சமையல் குறிப்பு- நவதானிய லட்டு.
விடுமுறை நாட்களில் உங்களின் குழந்தைகள் விளையாடிவிட்டு பசியுடன் சாப்பிட ஏதாவது கேட்கும் போது நீங்கள் அவர்களுக்கு ஏதேனும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்போ அவர்களுக்கு நீங்கள் நவதானிய லட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள், இதன் சுவையும் வேற லெவலாக இருக்கும். எனவே அடுத்த முறை விடுமுறை நாட்களில் உங்களின் குழந்தைகளுக்கு நவதானிய லட்டு செய்து அசத்துங்கள்! தற்போது இது எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
துருவிய தேங்காய் 250 கிராம், 5 ஏலக்காய், சூரியகாந்தி விதை 50 கிராம், முந்திரி 50 கிராம், வேர்க்கடலை 100 கிராம், பொட்டுக்கடலை 50 கிராம், கருப்பு எள் 50 கிராம், நெய் தேவையான அளவு, நாட்டு சர்க்கரை 200 கிராம்.
செய்முறை:-
முதலில் ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வருத்தி எடுக்கவும். பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும், அதன் பின் ஒன்றன்பின் ஒன்றாக (தனித்தனியாக) சூரியகாந்தி விதை, முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் அனைத்தையும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். பின் அவை அனைத்தையும் சூடு ஆறும் வரை விட்டு, பிறகு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும், அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி அரைத்த நட்ஸ்மிக்ஸ் மற்றும் வறுத்து வைத்த தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும். அதன் பின் பொடித்து வைத்த ஏலக்காய் பொடி நாட்டு சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் வரை நன்கு கிளறவும் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்கு வதக்கிய பின்பு அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின் 10 நிமிடம் கழித்து கை தாங்கும் சூடு இருக்கும் பொழுது நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்தால் சுவையான உடம்பிற்கு ஆரோக்கியமான நவதானிய லட்டு தயார். குறிப்பாக இதனை ஒரு வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம்.சுவை நன்றாக இருக்கும்.
— பா. பத்மாவதி