ஓய்வறியாது உழைத்த திருச்சியின் முகமாகத் திகழ்ந்த நந்தலாலா !

1

திருச்சியின் முகம் கவிஞர் நந்தலாலா – நினைவேந்தல்

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் எனும் சிற்றூரில் பிறந்த நெடுஞ்செழியன் என்னும் இளைஞர் நந்தலாலா என்கிற புனைப்பெயரில் கவிதைகள் எழுதத்துவங்கினார். இந்தியன் வங்கி ஊழியராகப் பணியாற்றிக்கொண்டே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தீவிரமாக இயங்கி வந்தார். நாகப்பட்டினத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் நாகை கலை இரவை மிகப்பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியதில் பெரும்பங்காற்றினார். திருச்சிக்கு மாற்றலாகி வந்த பிறகு திருச்சியிலும் அருகமை மாவட்டங்களிலும் தமுஎகசவை உருவாக்குவதிலும் வழிநடத்துவதிலும் அவரது பங்கு தலையாயது.

சோலைக்குயில்கள் என்கிற இலக்கிய இதழை திருச்சி தோழர்களுடன் இணைந்து நடத்தி வந்தார். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று திறந்தவெளிக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பேசி வந்தார். அவர் பேசாத மேடை இல்லை, கால் படாத மாவட்டம் இல்லை. அவருடைய அறிவார்ந்த, அங்கதம் மிகுந்த உரைகளுக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்திலும் உலகின் பலநாடுகளிலும் உண்டு. இலக்கிய தளத்தில் உடனிருக்கும் அனைவரையும் நண்பராக ஏற்று அன்பு பாராட்டுவார். தமிழ்நாடு முழுக்க கூட்டங்களுக்குப் பயணம் செய்யும் நந்தலாலா திருச்சியில் இருக்கும் வேளைகளில், உள்ளூர் நிகழ்ச்சிகளில் அழைப்பேரில் கலந்துகொள்வார். சில வேளைகளில் கூட்ட நிகழ்வைப் பார்த்து அழைப்பில்லாமலும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, கூட்டம் நடத்துபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்பது யாவருக்கும் கைவரபெறாத பண்பாகும்.

திருச்சியில் யாவரும் கேளீர் நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா
திருச்சியில் யாவரும் கேளீர் நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா

2018இல் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, நம்ம திருச்சி, என் திருச்சி ஆகிய வார இதழ்களில் கட்டுரைகள் எழுதி பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் எழுதிய காதில் விழுந்த திருச்சி வரலாறு என்னும் தொடரைப் படித்துவிட்டு, இதழ் ஆசிரியர் ஜெடிஆர் அவர்களிடம் தொடர் குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் பாப்பா உமாநாத் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தலைப்பு “திருச்சியின் புரட்சித்தலைவி” என்று தலைப்பிட்டு, சிறு தலைப்பில், “ஜெயலலிதா சொல்வது பொய்” என்று அந்தக் கட்டுரை வெளிவந்திருந்தது. இதைப் படித்துவிட்டு, தொடர் எழுதிய என்னை ஒரு விழாவில் நந்தலாலா சந்தித்தார். அப்போது,“விகடன் இணையத்தில் நான் எழுதும் ஊறும் வரலாறு தொடர் படித்திருக்கின்றீர்களா?” என்று கேட்டார். “இல்லை என்றேன்” தொடர்ந்து அவர்,“நானும் பாப்பா உமாநாத் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறேன்.

உங்கள் கட்டுரையில் உள்ள எழுத்துகளில் உள்ள இரசனை மிகுந்த வரிகளைப் படித்து வியந்தேன்” என்றார். தொடர்ந்து எந்த இலக்கியக் கூட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் சந்தித்தாலும் பேராசிரியர் என்றே விளிப்பார். ஒருமுறை “உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமைம உள்ளது என்ன தெரியுமா? என் இயற்பெயர் எஸ்.நெடுஞ்செழியன்” என்று என்னை வியப்பில் ஆழ்த்தினார்.

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெரியார் பிறந்தநாள் விழாவை விடுபாடுகள் இல்லாமல் 3 ஆண்டுகளும் கொண்டாடப்பட வேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்து ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். அந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் நந்தலாலாவிடம் புலனம் வழி செய்திகள் தெரிவிப்பேன். பின்னிருந்து நந்தலாலா என்னை இயக்கிக் கொண்டிருந்தார். மேலும் அவர்,“இறுதியில் நானும் கோவனும் வருவோம். அதற்கு அவசியம் இல்லாமல் நீங்களே இப் போராட்டத்தில் வெற்றிபெறுவீர்கள்” என்றும் வாழ்த்தினார்.

கவிஞர் நந்தலாலா
கவிஞர் நந்தலாலா

அதுபோலவே பெரியார் மீது பற்று கொண்ட தோழர்களின் முயற்சியால் அந்தப் போராட்டத்தில் வெற்றிப்பெற்றோம். செய்தி அறிந்து அலைபேசியில் உரையாடும்போது,“நாங்கள் வந்திருந்தால் எங்களால்தான் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றது என்று செய்திகள் வெளியிடப்படும். எங்களைப் போலவே போராட அடுத்ததலைமுறை உள்ளது என்பதைத்தான் இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியிருக்கிறது” என்று சொல்லி எம்மை நெகிழச் செய்தார்.

2024 ஜூலை மாதம் முதல் அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் ‘யாவரும் கேளீர்’ என்னும் தமிழியல் பொதுமேடை நிகழ்வை மாதம் இருமுறை (2ஆம் சனி, 4ஆம் சனி) நடத்தினோம். அப்போது நந்தலாலா என்னைச் சந்தித்தபோது,“ஜெடிஆரிடம் பேசிவிட்டேன். ஒரு நிகழ்வில் என்னையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தோழமையோடு கூறியது என்னை வியப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது.

தமிழகம் அறிந்த நாவன்மைமிக்க பேச்சாளர் இத்தனை எளிமையாக இருப்பது என்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது. 2024 ஆகஸ்ட்டு மாதத்தில், ஐயா…. நீங்கள் 2024 டிசம்பர் 28ஆம் நாள் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் தொடர்பாக “பெரியார் போற்றுதும்… பெரியார் போற்றுதும்” என்ற பொருண்மையில் உரையாற்ற வேண்டும்” என்ற எங்களின் வேண்டுகோளை ஏற்றார். நிகழ்வின்போது களம் அமைப்பின் கூட்டம் முடிந்து யாவரும் கேளீர் நிகழ்வுக்கு இரவு 7.00 மணிக்கு வருகை தந்து, பெரியாரை நாம் எப்படி புரிந்துகொள்ளவேண்டும்…. அவரை நாம் ஏன் போற்றவேண்டும்” என்று 60 நிமிடங்கள் உரையாற்றினார். அறிவார்ந்த நந்தலாலாவின் உரையை அரங்கம் கேட்டு புதிய சிந்தனை பெற்று மகிழ்ந்தது.யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை - 12.

நிகழ்வு முடிந்து பிளாசம் விடுதியின் கீழ் வைத்திருந்த ஸ்கூட்டியை எடுக்கவேண்டும் என்னையும் அழைத்தார். நிகழ்வில் வழங்கப்பட்ட நூல்கள், பயனடைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவரோடு சென்றேன். நாடாறிந்த பேச்சாளர் நந்தலாலா,“பேராசிரியர் நிகழ்வுக்குச் சிறப்பாக இருந்தது. காலத்தால் அழியா வண்ணம் வீடியோ பதிவு வேறு செய்திருக்கின்றீர்கள். யூடியூபில் பதிவேற்றம் வேறு செய்ய இருக்கின்றீர்கள். உங்களுக்கும் ஜெடிஆருக்கும் என் நன்றி. நவீன தொழில்நுட்பத்தை இப்படித்தான் நம் சிறப்பாக பயன்படுத்தவேண்டும். சரி பேராசிரியர் என் உரை எப்படி இருந்தது? உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினேனா?” என்று குழந்தை மனத்தோடு என் பதிலுக்காகக் காத்திருந்தார். நந்தலாலாவின் உரை எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் நிறைவான உரை” என்றேன். பரிசு பொருள்களை ஸ்கூட்டியில் வைத்துவிட்டு, என் கரங்களைப் பற்றி, மகிழ்ச்சியோடு குலுக்கிவிட்டு, “நெஞ்சம் நிறைய மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன்” என்று வாகனத்தை இயக்கி சென்றார்.

யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை - 12.
யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 12.

மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன் என்றபோது எங்களிடமிருந்துதான் விடைபெறுகின்றீர்கள் என்று நாங்களும் விடை கொடுத்தோம். இரு மாதங்கள் கழிந்த நிலையில் எங்களைவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டீர்கள் என்ற செய்தி எங்கள் செவிகளில் விழுந்தபோது, தேன் கொட்டிய செவிகளில், தேள் கொட்டியதுபோல் துடித்துப்போனோம். கர்நாடாக மாநிலம் பெங்களூரில் உள்ள மருத்துமனையில் இறுதி மூச்சு அடங்கியது என்ற செய்தியும் எங்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. எழுத்து, பேச்சு, செயல்பாடுகள் என ஓய்வறியாது உழைத்த திருச்சியின் முகமாகத் திகழ்ந்த நந்தலாலா இப்போது நிரந்தரமாக ஓய்வெடுத்துள்ளார் என்றே எண்ணுகிறோம். எங்களின் செயல்பாடுகளில் உங்களைப் பின்பற்றுவோம். உங்கள் உடலுக்கு அழிவிருக்கலாம். செயல்களால் நந்தலாலா எப்போதும் எங்களோடு வாழ்ந்துகொண்டே இருப்பார். அன்பு தோழருக்கு நம் வீரவணக்கம்.

-ஆதவன்

@@@

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் கவிஞர் நந்தலாலா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் எனக் கவிஞர் நந்தலாலாவின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும், அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர்.

காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா தமது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீராக்காதலுக்கு, ‘திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு’ நூலே சான்றாகும். அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும், கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கவிஞர் நந்தலாலா. கலைஞர் குறித்து, ‘தாம் வாழ்ந்த காலம் முழுதும், மானமும் அறிவும்: துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்புப் போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள்’ என்று உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது.

@@@

அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்ச் சமூகத்திற்கு இலக்கியத் தொண்டாற்ற திருச்சி தந்த தேர்ந்த கவிஞர் அண்ணன் நந்தலாலா அவர்களின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன்.
எழுத்தாற்றல் மட்டுமின்றி, கேட்போருக்கு திகட்டாத பேச்சாற்றலுக்கும் சொந்தக்காரர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினராக – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக சிறப்பாக செயல்பட்டார். “திருச்சிராப்பள்ளி – ஊறும் வரலாறு” என்ற அவரது நூல் ஆகச்சிறந்த காலப்பெட்டகம். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் மீது மாறா பற்றும், தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மீது அன்பும் கொண்டவர். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதல்கள்.

@@@

கவிஞர் - நந்தலாலா தன் மனைவியுடன்
கவிஞர் – நந்தலாலா தன் மனைவியுடன்

சேவை கோவிந்தராஜ் 

நட்பாய் அன்பாய் பழகி எல்லோரையும் ஈர்க்கக் கூடியவர் என்னையும் ஈர்த்தவர். அன்பிற்கினிய நண்பர் நந்தலாலா அவர்களுக்கு  எங்கள் திருச்சி மாவட்டநலநிதிகுழுவின் உறுப்பினருக்கு புகழஞ்சலி ….

@@@

திருக்குறள் முருகானந்தம் 

சோலை குயில்களில் தன் இலக்கியப் பயணத்தை தொடங்கியவர் .இன்று புவியெங்கும் செம்மொழித் தமிழை பரப்பிய செம்மல் .இளைய தலைமுறை யினரைகைபிடித்து நடத்திச் சென்ற வழிகாட்டி .கலை இலக்கிய இரவு என்ற ஒரு புதிய இலக்கிய மேடையைஉருவாக்கியவர். மறைந்த சமூக ஞானி தவத்திருகுன்றக்குடி அடிகளாரின்உள்ளம் கவர்ந்தவர்.தவத்திரு பொன்னம்பல அடிகளாரை கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்து இளைஞர்களுக்கு இலக்கிய தாகத்தை ஏற்படுத்தியவர் .இவர் சொல் வல்லார்.சோர்விலார் .அவை அஞ்சார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குபேரிழப்பாகும். இவரது இழப்பு இன்றைய இளம் இலக்கியவாதிகளுக்கு பேரிழப்பாகும் .நாளும் நற்றமிழால் தன் நாவால் நடனமாட வைத்த நந்தலாலா புகழ் ஓங்குக

@@@

கோவி.லெனின் – மூத்த பத்திரிகையாளர் 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விடிய விடிய நடத்தும் கலை இரவு விழாக்களில் அண்ணன் திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் 30 ஆண்டுகளுக்கு முன், ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா-கண்ணதாசனா?’, ‘பழைய பாடலா புதிய பாடலா?’ போன்ற தலைப்புகளில் நடைபெற்ற பட்டிமன்றங்களில் கவிஞர் நந்தலாலாவின் பேச்சுகளைக் கேட்கத் தொடங்கினேன். நகைச்சுவை கலந்த சொற்சுவை மிக்க பேச்சும், கொள்கை சார்ந்த அவரது எழுத்துகளும் சிறப்பாக இருக்கும்.  ஒரு கட்டத்தில் அவருடன் சில மேடைகளில் இணைந்து பங்கேற்கும் வாய்ப்புகள் அமைந்தன. எப்போது சந்தித்தாலும் அன்புடன் நலம் விசாரிப்பார். பட்டிமன்றம், கருத்தரங்கம், கவிதை, கட்டுரை ஆகியவற்றடன் வரலாற்று ஆய்வுகளையும் மேற்கொண்டவர் நந்தலாலா. நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி என் ஏறத்ததாழ 700 பக்க புத்தகத்தில் சு.முருகானந்தம், தி.மா.சரவணன், பைம்பொழில்மீரான் ஆகியோருடன் கவிஞர் நந்தலாலாவின் பங்களிப்பும் இணைந்திருக்கும். மன்னர்கள் காலம் முதல் மக்களாட்சி காலம் வரையிலான தரவுகளுடனான ஆவணம் அது. ஊறும் வரலாறு என்ற அவருடைய படைப்பும் முக்கியமானது. அவரிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்த நிலையில், காலம் அவரை அழைத்துக் கொண்டிருக்கிறது. போய்வாருங்கள்..
நாங்கள் வரும்வரை உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்.
திருவள்ளுவர் ஆண்டு 2056 மாசி 20
@@@

கவிஞர் – மனுஷ்யபுத்திரன் 

கவிஞரும் பிரபல சொற்பொழிவாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவினால் பெங்களூரு மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தம் தருகிறது. எத்தகைய அரங்கையும் தன்வசப்படுத்த கூடியவர். முற்போக்கான எண்ணங்களை எண்ணற்ற மேடைகளில் முன்வைத்தவர்.
நானும் அவரும் பல மேடைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். மிகுந்த தோழமையும் இணக்கமும் கொண்டவர்.
எண்பதுகளில் திருச்சியில் செயல்பட்ட சோலைக்குயில்கள் இலக்கிய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளர். அந்த அமைப்பின் இளைஞர்கள் திருச்சி பூங்காகளில் கவிதைகள் வாசித்தார்கள். அக்விதைகளை மாதா மாதம் ஒரு இதழாகவும் வெளியிட்டார்கள்.
எனது ஆரம்பகால கவிதைகள் அதில் தான் வெளிவந்தன. அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ்ப்பணி செய்திருக்க வேண்டியவர். நன்கறிந்தவர்களின் எதிர்பாராத மரணங்கள் மிகுந்த நிலைகுலைவைத் தருகிறது. அஞ்சலிகள்.
@@@
குமரேசன் – மூத்த பத்திரிகையாளர் 
ஒரே தலைப்பில் நூறாவது முறையாகப் பேச அழைக்கப்பட்டாலும் புதிய தகவல்களுடன் புதிய உரையை உழைத்துத் தயாரித்துத் தருவதை…
கருத்தியல் எதிரிகளும் மறுக்க முடியாத கருத்துகளை வலுவாக முன்வைப்பதை…
கற்றறிந்தோர், எளிய பாட்டாளிகள் என எந்தத் தரப்பினர் கூடியிருந்தாலும் அவர்களுக்கேற்ற முறையில் செரிவான சிந்தனைகளைப் பரிமாறுவதை…
உரிமையெடுத்து அவையோருடன் நெருக்கமாக உரையாடுகிற உணர்வை ஏற்படுத்துவதை…
வரலாறு, இலக்கியம், வாழ்க்கை, பண்பாடு, அரசியல், பகுத்தறிவு என எல்லா உள்ளடக்கங்களிலும் வெகுமக்களுக்கான புரிதலை வழங்குவதை…
இனி யாரிடம் காண்போம் நந்தலாலா?
@@@

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் 

நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொடிருக்கிறேன். தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக,
சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்ந்தது. பூவிரியும் காவிரியின் புன்சிரிப்பை,
அடர்த்தியும் அழகும் கொண்ட தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம்.
@@@
மக்கள் கலை இலக்கிய கழகம், தமிழ்நாடு.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், எழுத்தாளரும், கவிஞருமான தோழர். நந்தலாலா மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எமது வேண்டுகோளை ஏற்று பல மேடைகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் 9வது மாநில மாநாட்டை வாழ்த்திப்பேசினார். நமது அமைப்பு நடத்திய நவம்பர் 7 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உரையாற்றியுள்ளார். நெருங்கிவரும் காவிப் பாசிசத்தை முறியடிக்க இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். தோழர். நந்தலாலா மறைந்து விட்டார். அவருக்கு எமது அமைப்பின் சார்பில் அஞ்சலியையும், அவரது மறைவால் வாடும் தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
@@@
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு, உழைக்கும் மூத்த இதழியலாளர்.

“காணி நிலம்”

நந்தலாலா…

நிரந்தரமாகக்

கண் மூடி விட்டார்.

தனது

சிந்தனையையும்

எவருக்கும்

வலிக்காமல்

வாழைப்

பழத்தில்

ஊசி ஏற்றுவது

போல

எள்ளலுடன்

உரையாற்றி

எல்லோரையும்

ஈர்த்தவர்

தனது

உரை

வீச்சினையும்

தனது

உரையாடல்களையும்

நிரந்தரமாக

நிறுத்திக் கொண்டார்.

திருச்சி

கருமண்டபம்

அருகே

திருநகரில்

ஒரு தெருவில்

உள்ள

அவரது

வீட்டுக்கு

“காணி நிலம்”

என்று தான்

பெயர்.

தோழமை

வணக்கம்…

தோழர்

நந்தலாலா

அவர்களுக்கு…

@@@

தஞ்சை இனியன் 

நந்தலாலா என்றொரு மானுடன்
“நான் திராவிட இயக்கத்தவன் என்று சொல்கிறார்கள்!
நான் திராவிட இயக்கத்தவன் அல்ல!
நான் கம்யூனிஸ்ட் என்கிறார்கள்!
நான் கம்யூனிஸ்ட்டும் அல்ல!
பிறகு நான் யார்?
நான் ஒரு மானுடன்”
என்று உரக்கச் சொன்னவர் மானுடர் நந்தலாலா!
என் மீது பேரன்பும் என் மேடைக்கவிதைகள் மீது தீராக் காதலும் கொண்ட நந்தலாலா இன்று பிரிந்துவிட்டார். இரு வாரங்களுக்கு முன் ஓசூர் நாராயணா மிஷன் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்த கவிஞர் நெல்லை ஜெயந்தா “ஓரிரு மாதங்களில் நலம்பெற்று வந்துவிடுவார்” என்று நம்பிக்கையோடு சொன்னார். ஆனால் அது நடக்கவில்லை!
மேடையில் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் பேசுவார் என்று சொல்லப்படுகிற பல பேச்சாளர்கள், எந்தக் கொள்கை நிலைப்பாடும் இன்றி நேற்று பேசியதற்கு முரணாக இன்று பேசுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அதை தன்னுடைய கொள்கைக்குள் கொண்டுவந்து மக்களிடம் கடத்திவிடுகிற மகத்தான சொற்கலைஞர் நந்தலாலா. அவர் இலக்கியம் பேசினாலும் ஆன்மீகம் பேசினாலும் அரசியல், சுயமுன்னேற்றம் என எந்த மேடையாக இருந்தாலும் முற்போக்கையும் சமத்துவத்தையும் மதச்சார்பின்மையும் முன்வைக்காமல் இருந்ததில்லை!
அவருடைய நகைச்சுவைகள் கூட மூடத்தனங்களுக்கு எதிரானதாகவும் மனிதர்களைத் தூக்கிப் பிடிப்பனவாகவும்தான் இருக்கும். மதவெறியைத் தன் தமிழின் முழுபலத்தோடு எதிர்த்து நின்றவர். அவருடைய எந்த மேடைப்பேச்சும் மதவெறிக்கு எதிராக ஒரு கருத்தை வைக்காமல் நிறைவுபெறாது.
சமீபத்தில் நடந்த திருச்சி புத்தகக் கண்காட்சி பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமான புத்தகக் காட்சி என்று பதிவுசெய்திருக்கிறேன்… சிறார்களுக்குத் தனி அரங்கம், மாலை நிகழ்ச்சி என்பது உள்ளூர் அறிஞர்களைக் கௌரவித்தல், அடுத்து இளைய பேச்சாளருக்கு நேரம் அதன்பின்பே சிறப்புச் சொற்பொழிவு என்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு நாள் அரங்கிற்கும் அவ்வை, வேலுநாச்சியார்,ராஜம்கிருஷ்ணன் எனத் தமிழ்ப் பெண் ஆளுமையின் பெயர்கள் என வித்தியாசமாக இருந்தது. ஒருநாள் கவிதை நிகழ்வுக்குச் சென்றபோதுதான் தெரிந்தது எல்லாம் நந்தலாலாவின் யோசனைகள்தான் என்று. ஒரு படைப்பாளி சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரையும் பாராட்ட வேண்டும்.
வெளிவரும் எல்லா நூல்களையும் படித்து தன்னை நிறைவாக்கிக் கொண்டே இருப்பார். அவர் எழுதிய ‘ஊறும் வரலாறு’ என்ற நூல் அவருக்கு மிகப்பெரிய வாசகப் பரப்பை உண்டாக்கித் தந்தது. அவர் நடத்திவந்த “வயல்” அமைப்பு பலநூறு இளங்கவிஞர்களை உருவாக்கியது. பாரதியின் மீது அலாதி பிரியம். அவர் நந்தலாலா.. அவர் வீட்டின் பெயர் காணிநிலம்.
பேச்சாளன் என்பவன் நல்லதண்ணி கிணறு போன்றவன்.. இறைக்கிற பாத்திரத்தையோ இறைக்கிற மனிதர்களையோ பார்க்காமல் எல்லோருக்கும் நல்லதண்ணியை சுரந்து தந்துகொண்டே இருக்கவேண்டும்… ஒருவருக்கு உப்புத்தண்ணி ஒருவருக்கு நல்லதண்ணி என்று கிணறு பேதம் பார்க்காது.
ஒரு நல்லதண்ணி கிணறு தூர்ந்துபோய் விட்டது!
@@@

தோழர் புலியூர் 

தோழர் நந்தலாலா அவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி.
பாரதி மார்க்ஸ் முதன்முறை நீட் தேர்வெழுதிய போது, 10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாய்ப்பு நழுவிப் போனது. அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், வருடத்திற்கு 8 லட்சம் கட்ட வேண்டும் என்ற நிலையில், தோழர் நந்தலாலாவை அணுகினேன். அவர் பல இடங்களிலும் தொடர்பு கொண்டு உதவிக்கு முயற்சித்தார். இறுதியாக, தஞ்சை தி.மு க.சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஆண்டுக்கு தலா 2 லட்சம் வீதம், வருடம் 4 லட்சம் உதவி கிடைக்க உத்தரவாதம் ஏற்படுத்தினார்.
மீதி 4 லட்சம் புரட்டத் தடுமாற்றமாக இருக்கும் என்ற போது ‘புலி! பாரதியை மீண்டும் நீட் எழுதச் சொல்லுங்க.  நிச்சயம் அரசு கல்லூரியிலேயே அடுத்த வருடம் இடம் கிடைத்து விடும்’ என்றார். அதன்படியே, அடுத்த வருடம் பாரதி மார்க்ஸுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. தோழரிடம் இச்செய்தியைச் சொன்னபோது அவ்வளவு மகிழ்ந்தார். இதோ! பாரதி இந்த ஆண்டு மருத்துவக் கல்வி முடிக்கப் போகிறான். பட்டம் வாங்கிய கையோடு, நேரில் உங்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற நினைத்திருந்தேனே தோழர்!..

@@@

திருச்சி கரிகாலன் அச்சகம் 

அன்புள்ள தோழ ( அண்ண ) னே !

நந்தலாலா….

இலக்கிய வானில் சிறகடித்த நீ
வானில் சிறகடிக்க சென்று விட்டாய் !

நீ வீசிய க(விதைகளில் ) முளைத்த
செடிகளில் நானும் ஒருவன்

உன் இதயம் இயங்கவில்லை என்கிறார்கள்
எங்கள் இதயங்களில் நீ
ஓடிக்கொண்டு தான் இருக்கிறாய் ( நினைவாக )

.. இடிந்த இதயத்துடன்..
கலங்கிய கண்களுடன்…

திருச்சி கரிகாலன் அச்சகம் 

இறுதி நிகழ்வுகள் மார்ச் 6ஆம் தேதி பகலில் நடைபெறும்

—–நாடறிந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் நந்தலாலா (70), உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4ஆம் தேதி) காலை இயற்கை எய்தினார்.இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நந்தலாலாவின் இயற்பெயர் நெடுஞ்செழியன். பாரதியார் மீது கொண்ட தீராப்பற்றின் காரணமாக தனது பெயரை ‘நந்தலாலா’ என வைத்துக் கொண்டார்.திருச்சியில் 1990-களில் அவர் ஒருங்கிணைத்த ‘சோலைக்குயில்’ என்ற பத்திரிகையும், அமைப்பும் ஏராளமான இலக்கியவாதிகளை உருவாக்கியது.

பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிக் கருத்தியலை மேடைதோறும், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் எடுத்துச் சென்றவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.

நந்தலாலாவுக்கு மனைவி ஜெயந்தி, மகள்கள் பாரதி, நிவேதிதா ஆகியோர் உள்ளனர்.

பெங்களூருவில் இருந்து அவரது உடல், (புதன்கிழமை) அதிகாலை திருச்சி வந்தடையும். திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகர், திருநகர் 3ஆவது பிரதான வீதியிலுள்ள அவரது இல்லமான ‘காணி நிலத்தில்’ உறவினர்கள் மற்றும் தோழர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

வரும் மார்ச் 6ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி, 12 முதல் ஒரு மணிக்குள் ஓயாமாரி எரிவாயு மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

திருச்சியின் காத்திரமான இலக்கிய அமைப்பாக ‘களம்’ உருவாவதற்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தாளர் ஞாநியுடன் ஆலோசகராக இருந்து தொடர்ந்து வழிகாட்டி வந்த நந்தலாலாவின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை களம் பதிவு செய்கிறது.

-களம் அமைப்பு

@@@

கவிஞர் நந்தலாலாவின்
மறைவால்
இலக்கிய வட்டத்தில்
ஓர் இருள் விழுந்துவிட்டது
சமூகத்தின் வெளிவட்டத்தால்
அதிகம் அறியப்படாதவரும்
உள்வட்டத்தில்
கொண்டாடப்பட்டவருமான நந்தலாலா,
பகுத்தறிவாளர் முற்போக்காளர் சிந்தனையாளர்
சிறந்த பேச்சாளர்,
இத்தனை கலவைகளோடு
ஓர் இலக்கியவாதி
அமைவது அரிது
ஒரு தனிமனிதனின் மரணம்
வனாந்தரத்தில்
ஓர் இலை விழுவது போன்றது
ஓர் இலக்கியவாதியின் மரணம்
ஆலமரத்தில்
கிளை விழுவது போன்றது
என் நண்பரை இழந்து
நலிவடைகிறேன்
குடும்பத்தார்க்கும்
இலக்கிய அன்பர்களுக்கும்
என் இதய இரங்கல்
இனி திருச்சியைக்
கடக்கும்போதெல்லாம்
அவர் நினைவு
என் நெஞ்சைச் சுடும்
-கவிப்பேரரசு வைரமுத்து.

மேடையின் நிகழ்வறிந்து, பார்வையாளர் தன்மை புரிந்து, தனது தனித்துவத்துடன் சரியான உரை வழங்கும் சிறந்த பேச்சாளர், கவிஞர் நந்தலாலா அவர்கள்.
2000ம் ஆண்டில் ஒரு சமையல்கலைக் கல்லூரியில், சிலி நாட்டில் இருந்து சில்லி வந்தது என அவர் பேசிய நிகழ்வில் முதலில் அவரைப் பார்த்தேன்
அதன் பின் பல கலை இரவு நிகழ்வுகளில் சந்தித்துள்ளேன்.
2018ல் அவரும் நானும் ஒரு கல்லூரி நிகழ்வில் பேசினோம், மாணவர்களுக்கு ஆங்கிலமும் அவசியம் என சொல்லுங்கள் கபிலன் என பேச சொன்னார், அதன் பின் பேசியவர், கபிலன் கூறியது போல என அவரது ஆகச்சிறந்த அறிவுரைகளை வழிகாட்டுதலாகவும் நகைச்சுவையாகவும் திறம்பட பேசினார்.
சக பேச்சாளர்களை ஊக்குவிக்கும் அற்புத மனிதர். 2020முதல் அவ்வபோது பேசிக்கொள்வோம்
திருச்சி-ஊறும் வரலாறு என்ற அவரது புத்தகத்தை என் இல்லம் வழி செல்லும்பொழுது எனக்காக தந்துவிட்டுச் சென்றார்.
எனது நிறுவனத்தின் 4ம் ஆண்டுவிழாவிற்கு வாழ்த்துகள் ஒலிவடிவில் அனுப்பி, என்னை மகிழ்வித்தார். அதிலும் எனது வலையொளி குறுந்தகவல் காணொளிகளை பாராட்டிச் சொன்னது அவரது ரசனைக்கும் பெருந்தன்மைக்கும் ஆகச் சிறந்த எடுத்துக் காட்டாக நான் அறிந்தேன்.
என் இல்லத்திற்கு அருகில் உள்ள பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர், உங்கள் பள்ளியின் பின்புறமே; கபிலன் என்ற ஒரு நல்ல பேச்சாளர் இருக்கிறார் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார்.
எவ்வளவு எளிமை, எப்பேற்பட்ட பெருந்தன்மை, எப்படியெல்லாம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்…
சட்டென பேரதிர்ச்சியாய் ஐயா நந்தலாலாவின் மறைவுச் செய்தி வந்தது….
வருத்தமுடன் நானும்
தமிழூர். கபிலன் (KIT Kapilan)
1 Comment
  1. Nedunchezhian T says

    நல்ல தொகுப்பு. நன்றி

Leave A Reply

Your email address will not be published.