சொத்துக்குவிப்பு வழக்கு – அமைச்சர் பொன்முடி குற்றவாளி உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு திமுகவுக்குப் பின்னடைவா? – பரபரப்பு தகவல்கள்
அமைச்சர் பொன்முடி
இந்தியத் தலைநகர் தில்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் இன்று (19.12.2023) நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக் கூட்டத்தில் திமுகவின் தலைவர் தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று காலை 11.00 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் பொன்முடி சட்டமன்ற உறுப்பினருக்குரிய தகுதியை இழந்துள்ளார். அமைச்சர் பொறுப்பு என்னும் தகுதியையும் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. திமுக அமைச்சர் ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK
வழக்கின் விவரம்
அமைச்சர் பொன்முடி
காலையில் தீர்ப்பு வெளியானவுடன் ஊடகங்களில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்னும் செய்தி பிரேக்கிங் நியூஸ்-ஆக வெளியிடப்பட்டது. எல்லாரும் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் தாமாகவே முன்வந்து பொன்முடி மீது வழக்கைத் தொடர்ந்திருந்த வழக்கின் தீர்ப்பு என்றுதான் எண்ணியிருந்தார்கள். ஆனால் (2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பொன்முடி மீது தொடரப்பட்ட முதல் சொத்துக்குவிப்பு வழக்கு. அதன் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை) இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பின் வழக்கின் விவரம் வேறு.
Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited
2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
பொன்முடி – கவர்னர் ரவி
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்த பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2017-ஆம் ஆண்டு தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றது. அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதாவது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணை டிசம்பர் 21 காலை 10:30- க்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொளி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மேலும், 64.90% வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியிருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
தண்டனை விவரம்
2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க
2016ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் அவர் மனைவியையும் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்த தீர்ப்பு இரத்து செய்யப்பட்டுக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை விவரங்கள் 21ஆம் நாள் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. பத்திரிக்கையாளர் மணி பொன்முடியின் தண்டனை விவரங்கள் குறித்துப் பேசும்போது,“ஒரு வருடத்திலிருந்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. சிறை தண்டனை இல்லாமல் அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது. எப்படியாக இருந்தாலும் 21ஆம் நாள் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பார்.
தொடர்ந்து அமைச்சருக்கான தகுதியையும் இழப்பார். 2 ஆண்டுகளுக்குக் கீழ்ச் சிறை தண்டனை என்றால், உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வழங்கினால் மட்டுமே அமைச்சராக நீடிப்பார்” என்று தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் பேசும்போது, “3ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்றால் உயர்நீதிமன்றமே பிணை வழங்கும் வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, பொன்முடி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வார்.
இதன் அடிப்படையில் பொன்முடி சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பொறுப்பிலிருந்து தகுதியிழந்தவராவார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தண்டனை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகளுக்குப் பொன்முடி தேர்தலில் போட்டியிட முடியாது என்பது கூடுதல் தகவல்.
திமுகவுக்குப் பின்னடைவா?
2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி, நிர்வாகத்தை வழங்கி வருகிறார் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது. முக.ஸ்டாலின் பாஜகவை ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றவேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியை உருவாக்கி அகில இந்தியக் கவனத்தை ஈர்த்து வரும் வேளையில், திமுகவின் மூத்த தலைவர், கல்லூரி பேராசிரியர் பணியிலிருந்து அரசியலுக்கு வந்தவர் என்ற நிலையில் சொத்துக்குவிப்பு என்னும் ஊழல் வழக்கில் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருப்பது திமுகவுக்குப் பின்னடைவுதான்.
எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக திமுக மீது மக்கள் மன்றத்தில் முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் திமுக தள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற வழக்கில், அமைச்சர் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் இராமச்சந்திரன், அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
“ஊழல் வழக்கின் தீர்ப்புகள் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சராக இருந்தார் என்ற வரலாறும் உள்ளது” என்று பத்திரிக்கையாளர் ஷ்யாம் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற பொன்(முடி)மொழியை நினைத்துப் பார்க்கவேண்டும்.
-ஆதவன்
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending