கடவுள் எதையும் செய்யமாட்டார் – நாம்தான் முயற்சிக்க வேண்டும் ! பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன்
கடவுளை மதிக்கின்றவனுக்கும் மதிக்காதவனுக்கும், கும்பிடுகின்றவனுக்கும் கும்பிடாதவனுக்கும் கடவுள் ஒரே மாதிரிதான் நடந்துகொள்வார். அப்படியானால், நான் ஏன் கடவுளைக் கும்பிடவேண்டும்? கடவுள் எல்லார் கிட்டேயும் ஒரே மாதிரிதான் நடந்துகொள்வார். எனக்கு என்று சலுகைகள் செய்யமாட்டார் என்றால் நான் ஏன் அந்தக் கடவுளைக் கும்பிடவேண்டும்.
கடவுள் என்ன செய்வார்? ஒன்றும் செய்யமாட்டார். சும்மா இருப்பார். ஒரு திரைப்படத்தில் ரௌடியாக நடித்த விவேக்கிடம், “ உங்களை நம்பி இவ்வளவு மக்கள் உள்ளனர். இவுங்களுக்கு என்ன செய்யப்போறீங்க…. ” என கேட்க, … உங்க இரண்டு பேருக்கு என்ன செய்தேன்…. ஒன்னுமில்லை. அதேதான் அவுங்களுக்கும்…. என்பார். இதேதான் கடவுளுக்கும். கடவுளை வேண்டுகின்றவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்துவிடமுடியுமா? என்றால் வேண்டுகின்றவர்களின் வேட்டைக்காடாக இந்த உலகம் மாறிவிடாதா? யாரும் உழைக்கமாட்டார்களே?

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. இரண்டு ரிஷிகள் . ஒரு ரிஷியின் மகன் எல்லாம் அறிந்தவன், அறிவாளி, திறமைசாலி. இன்னொரு ரிஷியின் மகன் எதையும் அறியாதவன், முட்டாள், திறமை இல்லாதவன். அப்பா ரிஷி மகனை திட்டுகிறார். இந்திரனை நோக்கி தவம் இருக்கிறான். இந்திரன் வருகிறான். ”எனக்குக் கல்வி அறிவு வேண்டும். அறிவு வேண்டும்.” என்கிறான். இந்திரன் சொல்கிறார்… அதையெல்லாம் என்னால் தரமுடியாது. அறிவு வரமாக பெறவேண்டியது இல்லை. முயன்றால், படித்தால், கற்றால் வரக்கூடியது. இதை நீ வரமாக எப்போதும் பெறமுடியாது.” என்கிறார்.
ஒரு வத்தல் வியாபாரி பக்கத்தில் உள்ள பிள்ளையார்கோயில் சென்று, இன்று மழை பெய்யாமல் நன்றாக வெயில் அடித்தால் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறான். இன்னொரு பக்கத்தில் விதையை விதைத்துவிட்டு வந்த விவசாயி, நல்ல மழை பெய்தால் பிள்ளையாரப்பா உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டுகிறார்.
இப்ப.. இந்தப் பிள்ளையாரப்பர் யாருக்கு வரம் கொடுப்பார். இரண்டுபேரும் ஒரே ஊரில் உள்ளனர். வேறுவேறு ஊரில் இருந்தால் அந்த ஊருக்கு மழை, இந்த ஊருக்கு வெயில் என்று பிள்ளையார் வரத்தை எளிமையாகக் கொடுத்துவிடுவார். இந்நிலையில் பிள்ளையார் யாருக்கு என்ன கொடுப்பார் என்றால், யாருக்கும் எதையும் கொடுக்க மாட்டார். சும்மா இருப்பார். நடப்பது எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காளியம்மா கோயில் சென்று காசை வெட்டிப்போட்டு, அவன் நாசமாகப் போகவேண்டும் என்று வேண்டினால் காளியம்மா ஒருவனை நாசமாக்கிவிடுமா? நாசமாக்கினால் அது தெய்வமா? என்ற கேள்விகள் நமக்குள் எழும்.
கடவுளால் சில வேலைகளைச் செய்ய முடியாது. நம்மவர்களில் சிலர் கள்ளத்தனமாக அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள். அமெரிக்கா அவர்களை எல்லாம் கண்டுபிடித்து வெளியேற்றிவிட்டார்கள். எப்படியென்றால் கை, கால்களில் விலங்கு போட்டு உங்கள் இந்தியாவுக்குச் செல்லுங்கள் என்று வெளியேற்றிவிட்டார்கள். அமெரிக்காவின் சட்டவிதிகளின்படி கள்ளத்தனமாக குடியேறியவர்களை வெளியேற்றி விடும். கடவுள் தன் நிலபரப்பிலிருந்து யாரையாவது வெளியேற்ற முடியுமா? என்றால் முடியாது. அப்படியானால் கடவுளின் நிலப்பரப்பு எது? வீரராகவ பெருமாளின் நிலப்பரப்பு திருவள்ளூர்தான். அந்த எல்லையைத் தாண்டி அவர் சக்தி வேலை செய்யாது என்று கருதமுடியுமா?
ஆக்கம் – பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்