தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த … மல்லை சத்யாவின் ”திராவிட வெற்றிக் கழகம்” !
திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா 17.12.2025ஆம் தலைநகர் தில்லி சென்றார். தில்லியில் உள்ள அசோகா சாலையில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் திராவிட வெற்றிக் கழகத்தை உரிய ஆவணங்களோடு தமிழ்நாட்டின் மாநில அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார். தேர்தல் ஆணையத்தில் திராவிட வெற்றிக் கழகத்தைப் பதிவு செய்யும் பணியில், செங்கை வழக்கறிஞர் சத்தீஷ்பாபு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மயில்சாமி, தில்லி வழக்கறிஞர் திரு அபிஷேக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

18.12.25ஆம் நாள் இந்தச் செய்தி தலைநகர் தில்லியில் வேகமாகப் பரவத் தொடங்கியது. தில்லி அச்சு / காட்சி ஊடகத்தினர் நேர்காணல் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி வந்த பின்னர் அறிவிக்கலாம் என்று இருந்தேன். ஆனால், அதற்குள் பொதுவெளியில் செய்தி கசிந்து ஊடகத்தை சந்தித்துப் பேச நேர்ந்ததுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மேலும் ஆவணங்கள் வேண்டும் என்று சொல்லாத நிலையில், ஒரு மாதத்தில் பதிவு அறிவிப்பு வெளியிடப்படும். ஆவணங்கள் வேண்டினால் பதிவு அறிவிப்புக்கு இருமாதங்கள் ஆகலாம். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திராவிட வெற்றிக் கழகம் அடியெடுத்து வைத்துள்ளது. மகிழ்ச்சி… வெல்வோம்” என்றால்
திராவிட வெற்றிக் கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வழங்கப்பட்ட விண்ணப்பத்தில், தலைவர் – மல்லை சி.இ. சத்யா, செயலாளர் – எம்.பழனிசாமி, பொருளாளர் – திருமதி எம்.வாசுகி என்று குறிப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் மேலும் திராவிட வெற்றிக் கழகம் என்னும் ஒரு புதிய கட்சி உதயமாகிறது. சீனப் புரட்சியாளர் மாவோ,“ஆயிரம் பூக்கள் மலரட்டும்” சொல்வார். அரசியல் வானில் உதயமாகும் திராவிட வெற்றிக் கழகத்தையும் வரவேற்போம். வாழ்த்துவோம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.