அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

என்னுடைய முதல் ஓட்டம்….

திருச்சியில் அடகு நகையை விற்க

என்னுடைய முதல் ஓட்டம். ஆண்டு 2014. தேதி நினைவில் இல்லை. நேரம் காலை ஏழு மணி. இடம் முகப்பேர் மங்கள் ஏரி பூங்கா. அன்றைய தினம் சூரியன் நீண்டு நிழல்பரப்பத்தொடங்குகிற காலையில் எப்படி ஓடுவது எங்கே ஓடுவது எப்படி மூச்சு விடுவது எதுவும் தெரியாமல் நான் அங்கே தனியாக நின்றேன். என்னைச் சுற்றிலும் பலரும் ஓடிக்கொண்டும் நடந்துகொண்டும் இருந்தனர். யாராவது என்னைச் சார் ஓடுங்க நாங்க இருக்கோம் என்று சொன்னால் தேவலாம் போல் இருந்தது. ஓடத்தொடங்க வேண்டும் என்கிற ஆர்வமும் நானும் அந்த நாளில் அங்கே தனியாக நின்றோம்.
ஓட்டம் என்னை மாற்றும், அது புத்துணர்வளிக்கும், ஆரோக்கியமாக இருக்க வைக்கும் என்றெல்லாம் நான் ஓடத்தொடங்கவில்லை. சிகரெட் பழக்கத்தைக் கைவிட்டபிறகு உண்டான மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான மாற்று வழியாக ஓட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
முதல் ஓட்டம் எவ்வளவு தூரம் ஓடவேண்டும் என்று தெரியாது. உத்தேசமாக நானே அந்தப் பூங்காவை ஒரு ரவுண்டு சுற்றி வருவது எனத் தீர்மானித்திருந்தேன். பூங்காவின் சுற்றளவு வெறும் ஐநூறு மீட்டர்கள்தான். அன்றைக்கு அதுவே எனக்கு நீண்ண்ண்ண்ட…
ஆரம்பம் நன்றாக இருந்தாலும் முதல் சுற்றின் பாதியிலேயே மூச்சு திணறல் எடுக்கத்தொடங்கியது. கணுக்கால் வலியில் கால்களைக் கழட்டி வீசிவிடலாம். தலைசுற்றுவது போலவும் இதயத்துடிப்பு மிக அதிகமாக இருப்பது போலவும் பலவிதமான உபாதைகள். அனேகமாக எனக்கு மாரடைப்பு வந்துவிட்டது என நினைத்துக்கொண்டேன். லேசாக இடதுபுறத் தோள்பட்டையில் வலி, வியர்த்துக்கொட்டத் தொண்டை தாகத்தில் தவிக்கிறது.
பாதங்களில் வலி, முட்டிக் குடைகிறது. இத்தனைக்கும் வெறும் 250மீட்டர்கள்தான் ஓடியிருப்பேன். நான் அதிக எடை கொண்ட ஆள் கூட இல்லை. அப்போதே 65 அல்லது 66 கிலோதான் இருந்திருப்பேன். இப்போதும் அதே எடைதான். ஆனாலும் ஓட முடியவில்லை.
தண்ணீர் எடுத்துச்செல்லவேண்டும் என்கிற புத்தி கூட அப்போது வரவில்லை. அருகில் நடந்து செல்கிற யாரையாவது பற்றிக்கொண்டு (அருகிலிருந்தும்) தொலைவாகத் தெரிகிற பார்க் பெஞ்சில் அமர்ந்துகொள்ள உடல் துடிக்கிறது.
அன்றைக்கு நான் அந்தப் பெஞ்சை எட்டிப் பிடித்தபோது அதில் அமரவில்லை. படுத்துக்கொண்டேன். அன்று மூச்சுவிடவில்லை நுரையீரலையே வாய்வழியே வெளியே தள்ளிக்கொண்டிருந்தேன். இனிமேல் ஓடவே கூடாது என்கிற எண்ணம் மட்டும்தான் மனதில் இருந்தது. நாளைலருந்து மூடிட்டு வீட்டில் போத்தி படுத்துத் தூங்குவதுதான் நல்லது என்று தீர்மானித்துக்கொண்டேன்.
நான்கு நிமிடங்கள் ஓடிவிட்டு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்தவாக்கிலேயேதான் இருந்தேன். ஜிம்மில் சேர்ந்துவிடலாம், அல்லது சைக்ளிங் போகலாம் அல்லது எதுவுமே பண்ணாமல் நிம்மதியாக இருந்துவிடலாம் அல்லது தினமும் நடைப்பயிற்சி மட்டும் பண்ணலாம் அல்லது நீச்சலில் சேரலாம், சாமியாராகப் போய்விடலாம், திமுகவில் சேர்ந்துவிடலாம், அதிமுகவில் சேரலாம், ராணுவத்தில் சேர்ந்துவிடலாம், ஐஏஎஸ் ஆகிவிடலாம் என்று என்னென்னவோ சிந்தனைகள். ஓடிய ஓட்டத்தில் பைத்தியம் பிடித்துவிட்டதோ? ஆனால் ஓட்டம் மட்டும் வேண்டாம் என்பது மட்டும் தீர்மானமான முடிவு.
இதெல்லாம் ஒரு விளையாட்டா ச்சைக். அப்படியே என் அன்பிற்கினிய ஓட்டமே உனக்கு ஒரு கும்பிடு உன் சங்கத்திற்கு ஒரு கும்பிடு என அப்படியே வீட்டுக்கு வந்து படுத்துவிட்டேன்.
கடினமான ஒன்றைத் தொடங்குவதில் முதல்நாளை விட அடுத்த நாளுக்குத்தான் முக்கிய பங்கிருக்கிறது! அடுத்த நாள் விடிந்த போது மணி ஏழரை. தமிழர் வாழ்வில் ஏழரை என்கிற எண்ணுக்குப் பிரத்யேக மதிப்பு உண்டு. ஆனால் அன்று நான் ஏழரை மணிக்கு எழுந்து பூங்காவிற்குச் சென்று இருக்காவிட்டால் ஓட்டம் என் வாழ்வை விட்டே ஓடியிருக்கும். இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்காது.
அடுத்த நாளில் நூறுமீட்டர்தான் ஓடினேன். கைகளில் தண்ணீர் வைத்துக்கொண்டு இந்த முறை மெதுவாக ஓடினேன்.
நிதானமாக ஓடக்கூடியவர்களால்தான் நீண்ட தூரம் பயணிக்க முடியும். அன்று நான் பொறுமையாக ஓடினேன். மூச்சைக் கட்டுப்படுத்த முடியவில்லைதான். கால்கள் வலிக்கிறதுதான். ஆனாலும் தூரம் சிறியது வேகம் குறைவுதான். ஓடினேன். அடுத்தடுத்த நாட்களிலும் ஓடினேன். ஓட ஓட ஓட்டமே எனக்குக் கற்றுக்கொடுத்தது. பயணிக்க முடிவெடுத்துவிட்டவனுக்குப் பாதையே வழிகாட்டும். எப்படி ஓடவேண்டும், எப்படி மூச்சுவிடவேண்டும், என்ன சாப்பிடுவது எவ்வளவு தூங்குவது எவ்வளவு ஓய்வெடுப்பது என ஒவ்வொரு நாளும் ஒரு விஷயம் கற்றுக்கொள்வேன். பார்க்கிறவர்களிடம் எல்லாம் ஓட்டம் பற்றிப் பேசத்தொடங்கிவிட்டேன். 2014 சென்னை மாரத்தானில் கலந்துகொண்டேன். மலைக்கவைக்கிற ஒரு சாகசமாக இருந்தது. 21கிலேமீட்டர்களை முதன்முதலாக ஓடிமுடித்தேன்.
முந்தைய நாள் வரை நான் வேறொரு ஆள். அன்றைக்குக் காலைத் தரையில் கால் பதித்த நொடி தொடங்கி இன்னொரு மனிதனாக மாறத்தொடங்கினேன். புதிதாய்ப் பிறந்தேன்.
அதற்குப் பிறகு எத்தனையோ மாரத்தான்களை ஓடிவிட்டேன். ஷூவைத் தூக்கி எறிந்துவிட்டு வெறுங்காலில் ஓடினேன். லடாக் வரை சென்று ஓடி இருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டு 2023ல் சென்னையில் நடக்கிற மாரத்தான் எனக்கு மிகவும் முக்கியமானது. காரணம் நான் இதற்காக ஆறுமாதங்களாகத் தீவிரமாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். காரணம் முடிவு செய்துவைத்திருந்த இலக்கு அப்படி!
இந்த முறை எப்படியாவது முதல் பத்து இடங்களைப் பிடித்துவிடுவது! இப்படி ஒரு இலக்கு வைத்துக்கொள்வதற்கே திமிர் வேண்டும். நோ கட்ஸ் நோ க்ளோரி! என்னுடைய நாற்பதாவது வயதை மார்ச் மாதம் எட்டப்போகிறேன். நாற்பதில் நுழைகிற இந்த நேரத்தில் எனக்கு நானே தரக்கூடிய ஒரு பிறந்தநாள் பரிசுதான் இந்த இலக்கு! அடுத்து என்னுடைய எட்டு வாசகர்கள். அவர்களுக்கு நான் என் எழுத்தால் எதைத் தந்திருக்கிறேனோ இல்லையோ நிறையத் தன்னம்பிக்கையைப் பாஸிட்டிவிட்டியை கொடுத்திருக்கிறேன். அதற்கும் இந்த இலக்கு முக்கியம்.
மாரத்தானில் முதல் பத்து இடங்களுக்குள் வருவது அத்தனை சுலபமான இலக்கில்லை என்பது எனக்குத் தெரியும். அந்த ஓட்டத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும். ரேஸ்கார்களோடு ஸ்பெலென்டர் வண்டியை ரேஸில் விடுவதற்கு ஒப்பானது என் முடிவு.
இலக்குகளை எவ்வளவு தீவிரமாக வைத்துக்கொள்கிறோமோ அவ்வளவு வலிகளையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும். வலிகளுக்கு அஞ்சுபவர் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடியும். மாரத்தான் என்பது சட்டென முடிகிற ஸ்ப்ரின்ட் ஓட்டமில்லை. நீண்ட தூரத்திற்கு ஒரே வேகத்தில் ஓடவேண்டும். அந்தவேகம் மிக அதிகமாக இருந்தால் மட்டும்தான் முதல் பத்தை எட்ட முடியும்.
முழுநேரமும் ஓட்டத்தையே தொழிலாகக் கொண்டவர்களோடு போட்டியிடுவது சுலபமில்லை. அவர்களுக்கு இதுதான் வேலை. அவர்கள் பயிற்சியாளர் வைத்திருக்கிறார்கள். தினமும் பல மணிநேரங்களைப் பயிற்சிக்குக் கொடுப்பவர்கள். சிலர் இதற்காகவே ஊட்டி சிம்லா மாதிரி மலைகளில் தங்கிப் பயிற்சி எடுப்பவர்கள். ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துவார்கள். பல ஆண்டுகளாக இதற்காகவே தயாராகிக்கொண்டிருப்பவர்கள். எல்லோரும் ஷூ போட்டு ஓடுபவர்கள். (நானோ வெறுங்கால் வேந்தன்.) இவர்களோடு மோதுவது அத்தனை எளிதில்லை. சினிமாவில் காட்டுவதைப்போல ஒரே பாட்டில் சாம்பியன் ஆகிவிடமுடியாது.
முறையான திட்டமிடல் வேண்டும். பயிற்சி வேண்டும். காயமேற்ப்பட்டுவிடக்கூடாது. 2016ல் இப்படித் தீவிரப் பயிற்சி எடுத்தபோது கால்தடுக்கி கணுக்கால் பிசகி ஆறுமாதம் ஓடமுடியாமல் செய்திருக்கிறது. அதனால் கவனம் வேண்டும். வயது ஆகத் ஆக தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளுகிற ஆற்றலும் குறைகிறது. அதையும் மனதில் கொள்ள வேண்டும். இப்படி ஏகப்பட்ட வேண்டும்கள், கொள்ளவேண்டும்கள்.
உலகில் எதையும் விடக் கல்விதான் நம்மை மேம்படுத்தும். ஓட்டத்திலும் அதுதான். பொறுமையாக இதுமாதிரியான இலக்குக்கு என்னென்ன செய்ய வேண்டும் எவ்வளவு ஓடவேண்டும். எவ்வளவு ஓய்வு, என்னமாதிரியான திட்டமிடல் என உட்கார்ந்து வேலைபார்த்து அதற்கேற்பத் தின்று செரித்து எடை குறைத்து, கூட்டித் தயாரானேன். எப்படித் தயாரானேன் எப்படி வேகத்தைக் கூட்டினேன் என்பதெல்லாம் தனியாக எழுதவேண்டிய மாபெரும் கதை!
ஒருவழியாகச் சென்னை மாரத்தானுக்குத் தயாராகிவிட்டேன். மாரத்தான் இந்த முறை எப்போதும் ஓடுகிற ரூட் இல்லை. புது ரூட் என்றார்கள். அதுவே பெரிய அதிர்ச்சிதான். ராஜீவ்காந்தி சாலைவழியாக ஓடிக் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு கல்லூரியில் முடியும்படி அமைத்திருந்தார்கள்.
ஓட ஆரம்பித்த பிறகுதான் பிரச்சனைகள் புரியத்தொடங்கியது. சாலைகள் எல்லாம் மெட்ரோவால் கைமா போடப்பட்டிருந்தன. எங்குப் பார்த்தாலும் குருணை குருணையாகக் கற்கள். காலை ஊன்றினால் உச்சந்தலையில் வேதனை வாட்டுகிறது. ஆணிசெறுப்பை அணிந்துகொண்டு ஓடுவதைப்போல் இருந்தது. அதற்காகப் பின்வாங்கிவிட முடியாது. ஆறுமாதப்பயிற்சி எல்லாம் வீணாகிவிடும். ஓடு ஓடு என என்னை நானே உற்சாகப்படுத்திக்கொண்டு ஓடினேன்.
குண்டுகுழியுமான சாலையில் நான் தீர்மானித்திருந்த வேகத்தில் ஓடமுடியவில்லை. அதையும் மீறி ஓடியிருந்தால் கட்டாயம் எங்காவது சிதறி விழுந்து காலை உடைத்துக்கொண்டிருப்பேன். இருப்பினும் ஓரளவு வேகத்திலேயே ஓடினேன். சோழிங்கநல்லூர் வரைக்குமே கூடச் சாலை மேல்நோக்கியே சென்றுகொண்டிருந்தது. ஓடுவதற்குள் தாவூ தீர்ந்துவிட்டது.
பொதுவாக மாரத்தான் நாளில் சாதாரண நாட்களைவிட ஒருபங்கு கூடுதலாகவே வேகமெடுக்க முடியும். ஆனால் அன்றைக்கு என்னால் சாதா நாட்களைவிடவும் குறைவான வேகத்தில்தான் ஓடமுடிந்தது. எப்போதும் (4-30ல் ஓடுகிறவன் 4-35 வாக்கில்தான் ஓடினேன்.)
எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அன்றைக்குச் சோதனையாகத்தான் இருந்திருக்கிறது. வெப்பநிலை, சாலைகள், காற்றின் திசை என எதுவுமே சாதகமாக இல்லை. கல்லுமுள்ளும் காலுக்கு மெத்தை என்று ஓடிக்கொண்டிருந்தேன்.
ஆச்சரியமாக நான் ஓடும்போதே சிலர்வழியில் என்னை அடையாளம் கண்டுபிடித்துச் சார் உங்க புக் படிச்சிதான் ஓட ஆரம்பிச்சேன் தாங்க்யூ, வாழ்த்துகள் என அன்பைப் பொழிந்தனர்!
நான் ஓடியது அரைமாரத்தான். வைத்திருந்த இலக்கு 90 நிமிடங்கள். ஆனால் முடித்தது 97 நிமிடங்களில். என்னளவில் இதுவே பெரிய சாதனைதான். நான் இலக்கு வைத்திருந்த முதல் பத்திற்குள் முடிக்க முடியவில்லை. இருப்பினும் 12வது இடத்தைப் பிடித்தேன். மூவாயிரம் பேர் ஓடிய போட்டியில் 12 என்பது சாதாரண எண் அல்ல! இமாலயச் சாதனைதான். ஓடிமுடித்து அமர்ந்தபிறகும் என் எட்டு வாசகர்களும் என்னை அடையாளங்கண்டு கொண்டு புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டனர்.
அந்த முதல் நாள் முதல் ஓட்டத்தை நினைத்துக்கொண்டேன். எந்த இடத்திலிருந்து எங்கே வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது வியக்கும்படி இருந்தது. எப்போதுமே முதல் அடிதான் கடினமானது. அதை எடுத்து வைப்பதுதான் சிரமமானது. ஓட்டத்திற்கு மட்டுமல்ல இது வாழ்வின் எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.
ஓட்டம் என் வாழ்வை மட்டுமல்ல அது என்னை வாசிக்கிற எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. எத்தனையோ பேரை ஆரோக்கியமான மனிதர்களாக்கி இருக்கிறது. அந்த எத்தனையோ பேருக்கும் நாற்பது வயதாகும் எனக்கும் இந்தச் சிறப்பான ஓட்டத்தைப் பரிசளிக்கிறேன். ஓட்டம் ஒருநாளில் முடிவதில்லை. நிறைய ஓட வேண்டி இருக்கிறது. வாங்கச் சேர்ந்து ஓடுவோம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

—    அதிஷா வினோத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.