கட்டாய டெட் தேர்வு உத்தரவு ! பீதியில் உறைந்த ஆசிரியர்கள் ! வாட்டத்தை போக்கும் ஐபெட்டோ வா.அண்ணாமலை அறிக்கை !
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது பணி ஓய்வுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் “டெட்” தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, தமிழகத்தில் பணியாற்றிவரும் 1.5 இலட்சம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. தேர்ச்சி பெறாதவர்கள் பணியிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்றும் வேண்டுமென்றால், சலுகைகளுடன் விருப்ப ஓய்வு பெறலாம் என்பதான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இந்திய வரலாற்றில் புதுமையானது, விசித்திரமானது.
இந்த தீர்ப்பை எப்படி புரிந்து கொள்வது என்பதிலும், அடுத்து ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகிறது. ”ஆசிரியர்களை அரசு கைவிட்டு விடாது. தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்ததும் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை அளித்திருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவின் மீதான முழுமையான அச்சம் விலகியதாக இல்லை.
இந்த பின்னணியில், ஆசிரியர் சங்கங்களின் மூத்த இயக்கவாதியும், அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவருமான ஐபெட்டோ அண்ணாமலை இந்த விவகாரத்தை ஆசிரியர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதாக தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மிக முக்கியமாக, மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் அமைந்த என் சி டி இ யின் கொள்கை முடிவுகளின்படியே தான் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, இந்த தீர்ப்பை விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்பதாக குறிப்பிடுகிறார். சீராய்வு மனுவா? மேல்முறையீடா? மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வா? ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வா? என்ற சட்ட வாதங்களுக்குள் செல்லாமல், ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராய்வதே அவசியமானது என்பதாக தெளிவுபடுத்துகிறார், ஐபெட்டோ வா.அண்ணாமலை.
தற்போது ஆசிரியர்களிடத்தில் நிலவும் வாட்டத்தை போக்கும் வகையில் அமைந்திருக்கிறது, அவரது தெளிவான அறிக்கை. ”மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தீர்ப்பு முழுவதும் படித்த பிறகு சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை மேற்கொண்டு ஆசிரியர்களை இந்த அரசு முற்றிலும் கைவிடாது என்று உறுதி அளித்து உள்ளார்கள். ஆசிரியர் சங்கங்களும் மேல்முறையீடு செய்வார்கள் என்ற கருத்தினையும் தெரிவித்துள்ளார்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய மனம் திறந்த பேட்டியினை வரவேற்கிறோம். மேல்முறையீடு என்பது வேறு, சீராய்வு மனு என்பது வேறு சீராய்வு மனுவினை தமிழக அரசும் செய்யலாம், சங்கங்களும் செய்யலாம். ஆனால் அந்த சீராய்வு மனுவினை விசாரிக்க வேண்டியவர்கள் தீர்ப்பு சொன்ன இந்த இரண்டு நீதியரசர்கள் மட்டுமே விசாரிப்பார்கள்.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு, ஏற்கனவே சொன்ன தீர்ப்பு, மத்திய அரசின் கல்விக் கொள்கை, என் சி டி இ யின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக தீர்ப்பினை மாற்றி தீர்ப்பாணை வழங்குவார்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்க நம்மால் முடியாது. அரசு கொடுத்துள்ள இந்தப் பாதுகாப்பு பரிந்துரைகளை கூட நீதியரசர்கள் பாதிப்பாக மாற்றி சொல்வதற்கு கூட வாய்ப்பு ஏற்படும். மேல்முறையீடு என்பது தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நீதியரசர்கள் அல்லது ஐந்து நீதியரசர்கள் விசாரிக்க வேண்டிய மேல்முறையீடாகும்.
இந்தியப் பெருநாட்டில் மத்திய அரசு கொள்கைக்கு எதிராக விசாரிக்கப்பட வேண்டிய அவ்வளவு பெரிய வழக்குமல்ல இது . தமிழக ஆளுநர் பற்றி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்கிறதே தவிர ஆளுநர் நடவடிக்கையில் இன்னும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. குடியரசுத் தலைவரே தலையிட்டாலும் எங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தீர்ப்பு தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அன்பான வேண்டுகோள்:
முதலில் எட்டாம் தேதிக்குள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து விடுங்கள். அதன் பிறகு முழு தீர்ப்பும் வெளிவந்த பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளவாறு முப்பது நாட்களுக்குள் தெளிவான ஒரு முடிவினை எடுப்போம். சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதைத்தான் உச்ச நீதிமன்றமும் கருத்தினை பதிவு செய்துள்ளது. சட்ட வல்லுனர்களை போல கருத்துக்களை பதிவு செய்வதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல; தீர்ப்பில் உள்ள பாதுகாப்பான நடைமுறையினை எடுத்துக்கொண்டு அனைவரையும் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக தனிச் சிறப்பு தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசை நாம் பெரிதும் கேட்டுக் கொண்டு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையில் செயல்படுவோம். நம்பிக்கை இழக்காமல் விதிகளின்படி பயணத்தினை தொடர்வோம்.” என்பதாக, ஆசிரியர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார், ஐபெட்டோ வா.அண்ணாமலை.
— இளங்கதிர்