இந்து பக்தர்களின் உயிர் காத்த முஸ்லீம் – கங்கையில் மூழ்கிய மதம் – மீண்ட மனிதாபிமானம்
இந்து பக்தர்களின் உயிர் காத்த முஸ்லீம் – கங்கையில் மூழ்கிய மதம் – மீண்ட மனிதாபிமானம் – வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் கன்வர் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அந்தப் புனித யாத்திரை தற்போது தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 22-ம் தேதிவரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
கங்கை நதியை ஒட்டியுள்ள புனித தலங்களுக்குச் சிவ பக்தர்கள் பயபக்தியோடு நடைபயணமாகச் சென்று தாங்கள் கையோடு கொண்டுச் செல்லும் கலசங்களில் கங்கையாற்றின் புனித நீரை சேகரித்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
இந்தப் புனித யாத்திரையை ஒட்டிப் பக்தர்கள் நடைபயணமாகச் செல்லும் பாதை எங்கும், சாதி மத வேறுபாடுகளின்றி பல பிரிவினரும் கடை போடுவார்கள்.
இந்நிலையில், இஸ்லாமிய சமூக மக்களைப் புறக்கணிக்கும் வகையில், அவர்கள் விற்கும் பொருட்களை வாங்கக் கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில் கன்வர் யாத்திரைக்கு செல்லும் பாதைகளில் பெயர் பலகையுடன் உணவுப்பொருளின் கடைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், இறைச்சிக் கடைகள் வைக்கக் கூடாது என்றும் பாஜக ஆட்சி செய்யும் உத்திரபிரதேச அரசு வெறுப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் அரசுகளும் அதே உத்தரவைப் பிறப்பித்துப் பிரிவினைக்கான கடை விரித்தன. இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பாஜகவின் கூட்டணி கட்சிகளும் இந்த உத்தரவின் உள்நோக்கம் புரிந்து எதிர்ப்பு தெரிவித்தன.
மதவாத ஆட்சியாளர்களின் இந்த வெறுப்பு அரசியல் உச்சம் கண்டு, சாமானிய மக்களும் காறி உமிழ்ந்தனர்.
இந்த வெறுப்பு அரசியல் சர்ச்சைகளுக்கிடையே, கன்வர் யாத்திரை மேற்கொண்ட இந்துப் பக்தர்கள் ஐவரை, ஒருவராகக் களமிறங்கி காப்பாற்றிய முஸ்லிம் காவலர்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத நல்லிணக்கத்திற்கான இலக்கணமாய் திகழ்ந்த அந்த இளைஞரைச் சமூக ஊடகங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்கின்றன.
உத்ரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு படையில் தலைமை காவலராகப் பணி புரிபவர் ஆஷிக் அலி. கன்வர் யாத்திரையை ஒட்டி
ஹரித்வாரின் காங்க்ரா ஆற்றங்கரையில் தான் ஆஷிக் அலிக்கு பணி.
இந்நிலையில் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 21 வயது சிவ பக்தரான மோனு என்பவர், கடந்த செவ்வாய் கிழமையன்று காங்க்ரா ஆற்றில் இறங்கியப் போது, கங்கையின் நீரோட்டம் அவரை இழுத்து சென்றது.
உடனடியாகப் பணியில் இருந்த காவலர் ஆஷிக் அலி, தனது சக பணியாளர்களுடன் இணைந்து, உயிரைத் துச்சமெனக் கருதி ஆற்றில் குதித்து அவரைக் காப்பாற்றினார்.
அதே நாளில் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான கோவிந்த் சிங் என்பவரையும் ஆஷிக் அலி காப்பாற்றியுள்ளார்.
அதே போல் கடந்த திங்களன்று கோரக்பூரைச் சேர்ந்த 21 வயதான சந்தீப் சிங், டெல்லியைச் சேர்ந்த 17 வயதான கரண் மற்றும் ஹரியாணாவின் பானிபட்டைச் சேர்ந்த 15 வயது அங்கித் ஆகியோரையும் ஆஷிக் அலி காப்பாற்றியுள்ளார்.
கன்வர் யாத்திரை சர்ச்சைகளுக்கு மத்தியில் இஸ்லாத்தை சேர்ந்த ஆஷிக் அலி, இந்துமத பக்தர்களைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகப் பேட்டியளித்துள்ள ஆஷிக் அலி, “மதம் உள்ளிட்ட அனைத்திற்கும் அப்பாற்பட்டு உயர்வானது உயிர். அந்த உயிரைக் காப்பாற்ற எனது மதமான இஸ்லாம் வலியுறுத்துகிறது. நீரில் மூழ்கும் ஒருவரின் சாதி, மதத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு மனிதர்” என்று கூறி மதவாதிகள், வெறுப்பு அரசியல் பேசுபவர்களின் சீழ் பிடித்த சிந்தனையின் மீது சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.
ஆம்! கங்கையின் கரை புரண்டோடும் வெள்ளத்தின் ஆழ் பகுதிக்கு மதவாதம், பிரிவினை வாதம், வெறுப்பரசியலை இழுத்துச்சென்று மூழ்கடித்து, மனிதாபிமானத்தின் மகத்தான மனிதராகக் கரை திரும்பியுள்ளார் ஆஷிக் அலி.
கடந்த கால ஆட்சியாளர்களின் வெறுப்பு அரசியல், நாட்டை முள் காடாய் மாற்றி விட்டது.
ஆனாலும், தொடர்ந்து பயணிக்க அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கின்ற நம்பிக்கையை ஆஷிக் அலி ஏற்படுத்தியிருக்கிறார்.
அந்த நம்பிக்கை வலிமை பெற இன்னும் பல ஆஷிக் அலிகள் உருவாக வேண்டும். உருவாவார்கள்!
கட்டுரையாளர்