பௌத்த மதத்தில் இருந்து களவாடப்பட்ட கீதாசாரம் – பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன்
பௌத்த மதத்தில் இருந்து களவாடப்பட்ட கீதாசாரம் – பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
பெரும்பாலும் வழிபாட்டு நம்பிக்கை உள்ளவர்களினுடைய வீடுகளில் எல்லாம் கீதாசாரம் என்று ஒரு படம் ஒன்று தொங்கும். அதில், ”எது நடந்ததோ.. அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ… அது நன்றாகவே நடக்கிறது… என்பதாக தொடங்கும் கீதையின் சாரம் என்பதாக நீண்ட வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.
இதுவா கீதையினுடைய சாரம்? மகாபாரதக் காட்சியை நினைவு படுத்தி பாருங்கள். சண்டைக்கான சங்கை முழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இரு தரப்பும் பிரிந்து நிற்கிறது. அர்ச்சுனன் தேர் தட்டில் தன்னுடைய ஆயுதங்களை எல்லாம் துறந்து விட்டு இறங்குகிறான். “என்னடா.. இறங்கிப்போகிறாய்.. சண்டை போடலையா? என்று கண்ணன் கேட்க, “எதிரில் நிற்பவர்கள் எல்லாம் என் மாமன், மைத்துனன், அங்காளி, பங்காளி. இவர்களை அடித்து, கொன்று நான் என்ன செய்யப்போகிறேன். அவர்களே இந்த நாட்டை ஆளட்டும் எனக்கு நாடு வேண்டாம்” என்று அர்ச்சுனன் இறங்குகிறான்.
கண்ணன் சொல்கிறான் அர்ச்சுனனைப் பார்த்து, “பைத்தியக்காரனாக இருக்கிறாயே… நீ யார்? சத்திரியன். அடிப்பது உன் தர்மம். கொல்வதும் உன் தர்மம். அவனை அடித்து உன்னுடையதைப் பிடுங்கு. அதுதான் தர்மத்தை நிலை நாட்டுகிற வேலை” என்று பகவான் கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார். ஆனால், கீதாசாரத்தில் வருகிற உபதேசம் என்ன? இதுவா கீதையில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த வாசகங்கள் கீதையில் எங்கே இருக்கின்றன? இது ,பௌத்தத்தில் பௌத்த மரபைப் பேசுகிற குண்டலகேசி என்கிற நூலில் இடம் பெற்றிருக்கும் செய்தி. அப்பாடலில்,
“மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவதும் உறும் மென்று உரைப்பதே நன்று”.
இதன் பொருள், கிடைக்க வேண்டியது கிடைக்கும். கிடைக்கக்கூடாது என்றால் கிடைக்காது. மலர்வது மலரும். அழிவது அழியும். இதுதான் இயல்பு. இதை அறிந்தவர்கள் யாரும் இதற்காக வருத்தப்படமாட்டார்கள். இதற்காக மனம் கசங்க மாட்டார்கள். ஆகையினால், இது இப்படித்தான் நடக்கும் என்று அறிவு தெளிவோடு நடந்துகொள்வது நல்லது என்பதுதான்.
பௌத்தம் குறித்து பேசும் குண்டலகேசியின் பாடல் வரிகளின் உண்மையான பொருளை ஆட்டையை போட்டுக் கீழே கீதாசாரம் என்று எழுதி வைத்துக் கொள்கிறார்கள். ஆட்டையை போடுங்கள். அது நம்முடைய முதன்மை நூலுக்குப் பொருந்துகிறதா என்று பார்த்துவிட்டு ஆட்டைய போடவேண்டாமா? திருடுவது என்று தீர்மானித்துவிட்டால் நாம் எந்த மூலநூலில் கொண்டுபோய் அதைச் சொருகப் போகிறோமோ அந்த மூலநூலுக்கு அது பொருத்தமான கருத்தா என்று பார்த்துவிட்டாவது சொருக வேண்டாமா? கூறில்லாமல் செய்கிற வேலை.
– தொகுப்பு தி.நெடுஞ்செழியன்
வீடியோ லிங்:
[…] பௌத்த மதத்தில் இருந்து களவாடப்பட்ட க… […]