மேலே மோடி… கீழே எடப்பாடி ! திமுக-வுக்கு சவால் விட்ட அமைச்சர் !
சிவகாசி பாவடித்தோப்பு திடலில் நடைபெற்ற எம்ஜிஆர் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், வழக்கமான நினைவேந்தல் நிகழ்ச்சியை தாண்டி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் அரசியல் திசைகாட்டியாக மாறியது. அதிமுக மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்ஜிஆர் – ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியில் சிறப்பாக கோலம் இட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த கூட்டம், பின்னர் முழுமையாக அரசியல் மேடையாக மாறியது.

மேடையில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, “எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் பேசுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவது அவரது தொண்டர்களால் மட்டுமே முடியும்” என கூறி, திமுகவை நேரடியாக சவால் செய்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில், “திமுகவை வீழ்த்தி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும். மே 5-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்பார்” என்று உறுதியாக அறிவித்தார். “மோடி–எடப்பாடி இணை ஆட்சி” இந்த கூட்டத்தின் மையமாக மாறியது, “டெல்லியில் மோடி ஆட்சி – தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி” என்ற அரசியல் கோஷம்.
“மத்திய அரசுடன் எப்போதும் சண்டை போடாமல், பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்கான திட்டங்களையும் நிதியையும் பெற்றுவர வேண்டும். டெல்லியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி – இதுவே தமிழகத்திற்கு நல்ல தருணம்” என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, திமுகவின் மத்திய அரசுடனான மோதல் அரசியலை விமர்சித்தார்.
ரூ.2000 – முதல் கையெழுத்து அதிமுக தேர்தல் அறிக்கையை முன்வைத்த அவர், “எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற உடன் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கிலும் ரூ.2000 செலுத்தப்படும். கருப்பு, சிவப்பு, சீனி அட்டை என்ற பாகுபாடு இல்லை” என்று அறிவித்தார்.
மேலும், “திமுக அறிவித்த ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் முழுமையாக வழங்கப்படவில்லை. அது ஏமாற்று வேலை” என்று குற்றம் சாட்டினார். இலவச பயணம் – அரசியல் விமர்சனம் மகளிருக்கு மட்டும் இலவச பேருந்து பயண திட்டம் குறித்து பேசிய அவர், “இந்த திட்டம் குடும்பங்களை பிரிக்கும் வகையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
குடிநீர் கலப்பட குற்றச்சாட்டு சிவகாசி மாநகராட்சியை குறிப்பிட்ட ராஜேந்திரபாலாஜி, “தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குடிநீருடன் கண்மாய் நீர் கலக்கப்படுவதால், பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன” என்று திமுக நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார்.
பிரபல பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக 190 முதல் 210 தொகுதிகள் வரை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறக் கூடாது என்று கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.
23-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகளின் எண்ணிக்கை தெரியவரும். கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
“துப்பாக்கி போல ஓரணியில்” உரையின் முடிவில், “எம்ஜிஆர் – ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் துப்பாக்கி போல எடப்பாடி பழனிச்சாமியுடன் ஓரணியில் நிற்போம். திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி, எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் வரை அதிமுக ஓயாது” என்று சபதம் ஏற்றார்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.