பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் உற்சவர் வீதி உலா ! அதிர்ச்சியில் பக்தர்கள் !
பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் உற்சவர் வீதி உலா ! அதிர்ச்சியில் பக்தர்கள் !
பாரம்பரிய பெருமை பெற்ற ஸ்தலமான ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மோடி வருகை தந்ததையொட்டி, பிரதமரின் பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் பெருமாள் மீதும் பாரம்பரிய நம்பிக்கைகளின் மீதும் பெரும் பற்றுக் கொண்ட பக்தர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மோடியின் ஸ்ரீரங்கம் விஜயம் தொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த ஸ்ரீரங்கம் வகையறாவைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் புலம்பல் வார்த்தைகள் அதிர வைக்கின்றன.
இதோ அங்குசம் இதழோடு அவர் பகிர்ந்துகொண்டதை அவரது வார்த்தைகளிலே கேளுங்கள். “ஸ்ரீநம் பெருமாள் திருவிழா காலங்களில் கோயிலுக்கு வெளியே சென்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ராமரை பூஜித்த பெருமாள் தான் இந்த உற்சவர். உற்சவ நாட்களில் அவர் வெளியே வந்துவிடுவார். அவர்தான் ராஜா. இதுதான் மரபு. காலை 7 மணிக்கு கிளம்பி வெளியே வரும் உற்சவர் மீண்டும் மாலை 6 மணி வாக்கில் தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
சில சமயங்களில் மழை பெய்தாலோ அல்லது பெருமாள் செல்லும் வழியில் யாராவது இறந்து போனாலும் மட்டுமே பெருமாள் வெளியே செல்லாமல் கோயிலுக்குள்ளே இருப்பார். தனிப்பட்ட ஒருவருக்காக வெளியில் செல்லாமல் இருப்பது இன்றே முதல் முறை.
ஜெயலலிதா எப்போது ஸ்ரீரங்கம் வருவதாக இருந்தாலும் மூலவரும், உற்சவரும் ஒன்றாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுதான் தனது பயண திட்டத்தையே மேற்கொள்வார்.
இப்போது மோடி ஒருவருக்காக, உற்சவரை கோவிலுக்குள்ளாகவே நிறுத்தி வைத்துவிட்டார்கள். சிகப்பு கம்பளம் போட்டார்கள். அம்புகுறி போட்டார்கள். மூலவர், உற்சவர் என ஒவ்வொரு இடத்திலும் ஒருவரை மட்டுமே நிறுத்தியிருந்தார்கள். அவராகவே போய்விட்டு வந்துவிட்டார். ஜே.சி., பட்டர் வாயிலிலேய வரவேற்று பூரண கும்பம் மரியாதை செலுத்தியதோடு சரி, அவர்கள் யாரும் மோடியுடன் போகவில்லை.
நான் என்ற அகந்தையில் யார் கோயிலுக்கு வந்தாலும் அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதன் பிறகு அவர்கள் சரிவை சந்திப்பார்கள். ஜெயலலிதா 1991 ஆண்டு முதல்வர் ஆன பிறகு சீரங்கம் கோயில் வந்த பொழுது ரங்கா ரங்கா கோபுரத்திலிருந்து அவர் உள்ளே சென்று வெளியே வரும் வரை யாரையும் அனுமதிக்கவில்லை. அதன் பிறகு அவர் பதவியை காலியாக்கியது.
பிறகு 2011 ஆம் ஆண்டு இந்த தவறை திருத்தி மூலஸ்தானம் செல்லும் வரை பக்தர்களை அனுமதித்து வந்தார்கள். இவர் ஜெயலலிதாவை விட பல மடங்கு அகந்தையில் வந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பே கோயில் கடைகளை காலி செய்து விட்டார்கள். அதாவது கடைக்குள் எந்த பொருளும் இல்லாமல் காலி செய்து விட்டார்கள். அதேபோல இரண்டு நாட்கள் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இவையெல்லாம் நான் என்ற அகந்தையில் வருவதுதான்.
கோயிலுக்கு சென்று வந்தால் யாரும் உடனே குளிக்க மாட்டார்கள். ஆனால், இவர் சுமார் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே இராமேஸ்வரம் கடலில் போய் குளித்து விட்டார் இதுவும் பெரிய அபத்தம். ” என்கிறார், அந்த பெருமாள் பக்தர்.
– மித்ரன்.