங்களை விரட்டியடிப்பதா, மதுரை மக்கள் ஆவேசம் !
மதுரையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள 592 வீடுகளை இடித்து அகற்ற நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்ட நிலையில், மதுரை மாநகர் பி.பி.குளத்தில் அமைந்துள்ள முல்லைநகர், அதேபோல் ஆனையூர், மகாத்மா காந்திநகர் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள 592 வீடுகளை இடிக்க நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
தண்ணீர் செல்ல நீர்வழிதடத்தை ஏற்படுத்தி தர முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். ஆனால், வீடுகளை முழுவதுமாக இடிக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முல்லைநகர் குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ”நாங்கள் மூன்று தலைமுறையாக இதே பகுதியில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம்.
திடீரென்று குடியிருக்கும் மக்களை அகற்ற வேண்டும் என ஆட்சியர் கூறுவது ஏற்க முடியாது. தண்ணீரை கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு எடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். ஆனால் முழுமையாக எங்களது வீடுகளை அகற்றிவிட்டு தண்ணீர் செல்ல பாதை அமைப்பதை ஏற்க மாட்டோம்.” என்பதாக கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பல ஆண்டுகளாக சொத்து வரி, குழாய் வரி, மின் கட்டணம் என அனைத்து வரியும் கட்டி அதிகாரிகள் அனுமதியுடன் வீடுகள் கட்டியுள்ளதாகவும், திடீரென வீடுகளை இடிக்க உத்தரவிட்டால் எங்கள் குழந்தை மற்றும் உடைமைகளை எடுத்துக்கொண்டு எங்கு செல்வோம்.? வாழ வழி இல்லாமல் நிற்கதியாக இருக்கிறோம். எனவே, மாவட்ட நிர்வாகமும், அரசும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.